மேலும் ஓரிரு வாரங்கள் ஊரடங்கை நீட்டிக்கலாம்: டிடிவி தினகரன்

கரோனாவில் இருந்து தமிழக மக்களை முழுமையாகக் காப்பாற்ற, தேவைப்பட்டால் ஏப்ரல் 14க்குப் பிறகு மேலும் ஓரிரு வாரங்களுக்கு ஊரடங்கை நீட்டிக்கலாம் என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்

கரோனாவில் இருந்து தமிழக மக்களை முழுமையாகக் காப்பாற்ற, தேவைப்பட்டால் ஏப்ரல் 14க்குப் பிறகு மேலும் ஓரிரு வாரங்களுக்கு ஊரடங்கை நீட்டிக்கலாம் என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், 

'கரோனா பெருந்தொற்று நோய் பாதிப்பில் தமிழ்நாடு இந்திய அளவில் இரண்டாமிடத்தில் இருப்பது கவலையளிக்கிறது. இதனால் நாம் அனைவரும் இணைந்து முழுவீச்சில் கரோனாவை எதிர்த்துப் போரிட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது.

இதில் அடுத்த இரண்டு வாரங்கள் இன்னும் சவால் நிறைந்ததாக இருக்கும் என வல்லுநர்கள் எச்சரித்து வருகின்றனர். மக்களை முழுமையாக காப்பாற்ற, தேவைப்பட்டால் ஏப்ரல் 14க்குப் பிறகு மேலும் ஓரிரு வாரங்களுக்கு ஊரடங்கை நீட்டிக்கலாம். 

ஆனால் அப்படி அமல்படுத்துவதற்கு முன்பாக தமிழக அரசு கரோனா பரிசோதனை மற்றும் சிகிச்சையிலும், மக்களின் வாழ்வாதாரத்திற்கான ஏற்பாடுகளைச் சரியான திட்டமிடுதலோடு செய்வதிலும் உரிய கவனம் செலுத்த வேண்டும்.

மேலும், சென்னை போன்ற இடங்களில் இப்போது வெறுமனே வீடு, வீடாகச்  சென்று கரோனா பாதிப்பு இருக்கிறதா என்று கேட்டு விட்டு கையெழுத்து வாங்குவதற்குப் பதிலாக, கரோனா பாதிப்பை அரை மணி நேரத்தில் கண்டறியும் உபகரணம் வந்தபிறகு இந்த ஆய்வினை மேற்கொண்டால் சந்தேகப்படுபவரை அதே இடத்தில் சோதிக்க முடியும். 

தொடக்கத்தில் இருந்தே மிகுந்த அர்ப்பணிப்பு உணர்வோடு களத்தில் நின்று பணியாற்றி வரும் மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவப்பணியாளர்கள் உள்ளிட்டோருக்கு போதுமான கவச உடைகளும், பாதுகாப்பு உபகரணங்களும் இல்லை என்ற செய்திகள் தொடர்ந்து வந்துகொண்டிருக்கின்றன. கரோனா யுத்தத்தில் போர் வீரர்களைப் போல மக்களைக் காப்பாற்றி வரும் அவர்களைக் கூடுதல் கவனம் செலுத்தி காத்திட வேண்டிய கடமை தங்களுக்கு இருப்பதை மத்திய, மாநில அரசுகள் மறந்திடக் கூடாது.

பரிசோதனை மற்றும் சிகிச்சைக்கு அளிக்கப்படும் முக்கியத்துவத்திற்கு இணையாக ஊரடங்கினால் கடுமையான பாதிப்புக்கு ஆளாகியிருக்கும் ஏழை மற்றும் நடுத்தர மக்களின் வாழ்வாதாரத்தையும் அரசு உறுதி செய்ய வேண்டும். 10 நாட்களைக் கடப்பதற்குள்ளாகவே அவர்கள் படாதபாடுபட்டு வருகிறார்கள். 

அரசு அறிவித்த ரூ.1000 உதவித்தொகை இன்னும் முழுமையாக சென்றடையாத நிலையில், ஊரடங்கை நீட்டிக்கும் போது குறைந்தபட்சம் அவர்களுக்கு உணவு கிடைப்பதற்கான ஏற்பாட்டினை திட்டமிட்டு செய்ய வேண்டும். இந்த நேரத்தில் நடமாடும் அம்மா உணவகங்களைச் செயல்படுத்துவது மக்களுக்குப் பேருதவியாக இருக்கும். இவற்றை எல்லாம் நடைமுறைபடுத்துவதற்கு அரசு எந்திரத்தின் ஒருங்கிணைந்த செயல்பாடு மிக முக்கியமானது' என்று அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com