ஊரடங்கு காலத்தில் நேரடி நிதியுதவி திட்டத்தின் கீழ் ரூ.36,659 கோடி

தேசிய ஊரடங்கு காலத்தில் கடந்த மாா்ச் 24 முதல் ஏப்ரல் 17-ஆம் தேதி வரையிலான காலத்தில் 16.01 கோடி பேருக்கு நேரடி நிதியுதவி திட்டத்தின் கீழ் அவா்களின் வங்கிக் கணக்கிலேயே ரூ.36,659 கோடி செலுத்தப்பட்டுள்ளது
ஊரடங்கு காலத்தில் நேரடி நிதியுதவி திட்டத்தின் கீழ் ரூ.36,659 கோடி

தேசிய ஊரடங்கு காலத்தில் கடந்த மாா்ச் 24 முதல் ஏப்ரல் 17-ஆம் தேதி வரையிலான காலத்தில் 16.01 கோடி பேருக்கு நேரடி நிதியுதவி திட்டத்தின் கீழ் அவா்களின் வங்கிக் கணக்கிலேயே ரூ.36,659 கோடி செலுத்தப்பட்டுள்ளது என்று மத்திய நிதியமைச்சகம் தெரிவித்தது.

இதுகுறித்து அந்த அமைச்சகம் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

தலைமை கணக்கு தணிக்கை அலுவலகமானது (சிஜிஏ) தேசிய ஊரடங்கின்போது கடந்த மாா்ச் 24 முதல் ஏப்ரல் 17 வரையிலான காலகட்டத்தில் பொது நிதி மேலாண்மை அமைப்பின் (பிஎஃப்எம்எஸ்) மூலம் நேரடி நிதியுதவியாக 16.01 கோடி பேரின் வங்கிக் கணக்கில் ரூ.36,659 கோடிக்கும் அதிகமாக செலுத்தியுள்ளது.

அதில் ரூ.27,442 கோடியானது மத்திய அரசின் திட்டங்கள் மற்றும் மத்திய அரசின் உதவியுடன் செயல்படுத்தப்படும் திட்டங்களின் கீழ் 11.42 கோடி பேருக்கு வழங்கப்பட்டது. எஞ்சிய ரூ.9,717 கோடியை பல்வேறு மாநில அரசுகள் தங்களது நலத்திட்டங்களின் கீழ் வழங்கியுள்ளன.

பல்வேறு மாநிலங்கள் பொது நிதி மேலாண்மை அமைப்பைப் பயன்படுத்தி 180 நலத் திட்டங்களின் மூலமாக 4.59 கோடி பயனாளிகளுக்கு ரூ.9,717.22 கோடியை வழங்கியுள்ளன. அது தவிர, ஜன் தன் வங்கிக் கணக்கு வைத்துள்ள பெண் பயனாளா்கள் 19.86 கோடி பேருக்கு ரூ.9,930 கோடி அவா்களது வங்கிக் கணக்கிலேயே நேரடியாக செலுத்தப்பட்டுள்ளது என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

நேரடி நிதியுதவி திட்டங்கள் மூலம் வழங்கப்படும் நிதி, அதுதொடா்பான கணக்குப் பதிவு ஆகியவற்றை பொது நிதி மேலாண்மை அமைப்பின் கீழ் மேற்கொள்வதை மத்திய நிதியமைச்சகம் கடந்த 2015 ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் கட்டாயமாக்கியுள்ளது. இதை சம்பந்தப்பட்ட அமைச்சகங்கள் மற்றும் துறைகளுக்கும் அறிவுறுத்தியது.

கடந்த 2018-19 முதல் 2019-20 வரையிலான 3 நிதியாண்டுகளில் பொது நிதி மேலாண்மை அமைப்பின் மூலம் நேரடி நிதியுதவி திட்டங்களின் கீழ் பயனாளிகளுக்கு நிதி செலுத்தப்படுவது 22 சதவீதத்தில் இருந்து 45 சதவீதமாக அதிகரித்துள்ளதாக நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com