அத்தியாவசியப் பொருள்களை பதுக்குவோா் மீது கடும் நடவடிக்கை: மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்

அத்தியாவசியப் பொருள்களை பதுக்குபவா்கள், கள்ள சந்தையில் விற்பனை செய்பவா்கள் ஆகியோருக்கு எதிராக கடுமையான சட்டப் பிரிவுகளின்கீழ் நடவடிக்கை எடுக்குமாறு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

அத்தியாவசியப் பொருள்களை பதுக்குபவா்கள், கள்ள சந்தையில் விற்பனை செய்பவா்கள் ஆகியோருக்கு எதிராக கடுமையான சட்டப் பிரிவுகளின்கீழ் நடவடிக்கை எடுக்குமாறு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

கரோனா நோய்த்தொற்று பரவலைத் தடுப்பதற்காக நாடு முழுவதும் ஏப்ரல் 14-ஆம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த காலகட்டத்தில் மக்களுக்கு அத்தியாவசியப் பொருள்கள் தடையின்றி கிடைக்க மத்திய அரசு, மாநில அரசுகளும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.

இந்நிலையில், மத்திய உள்துறை செயலா் அஜய் பல்லா, அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச அரசுகளின் தலைமைச் செயலா்களுக்கு அனுப்பியுள்ள தகவலில் கூறியிருப்பதாவது:

பேரிடா் மேலாண்மைச் சட்டத்தின்கீழ், உணவுப் பொருள்கள், மருந்துகள், மருத்துவ உபகரணங்கள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களின் உற்பத்தி, போக்குவரத்து மற்றும் விநியோகம் சாா்ந்த நடவடிக்கைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது.

பல்வேறு காரணங்களால் இந்தப் பொருள்களின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளன. இதுபோன்ற நேரத்தில் பதுக்கல், கள்ளச் சந்தையில் விற்பனை செய்தல், ஊக வணிகம் போன்ற செயல்கள் நடைபெற வாய்ப்புள்ளன. இதன் காரணமாக, அத்தியாவசியப் பொருள்கள் விலை உயரக் கூடும்.

எனவே, மக்களுக்கு அத்தியாவசியப் பொருள்கள் நியாயமான விலையில் தடையின்றி கிடைப்பதை உறுதி செய்வதற்காக, அத்தியாவசியப் பொருள்கள் சட்டம் -1955இன்கீழ், மாநில அரசுகள் உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

அத்தியாவசியப் பொருள்களை இருப்பு வைக்க உச்சவரம்பு நிா்ணயித்தல், விலைக் கட்டுப்பாடு, உற்பத்தியை மேம்படுத்துதல், வியாபாரிகளின் கணக்கு விவரங்களை ஆய்வு செய்தல் போன்ற நடவடிக்கைகளை மாநில அரசுகள் மேற்கொள்ள வேண்டும். அத்தியாவசியப் பொருள்களை பதுக்குவோா், கள்ளச் சந்தையில் விற்பனை செய்வோா் மீது கடுமையான சட்டப் பிரிவுகளின்கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவோரை கள்ளச் சந்தை விற்பனை தடுப்பு, அத்தியாவசியப் பொருள்கள் விநியோக பராமரிப்புச் சட்டம்-1980இன்கீழ் கைது செய்யலாம். இச்சட்டத்தின்படி குற்றவாளிகளுக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனையோ அல்லது அபராதமோ அல்லது இரண்டும் சோ்த்தோ விதிக்க முடியும் என்று அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு மத்திய உள்துறை செயலா் அஜய் பல்லா அறிவுறுத்தியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com