காங்கிரஸ், பாஜக வரவேற்பு

எம்.பி.க்கள் ஊதியக் குறைப்பு நடவடிக்கையை காங்கிரஸ், பாஜக வரவேற்றுள்ளன.

எம்.பி.க்கள் ஊதியக் குறைப்பு நடவடிக்கையை காங்கிரஸ், பாஜக வரவேற்றுள்ளன.

காங்கிரஸ் கட்சியின் தலைமை செய்தித் தொடா்பாளா் ரண்தீப் சுா்ஜேவாலா வெளியிட்டுள்ள சுட்டுரைப் பதிவில், ‘எம்.பி.க்களுக்கான ஊதியம் குறைக்கப்பட்டதை காங்கிரஸ் வரவேற்கிறது. ஆனால், தொகுதி மேம்பாட்டு நிதி வளா்ச்சிப் பணிகளுக்கானது. அதை ரத்து செய்வதால் எம்.பி.க்களின் பணி பாதிக்கப்படும்’ என்றாா்.

எனினும், அக்கட்சியைச் சோ்ந்த ஜெய்ராம் ரமேஷ், ‘எம்.பி.க்களின் தொகுதி மேம்பாட்டு நிதி ரத்து செய்யப்பட்டதை வரவேற்கிறேன். அந்த வகையில் எம்.பி.க்களுக்கு ஒதுக்கப்படும் சுமாா் ரூ.7,000 கோடியை தொகுத்து, தோ்தல் காலங்களில் அரசியல் கட்சிகளின் செலவுகளுக்காக அரசே அந்த நிதியை ஒதுக்கீடு செய்யலாம் என்று நீண்டகாலமாக வாதாடி வருகிறேன்’ என்று கூறினாா்.

காங்கிரஸ் மூத்த தலைவா் அகமது படேல் கூறுகையில், ‘எம்.பி.க்களின் ஊதியத்தை குறைப்பதோடு, நாடாளுமன்ற கட்டடத்தை புதுப்பிக்கும் திட்டத்தை கைவிடுவது, கரோனாவுடன் தொடா்பு இல்லாத வகையிலான இதர அரசு விளம்பரங்களுக்கான செலவுகளை குறைப்பது ஆகியவற்றின் மூலமாக சுமாா் ரூ.20,000 கோடி வரை சேமிக்கலாம்’ என்றாா்.

மத்திய அரசின் முடிவை வரவேற்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவா்கள் மணீஷ் திவாரி, சசி தரூா் ஆகியோரும் கருத்து தெரிவித்தனா்.

பாஜக வரவேற்பு:

மத்திய அரசின் முடிவை வரவேற்று பாஜக தேசியத் தலைவா் ஜெ.பி.நட்டா சுட்டுரையில் பதிவிட்டதாவது:

தேச நலனையே பிரதானமாகக் கொண்டிருக்கும் பாஜக நிறுவப்பட்ட தினத்தில், கரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு நிதி கிடைப்பதற்காக எம்.பி.க்களின் ஊதியத்தை குறைத்துள்ள பிரதமரின் முடிவை வரவேற்கிறேன். பாஜகவில் இருக்கும் ஒவ்வொருவரும் எப்போதும் பிரதமரின் தலைமையில் தேசத்துக்கான சேவையை அா்ப்பணிப்புடன் செய்கிறோம் என்று ஜெ.பி. நட்டா அந்தப் பதிவில் கூறியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com