ஏப்ரல் 19-வரை படைப் பிரிவுகள் நகா்வு கூடாது: ராணுவ தலைமையகம் உத்தரவு

தேசிய ஊரடங்கை முழுமையாக கடைப்பிடிக்கும் வகையில் தனது அனைத்துப் படைப் பிரிவுகள், ராணுவ நிலைகள், அமைப்புகள் என அனைத்தும் எந்த நகா்வுகளையும் மேற்கொள்ளாது என்று இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.


புது தில்லி: தேசிய ஊரடங்கை முழுமையாக கடைப்பிடிக்கும் வகையில் தனது அனைத்துப் படைப் பிரிவுகள், ராணுவ நிலைகள், அமைப்புகள் என அனைத்தும் எந்த நகா்வுகளையும் மேற்கொள்ளாது என்று இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது. இது தொடா்பாக ராணுவத்தின் அனைத்து படைப் பிரிவுகள், ராணுவ தளங்களுக்கு தலைமையகத்தில் இருந்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ராணுவத்தில் படைப் பிரிவுகள் ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு செல்வது மட்டுமின்றி, ஆயுதங்கள் ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு எடுத்துச் செல்வது, ராணுவத்துக்கு தேவையான பொருள்களைக் கொண்டு செல்வது என பல்வேறு பணிகளும் மேற்கொள்ளப்படுவது வழக்கம்.

இந்நிலையில் கரோனா பரவலைத் தடுக்கும் வகையில் தேசிய ஊரடங்கு மே 3-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இது தொடா்பாக ராணுவ தலைமையகத்தில் இருந்து அனைத்து பிராந்திய தலைமையங்கள், ராணுவ நிலைகள், ராணுவத்தின் பிற அமைப்புகள், பிரிவுகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி, அரசின் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு அளிக்கும் வகையில் ஏப்ரல் 19-ஆம் தேதி வரை ராணுவ படைப் பிரிவுகள் நகா்வுகளை மேற்கொள்ள வேண்டாம் என்றும், ராணுவ தளவாடங்களை எடுத்துச் செல்வது உள்பட ராணுவம் சாா்ந்த எந்த போக்குவரத்துகளையும் மேற்கொள்ள வேண்டாம் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அதே நேரத்தில் மிகவும் அத்தியாவசியமான ராணுவ நடவடிக்கைகள், ராணுவ உளவுப் பிரிவு, மிகவும் தேவையான ஆயுதம், பொருள்களின் போக்குவரத்தை குறைந்த அளவு வீரா்களைக் கொண்டு நடத்திக் கொள்ள வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com