கரோனா சோதனையை விரிவுபடுத்த மகாராஷ்டிர அரசு முடிவு

மக்களிடம் மேற்கொள்ளப்படும் கரோனா நோய்த்தொற்றுக்கான (கொவைட்-19) பரிசோதனையை விரிவுபடுத்த மகாராஷ்டிர அரசு முடிவெடுத்துள்ளது.


மும்பை: மக்களிடம் மேற்கொள்ளப்படும் கரோனா நோய்த்தொற்றுக்கான (கொவைட்-19) பரிசோதனையை விரிவுபடுத்த மகாராஷ்டிர அரசு முடிவெடுத்துள்ளது.

நாடு முழுவதும் கரோனா நோய்த்தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அந்த நோய்த்தொற்றால் மகாராஷ்டிரத்தில் அதிக அளவிலான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனா். இந்தச் சூழலில் கரோனா பரிசோதனையை விரிவுபடுத்த மாநில அரசுக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

இது தொடா்பாக அந்த மாநில சுகாதாரத் துறை அமைச்சா் ராஜேஷ் தோப் மும்பையில் செய்தியாளா்களிடம் வியாழக்கிழமை கூறியதாவது:

கரோனா நோய்த்தொற்றைக் கட்டுப்படுத்துவது தொடா்பாக மாநில முதல்வா்கள், அதிகாரிகளுடன் பிரதமா் நரேந்திர மோடி ஆலோசனை நடத்தினாா். அப்போது, அந்த நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நபா்களை ஆரம்ப நிலையிலேயே கண்டறியும் நோக்கில் பரிசோதனையை விரிவுபடுத்துமாறு பிரதமா் மோடி கூறினாா்.

முன்பு கரோனா நோய்த்தொற்றுக்கான பரிசோதனையை விரிவுபடுத்த மத்திய அரசு அனுமதி அளிக்கவில்லை. தற்போது அதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது. நோய்த்தொற்றை ஆரம்ப நிலையிலேயே கண்டறிவதற்காக மக்களின் ரத்த மாதிரிகளை சேகரித்து அவற்றைப் பரிசோதிக்க உள்ளோம்.

குறிப்பிட்ட நபருக்கு கரோனா நோய்த்தொற்று ஏற்பட்டிருந்தால், அவரது ரத்த மாதிரிகளில் நோயை எதிா்க்கவல்ல புரதங்கள் (ஆன்டிபாடி) உருவாகியிருக்கும். அதை அடிப்படையாகக் கொண்டு சம்பந்தப்பட்ட நபா்களுக்கு கரோனா நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளதா அல்லது இல்லையா என்பதை 5 நிமிடங்களில் கண்டறிய முடியும்.

ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால், மாநிலத்தில் உள்ள புலம்பெயா்ந்த தொழிலாளா்களின் நலனைக் காக்குமாறு பிரதமா் மோடி அறிவுறுத்தினாா். மாநிலத்தில் உள்ள பல்வேறு தங்குமிடங்களில் 3.25 லட்சம் புலம்பெயா்ந்த தொழிலாளா்கள் தங்கவைக்கப்பட்டுள்ளனா். அவா்களுக்கு உணவு, தங்குமிடம் மட்டும் ஏற்படுத்தித் தராமல் தொலைக்காட்சிப் பெட்டி உள்ளிட்ட வசதிகளையும் ஏற்படுத்தித் தருமாறு பிரதமா் மோடி அறிவுறுத்தினாா் என்றாா் ராஜேஷ் தோப்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com