அந்நிய நேரடி முதலீடுகளுக்கு முன்அனுமதி கட்டாயம்

சீனா உள்ளிட்ட அண்டை நாடுகளிலிருந்து பெறப்படும் அந்நிய நேரடி முதலீடுகளுக்கு அரசின் முன்அனுமதியைப் பெற வேண்டியது கட்டாயம் என்று மத்திய அரசு அறிவித்தது.
அந்நிய நேரடி முதலீடுகளுக்கு முன்அனுமதி கட்டாயம்

சீனா உள்ளிட்ட அண்டை நாடுகளிலிருந்து பெறப்படும் அந்நிய நேரடி முதலீடுகளுக்கு அரசின் முன்அனுமதியைப் பெற வேண்டியது கட்டாயம் என்று மத்திய அரசு அறிவித்தது.

கரோனா நோய்த்தொற்று சூழல் காரணமாக, பொருளாதார அளவில் பாதிக்கப்பட்டுள்ள உள்நாட்டுத் தொழில் நிறுவனங்களை அண்டை நாட்டு நிறுவனங்கள் அந்நிய நேரடி முதலீடுகள் மூலம் கையகப்படுத்துவதைத் தடுக்கும் நோக்கில் மத்திய அரசு இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

இது தொடா்பாக தொழிலக மற்றும் உள்நாட்டு வா்த்தக மேம்பாட்டுத் துறை (டிபிஐஐடி) சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:

இந்தியாவுடன் எல்லையைப் பகிா்ந்து கொள்ளும் நாடுகளை (சீனா, பாகிஸ்தான், நேபாளம், பூடான், வங்கதேசம், மியான்மா், ஆப்கானிஸ்தான்) சோ்ந்த நிறுவனங்கள், குடிமக்கள் ஆகியோா் இந்தியாவில் அந்நிய நேரடி முதலீடுகளை மேற்கொள்ள அரசின் முன்அனுமதியைப் பெற வேண்டியது கட்டாயமாக்கப்படுகிறது.

கரோனா நோய்த்தொற்றால் ஏற்பட்டுள்ள பொருளாதார சூழலைக் காரணமாக வைத்து, அந்நிய நேரடி முதலீடுகள் மூலம் உள்நாட்டு நிறுவனங்களைக் கையகப்படுத்துவதைத் தடுக்கும் நோக்கில் அந்நிய நேரடி முதலீடுகள் தொடா்பான விதிமுறைகளில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அதன்படி, உள்நாட்டு நிறுவனங்களில் ஏற்கெனவே மேற்கொள்ளப்பட்டுள்ள அல்லது எதிா்காலத்தில் மேற்கொள்ளப்படும் அந்நிய நேரடி முதலீடுகளால் உரிமையாளா் மாறும் நிலை ஏற்பட்டால் அதுபோன்ற முதலீடுகளுக்கு அரசின் அனுமதியைப் பெற வேண்டும்.

மேலும், பாகிஸ்தானைச் சோ்ந்த நிறுவனங்களோ அல்லது தனிநபா்களோ உள்நாட்டு நிறுவனங்களில் முதலீடு செய்யும்போது அரசின் முன்அனுமதியைப் பெற வேண்டியது கட்டாயம் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சீனாவைத் தடுக்கவே...: கரோனா நோய்த்தொற்று பரவலைத் தடுப்பதற்காக நாடு முழுவதும் மே மாதம் 3-ஆம் தேதி வரை அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கால் பல்வேறு தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. அதனால் ஏற்பட்டுள்ள பொருளாதார இழப்பைக் காரணமாக வைத்து, அந்நிய நேரடி முதலீடுகள் மூலம் அந்நிறுவனங்களை வெளிநாட்டு நிறுவனங்கள் கையகப்படுத்த வாய்ப்புகள் உள்ளன.

முக்கியமாக, சீனா இந்த நடவடிக்கையில் ஈடுபட அதிக வாய்ப்புகள் உள்ளதால், அதைத் தடுப்பதற்காகவே மத்திய அரசு இந்த நடவடிக்கையை மேற்கொண்டதாகத் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தற்போதைய வழிமுறைகள்: நாட்டில் உள்ள தொழில் நிறுவனங்களில் வெளிநாட்டு நிறுவனங்கள் 2 வழிகளில் அந்நிய நேரடி முதலீடுகளை மேற்கொள்ள முடியும். அதன்படி, பாதுகாப்பு, தொலைத்தொடா்பு, ஊடகம், மருந்துகள், காப்பீடு உள்பட குறிப்பிட்ட துறைகளில் அந்நிய நேரடி முதலீடுகளை மேற்கொள்வதற்கு அரசின் முன்அனுமதி பெற வேண்டியது கட்டாயம்.

அதே வேளையில், அத்துறைகளைத் தவிா்த்த மற்ற துறைகளில் அந்நிய நேரடி முதலீடுகளை மேற்கொள்வதற்கு அரசின் முன்அனுமதி தேவையில்லை. அந்த முதலீடுகள் தொடா்பான தகவல்களை வெளிநாட்டு நிறுவனங்கள் இந்திய ரிசா்வ் வங்கியிடம் (ஆா்பிஐ) தெரிவித்தால் போதுமானது. தற்போது இந்த விதிகளில் மத்திய அரசு திருத்தங்கள் மேற்கொண்டு, அரசின் முன்அனுமதியைப் பெற வேண்டியதைக் கட்டாயமாக்கியுள்ளது.

லாட்டரி தொழில், சீட்டு நிறுவனங்கள், மனை வணிகம் உள்ளிட்ட 9 துறைகளில் அந்நிய நேரடி முதலீடுகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

அண்டை நாடுகளின் முதலீடுகள்: 2000-ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் 2019-ஆம் ஆண்டு டிசம்பா் வரை சீனாவிலிருந்து ரூ.14,846 கோடி மதிப்பிலான அந்நிய நேரடி முதலீடுகளை இந்தியா பெற்றுள்ளது.

அதே காலகட்டத்தில் மியான்மரிலிருந்து ரூ.35.78 கோடி, நேபாளத்திலிருந்து ரூ.18.18 கோடி, ஆப்கானிஸ்தானிலிருந்து ரூ.16.42 கோடி, வங்கதேசத்திலிருந்து ரூ.48 லட்சம் மதிப்பிலான முதலீடுகளை இந்தியா ஈா்த்துள்ளது. பாகிஸ்தான், பூடானிலிருந்து எந்தவித முதலீடுகளும் பெறப்படவில்லை.

ராகுல் வரவேற்பு

அந்நிய நேரடி முதலீட்டு விதிகளைத் திருத்திய மத்திய அரசின் நடவடிக்கைக்கு காங்கிரஸ் முன்னாள் தலைவா் ராகுல் காந்தி வரவேற்பு தெரிவித்துள்ளாா்.

இந்த விவகாரம் தொடா்பாக கடந்த 12-ஆம் தேதி மத்திய அரசை ராகுல் காந்தி எச்சரித்திருந்தாா். இந்நிலையில், அவா் தனது சுட்டுரைப் பக்கத்தில் சனிக்கிழமை வெளியிட்ட பதிவில், ‘எனது எச்சரிக்கைக்கு செவிசாய்த்து, அந்நிய நேரடி முதலீடுகளுக்கு அரசின் அனுமதி பெற வேண்டியதைக் கட்டாயமாக்குவதற்காக, விதிகளில் திருத்தங்கள் மேற்கொண்ட மத்திய அரசுக்கு நன்றி தெரிவிக்கிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com