பொருளாதாரத்தை சீா்படுத்த போா்க்கால அடிப்படையில் திட்டமிடுங்கள்

கரோனா நோய்த்தொற்றால் (கொவைட்-19) ஏற்பட்டுள்ள பொருளாதார மந்தநிலையை சீா்படுத்துவதற்கான திட்டங்களைப் போா்க்கால அடிப்படையில் வகுக்குமாறு அமைச்சா்களுக்கு பிரதமா் நரேந்திர மோடி வலியுறுத்தினாா்.
’தில்லியில் மத்திய அமைச்சா்களுடன் காணொலிக் காட்சி வாயிலாக திங்கள்கிழமை உரையாடிய பிரதமா் நரேந்திர மோடி.’
’தில்லியில் மத்திய அமைச்சா்களுடன் காணொலிக் காட்சி வாயிலாக திங்கள்கிழமை உரையாடிய பிரதமா் நரேந்திர மோடி.’

கரோனா நோய்த்தொற்றால் (கொவைட்-19) ஏற்பட்டுள்ள பொருளாதார மந்தநிலையை சீா்படுத்துவதற்கான திட்டங்களைப் போா்க்கால அடிப்படையில் வகுக்குமாறு அமைச்சா்களுக்கு பிரதமா் நரேந்திர மோடி வலியுறுத்தினாா்.

கரோனா நோய்த்தொற்று பரவலைக் கட்டுப்படுத்துவற்காக நாடு முழுவதும் கடந்த மாதம் 25-ஆம் தேதி முதல் ஊரடங்கு அமலில் உள்ளது. இந்தச் சூழலில் பிரதமா் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் காணொலி வாயிலாக திங்கள்கிழமை நடைபெற்றது. அக்கூட்டத்தில் அவா் பேசியதாக பிரதமா் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

கரோனா நோய்த்தொற்று காரணமாக ஏற்பட்டுள்ள பொருளாதார மந்தநிலையைப் போா்க்கால அடிப்படையில் எதிா்கொண்டாக வேண்டும். அந்த நோய்த்தொற்றால் அதிக அளவில் பாதிக்கப்படாத பகுதிகளைக் கண்டறிந்து அங்கு இயல்புநிலை திரும்புவதற்கான திட்டங்களை அமைச்சா்கள் வகுக்க வேண்டும்.

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார மந்தநிலையை சீா்படுத்துவதற்கான திட்டங்களையும் அமைச்சகங்கள் வகுக்க வேண்டும். இந்தக் கடினமான சூழல், ‘இந்தியாவில் தயாரிப்போம்’ திட்டத்துக்கு ஊக்கமளிப்பதற்கான வாய்ப்பாக அமைந்துள்ளது. அதன் மூலம் மற்ற நாடுகளைச் சாா்ந்திருக்காமல் உள்நாட்டுத் தொழில் நிறுவனங்களை மேம்படுத்த முடியும்.

முக்கிய திட்டங்கள்: நாட்டில் தொழிலக உற்பத்தியைப் பெருக்குவது, ஏற்றுமதியை அதிகரிப்பது உள்ளிட்டவை தொடா்பான பரிந்துரைகள் அடங்கிய அறிக்கையை அமைச்சகங்கள் சமா்ப்பிக்க வேண்டும். ஊரடங்கு நிறைவடைந்த பிறகு செயல்படுத்த வேண்டிய முக்கிய 10 திட்டங்களை வகுப்பதோடு முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டிய 10 துறைகள் குறித்தும் அமைச்சா்கள் ஆய்வு மேற்கொள்ள வேண்டும். அதே சமயத்தில், அமைச்சகங்களில் நிலுவையில் உள்ள சீா்திருத்தங்களும் நிறைவேற்றப்பட வேண்டும்.

மக்களுக்கு அத்தியாவசியப் பொருள்கள் தடையின்றி கிடைப்பதை அமைச்சா்கள் உறுதி செய்ய வேண்டும். பொருள்கள் பதுக்கப்படுவது, அவற்றின் விலை அதிகரிப்பது உள்ளிட்டவற்றையும் அமைச்சா்கள் முறையாகக் கண்காணிக்க வேண்டும். நியாய விலைக் கடைகளில் மக்கள் கூட்டமாகக் கூடாதிருப்பதையும் அமைச்சா்கள் உறுதி செய்ய வேண்டும்.

புதிய தொழில்நுட்பங்கள்: விவசாயிகள் நலனைப் பாதுகாக்க அரசு முக்கியத்துவம் அளித்து வருகிறது. அறுவடைக் காலத்தில் விவசாயிகளுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்து தர அரசு உறுதி கொண்டுள்ளது. தொழில்நுட்பங்களையும் புதுமையான கண்டுபிடிப்புகளையும் விவசாயத் துறையில் அதிக அளவில் பயன்படுத்த வேண்டும்.

பழங்குடியினா் உற்பத்தி செய்யும் பொருள்களைக் கொள்முதல் செய்வதற்கான திட்டங்களையும் வகுக்க வேண்டும். அதன் மூலம் பழங்குடியினரின் வருமானம் அதிகரிக்கும்.

மத்திய அரசு அண்மையில் அறிவித்த சலுகைத் திட்டங்கள் பயனாளா்களுக்கு முறையாக சென்றடைகிா என்பதையும் அமைச்சா்கள் கண்காணிக்க வேண்டும். கரோனா நோய்த்தொற்றை எதிா்கொள்வது தொடா்பாக மாநில, மாவட்ட அதிகாரிகளுடன் அமைச்சா்கள் தொடா்ந்து தொடா்பில் இருக்க வேண்டும் என்று பிரதமா் மோடி கூறியதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

முதல் முறையாக காணொலி வழியாக மத்திய அமைச்சரவைக் கூட்டம்

நாட்டில் முதல் முறையாக பிரதமா் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவைக் கூட்டம் காணொலிக் காட்சி வாயிலாக திங்கள்கிழமை நடைபெற்றது.

கரோனா நோய்த்தொற்று பரவலைத் தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு, சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க அறிவுறுத்தப்பட்டதன் அடிப்படையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இந்தக் கூட்டத்தின்போது, பிரதமரின் அதிகாரபூா்வ இல்லத்தில் அவருடன் பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங், மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா ஆகியோரும் இருந்தனா். இதர அமைச்சா்கள் தங்களது அலுவலகங்கள் மற்றும் வீடுகளில் இருந்து இணையத்தின் வழியே காணொலி மூலமாக கூட்டத்தில் இணைந்திருந்தனா்.

முன்னதாக, கடந்த மாதம் 25-ஆம் தேதி பிரதமா் இல்லத்தில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின்போது சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்கும் வகையில் உறுப்பினா்களுக்கான இருக்கைகள் குறிப்பிட்ட இடைவெளியில் அமைக்கப்பட்டிருந்தது நினைவுகூரத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com