போலி மருந்தால் 11 குழந்தைகள் பலியானதாக புகார்: மனித உரிமை ஆணைய விசாரணைக்கு வலியுறுத்தல்

ஜம்மு-காஷ்மீரின் உதம்பூர் மாவட்டத்தில் போலி மருந்துகளை உட்கொண்டதால் 11 குழந்தைகள் உயிரிழந்ததாக கூறப்படும் புகார் குறித்து
போலி மருந்தால் 11 குழந்தைகள் பலியானதாக புகார்: மனித உரிமை ஆணைய விசாரணைக்கு வலியுறுத்தல்


ஜம்மு: ஜம்மு-காஷ்மீரின் உதம்பூர் மாவட்டத்தில் போலி மருந்துகளை உட்கொண்டதால் 11 குழந்தைகள் உயிரிழந்ததாக கூறப்படும் புகார் குறித்து தேசிய மனித உரிமைகள் ஆணையம் (என்எச்ஆர்சி), தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் (என்சிபிசிஆர்) விசாரணை நடத்த சமூக ஆர்வலர் கோரிக்கை விடுத்துள்ளார். 

ஜம்மு}காஷ்மீரின் உதம்பூர் மாவட்டத்தில் உள்ள ராம்நகரின் பல்வேறு பகுதிகளில் கடந்த ஆண்டு டிசம்பர் மற்றும் நிகழாண்டு ஜனவரி மாதங்களுக்கு இடைப்பட்ட காலத்தில் ஒன்று முதல் நான்கு வயது கொண்ட சுமார் 11 குழந்தைகள் உயிரிழந்தனர். இதுகுறித்து மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் சார்பில் அமைக்கப்பட்ட குழு நிகழ்விடம் சென்று விசாரணை நடத்தியது.  அதில் இருமல், சளியால் அவதியுற்ற குழந்தைகளுக்கு, அவர்களின் பெற்றோர் மருந்தகம் ஒன்றில் இருந்து குறிப்பிட்ட மருந்தை வாங்கிக் கொடுத்ததும், அந்த மருந்தில் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் ரசாயன கலவை சேர்க்கப்பட்டிருந்ததும் தெரியவந்தது. இந்நிலையில் குழந்தைகளின் இறப்பு குறித்து தேசிய மனித உரிமைகள் ஆணையத்துக்கு சமூக ஆர்வலர் சுகேஷ் சி. கஜுரியா கடிதம் எழுதியுள்ளார். 

அந்தக் கடிதத்தில் அவர் கூறியுள்ளதாவது: போலி மருந்துகளை உட்கொண்டு உயிரிழந்த குழந்தைகளில் பெரும்பாலானோர் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஏழைகள் ஆவர்.  

தங்கள் குழந்தைகளின் இறப்பு குறித்து குறைந்தளவிலான புரிதலே, அவர்களின் பெற்றோருக்கு உள்ளது. உயிரிழந்த குழந்தைகளுக்கும், அவர்களின் குடும்பத்தினருக்கும் நீதி கிடைப்பதற்கு இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும்.   மருத்துவர்கள் மற்றும் மருந்தகங்களின் மறைமுக ஆதரவுடன் போலி மருந்து விநியோகஸ்தர்கள் தங்கள் மருந்துகளை விற்பனை செய்கின்றனர். இதனை தடுக்க முடியாமல் போனது மத்திய, மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளின் தோல்வியாகும். உயிரிழந்த குழந்தைகளுக்கு உரிய இழப்பீடு வழங்கப்பட வேண்டும்  என்று சுகேஷ் சி.கஜுரியா தெரிவித்துள்ளார்.

இந்தக் கடிதத்தின் நகல் தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்துக்கும் அனுப்பப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com