
கோப்புப்படம்
புது தில்லி: இதயமில்லாத அரசுதான் இப்படி ஒன்றும் செய்யாமல் இருக்கும் என்று கரோனா விவகாரத்தில் மத்திய அரசை முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் விமர்சித்துள்ளார்.
சீனாவில் வூஹான் மாகாணத்தில் கண்டறியப்பட்ட கரோனா வைரஸ் தற்போது உலகத்திற்கே அச்சுறுத்தலாக உருமாறியுள்ளது. இதுவரை இந்தியாவில் 16,365 பேர் இந்த வைரஸ் பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் 521 பேர் பலியாகியுள்ளனர்.
மேலும் கரோனா பரவுவதைத் தடுக்கும் பொருட்டு கடந்த மாதம் 24-ஆம் தேதி நள்ளிரவு முதல் இந்த மாதம் 14-ஆம் தேதி வரை இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தற்போது அந்த உத்தரவு மே மாதம் 3-ஆம் தேதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இதயமில்லாத அரசுதான் இப்படி ஒன்றும் செய்யாமல் இருக்கும் என்று மத்திய அரசை முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் விமர்சித்துள்ளார்.
இதுதொடர்பாக ஞாயிறன்று அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:
கைகளில் பணம் இல்லாமல் இலவசமாகக் கிடைக்கும் சமைக்கப்பட்ட உணவுகளை வாங்குவதற்காக வரிசையில் மக்கள் நிற்கும் காட்சிகள் நாள்தோறும் அதிகரிப்பதைக் காண முடிகிறது. இதுபோன்ற ஏராளமான சம்பவங்கள் நடக்கின்றன. இதயமற்ற ஒரு அரசுதான் இப்படி மக்களுக்கு எந்தவிதமான உதவியும் செய்யாமல் அமைதியாக இருக்கும்.
இவ்வாறு அவர் விமர்சித்துள்ளார்.