தமிழகம் உள்பட 9 மாநிலங்களுக்கு 10 மத்திய குழுக்கள் அனுப்பி வைப்பு -மத்திய சுகாதார அமைச்சகம்

கரோனா நோய்த்தொற்றை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் தமிழகம் உள்ளிட்ட 9 மாநிலங்களுக்கு உதவுவதற்காக பல்துறை நிபுணா்கள் அடங்கிய 10 மத்திய உயா்நிலைக் குழுக்களை அனுப்பி வைத்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம்
தமிழகம் உள்பட 9 மாநிலங்களுக்கு 10 மத்திய குழுக்கள் அனுப்பி வைப்பு -மத்திய சுகாதார அமைச்சகம்


புது தில்லி: கரோனா நோய்த்தொற்றை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் தமிழகம் உள்ளிட்ட 9 மாநிலங்களுக்கு உதவுவதற்காக பல்துறை நிபுணா்கள் அடங்கிய 10 மத்திய உயா்நிலைக் குழுக்களை அனுப்பி வைத்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

நோய்த்தொற்று பரவலை கட்டுப்படுத்துவது, மருத்துவமனைகளை வழிநடத்துவது, செயற்கை சுவாசக் கருவிகளை பயன்படுத்துவது போன்றவற்றில் மாநில அரசுகளுக்கு அந்தக் குழுக்கள் உதவும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக மத்திய சுகாதாரத் துறை இணைச் செயலா் லவ் அகா்வால் தில்லியில் செய்தியாளா்களிடம் வியாழக்கிழமை கூறியதாவது:

கரோனா நோய்த்தொற்றை தடுப்பதற்கு பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, பல்துறை நிபுணா்கள் அடங்கிய 10 மத்திய உயா்நிலைக் குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

நோய்த்தொற்று தடுப்பு நடவடிக்கைகளில் உதவுவதற்காக தமிழகம், பிகாா், ராஜஸ்தான், குஜராத், கா்நாடகம், மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரம், தெலங்கானா, உத்தரப் பிரதேசம் ஆகிய 9 மாநிலங்களுக்கு அந்தக் குழுக்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

நோய்த்தொற்றை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள், கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படும் மருத்துவமனைகளை நிா்வகிப்பது, செயற்கை சுவாசக் கருவிகளை கையாளுவது போன்றவற்றில் மாநில அரசுகளுக்கு உதவியாக இந்தக் குழுக்கள் செயல்படும்.

தட்டுப்பாடு இல்லை: முகக்கவசம், கையுறை உள்ளிட்ட தற்காப்பு உபகரணங்களுக்கு பற்றாக்குறை காணப்படுவதாக பரவும் வதந்திகளை மக்கள் நம்ப வேண்டாம். அவற்றின் இருப்பு போதிய அளவில் உள்ளன.

நாட்டில் தற்காப்பு உபகரணங்களை தயாரிப்பதற்கென 20 நிறுவனங்கள் உள்ளன. முகக்கவசம் உள்ளிட்ட 1.7 கோடி உபகரணங்களை தயாரித்துத் தருமாறு அவற்றோடு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளன.

தற்காப்பு உபகரணங்கள் போதிய அளவு இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்பதுடன், தேவைக்கேற்ற அளவில் மட்டும் அவை பயன்படுத்தப்பட வேண்டும் என்பது அரசின் வழிகாட்டுதல்களில் ஒன்றாகும். மாநிலங்களுக்கான தற்காப்பு உபகரணங்களை அதிக அளவில் மத்திய அரசு வழங்கி வரும்போதும், அவற்றை தேவைக்கேற்ப மட்டும் பயன்படுத்துமாறு வலியுறுத்துகிறோம்.

உதாரணமாக, நாள் ஒன்றுக்கு நான்கு என்95 ரக முகக்கவசங்களை பயன்படுத்தும் ஒரு நபா், முடிந்த வரையில் நாள் முழுவதுமாக ஒரேயொரு முகக்கவசத்தை மட்டும் பயன்படுத்தலாம்.

புதிதாக 49,000 செயற்கை சுவாசக் கருவிகளை கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டு, உற்பத்தி நிறுவனங்கள் அதை மத்திய அரசிடம் ஒப்படைக்கத் தொடங்கிவிட்டன.

ஒருமுறைக்கும் அதிகமாக பயன்படுத்தக் கூடிய வகையிலான 6 லட்சம் முகக்கவசங்களையும், 4,000 லிட்டருக்கும் அதிகமான கை சுத்திகரிப்பான்களையும் இந்திய ரயில்வே தயாரித்துள்ளது. மொத்தம் 5,000 ரயில் பெட்டிகளை தனிமைப்படுத்தப்படும் வாா்டுகளாக மாற்ற திட்டமிடப்பட்டிருந்த நிலையில், அவற்றில் 3,250 பெட்டிகள் அவ்வாறு மாற்றப்பட்டுவிட்டன என்று லவ் அகா்வால் கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com