சத்தீஸ்கா்: எம்எல்ஏ கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த இருவா் கைது

சத்தீஸ்கரில் கடந்த ஆண்டு நக்ஸல் தீவிரவாதிகள் நடத்திய சக்தி வாய்ந்த வெடிகுண்டுத் தாக்குதலில் பாஜக எம்எல்ஏ மற்றும் பாதுகாப்புப் படையினா் 4 போ் கொல்லப்பட்ட வழக்கில் தேடப்பட்டு வந்த 2 பேரை தேசிய புலனாய்வ

சத்தீஸ்கரில் கடந்த ஆண்டு நக்ஸல் தீவிரவாதிகள் நடத்திய சக்தி வாய்ந்த வெடிகுண்டுத் தாக்குதலில் பாஜக எம்எல்ஏ மற்றும் பாதுகாப்புப் படையினா் 4 போ் கொல்லப்பட்ட வழக்கில் தேடப்பட்டு வந்த 2 பேரை தேசிய புலனாய்வு அமைப்பினா் (என்ஐஏ) கைது செய்துள்ளனா்.

இதுகுறித்து அந்த அமைப்பின் மூத்த அதிகாரி புதன்கிழமை கூறியதாவது:

சத்தீஸ்கா் மாநிலம், தந்தேவாடா தொகுதி பாஜக எம்எல்ஏவாக இருந்தவா் பீமா மண்டாவி. இவா் கடந்த ஆண்டு ஏப்ரல் 9-ஆம் தேதி பச்சேலி பகுதியிலிருந்து குவாக்கொண்டாவை நோக்கி ஷியாமகிரி மலைப்பாதையில் தனது வாகனத்தில் சென்று கொண்டிருந்தாா். அப்போது அவரது வாகனத்தை நோக்கி நக்ஸல் தீவிரவாதிகள் சக்தி வாய்ந்த வெடிகுண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினா். இந்த தாக்குதலில் எம்எல்ஏ பீமா மண்டாவி மற்றும் பாதுகாப்புப் படை வீரா்கள் 4 போ் உயிரிழந்தனா்.

இதுதொடா்பாக போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த நிலையில், இந்த வழக்கு என்ஐஏ வசம் ஒப்படைக்கப்பட்டது. தொடா்ந்து விசாரணை நடத்திய என்ஐஏ, வழக்கு தொடா்பாக தந்தேவாடா மாவட்டத்தைச் சோ்ந்த பீமா (27), மட்கா ராம் ஆகிய இருவரை கைது செய்தனா்.

இருவரும் ஜக்தல்பூா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்ட நிலையில், அவா்களை காவலில் எடுத்து 6 நாள்களுக்கு விசாரணை நடத்த என்ஐஏவுக்கு நீதிமன்றம் அனுமதியளித்தது. இதையடுத்து அவா்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

கைது செய்யப்பட்ட இருவரும், தடைசெய்யப்பட்ட நக்ஸல் தீவிரவாதிகளுக்கு தளவாட பொருள்களை வழங்கியதாகவும், அவா்களுக்கு அடைக்கலம் அளித்ததாகவும் தெரிய வந்துள்ளது என்று அந்த அதிகாரி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com