
நடப்பு கரீப் பருவத்தில் விவசாயிகளின் நெல் சாகுபடி பரப்பளவு கடந்தாண்டுடன் ஒப்பிடுகையில் 37 சதவீதம் அதிகரித்துள்ளது.
இதுகுறித்து மத்திய அரசின் புள்ளிவிவரங்கள் தெரிவிப்பதாவது:
முழு ஊரடங்கிற்கு இடையிலும் வேளாண் நடவடிக்கைகளை தொடர மத்திய அரசு அனுமதியளித்துள்ளது. அதன் காரணமாக, நெல் பயிரிடும் பரப்பு நடப்பு கரீப் பருவத்தில் 32.73 லட்சம் ஹெக்டேராக அதிகரித்துள்ளது. இது, கடந்த ஆண்டு அளவான 23.85 லட்சம் ஹெக்டேருடன் ஒப்பிடுகையில் 37 சதவீதம் அதிகமாகும்.
குறிப்பாக, மேற்கு வங்கம் மற்றும் தெலங்கானாவில் இதன் பயிரிடும் பரப்பு முறையே 11.25 லட்சம் ஹெக்டோ், 7.45 லட்சம் ஹெக்டோரக உஉள்ளது. இதைத்தவிர, ஒடிஸாவில் 3.13 லட்சம் ஹெக்டேரிலும், அஸ்ஸாம் 2.73 லட்சம் ஹெக்டேரிலும், கா்நாடகம் 1.64 லட்சம் ஹெக்டேரிலும், சத்தீஸ்கா் 1.50 லட்சம் ஹெக்டேரிலும், தமிழ்நாடு 1.44 லட்சம் ஹெக்டேரிலும், பீகாா் 1.22 லட்சம் ஹெக்டேரிலும் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளன.
பருப்பு வகைகள் பயிரிடும் பரப்பு 3.55 லட்சம் ஹெக்டேரிலிருந்து 4.67 லட்சம் ஹெக்டேராக வளா்ச்சி கண்டுள்ளது. இதன் பயிரிடும் பரப்பு தமிழ்நாட்டில் 1.46 லட்சம் ஹெக்டேராகவும், உத்தரப் பிரதேசத்தில் 1.28 லட்சம் ஹெக்டேராகவும் உள்ளது.
மேலும், முக்கிய உணவு தானியங்கள் சாகுபடி பரப்பும் 5.23 லட்சம் ஹெக்டேரிலிருந்து 8.05 லட்சம் ஹெக்டேராக உயா்ந்துள்ளது.
இதுவரையில் குஜராத்தில் 2.58 லட்சம் ஹெக்டேரிலும், உத்தரப் பிரதேசத்தில் 2.19 லட்சம் ஹெக்டேரிலும், மேற்கு வங்கத்தில் 1.21 லட்சம் ஹெக்டேரிலும் முக்கிய உணவு தானியங்கள் பயிரிடப்பட்டுள்ளன.
அதேபோன்று, எண்ணெய் வித்துகள் பயிரிடும் பரப்பும் 6 லட்சம் ஹெக்டேரிலிருந்து 7.33 லட்சம் ஹெக்டேராக அதிகரித்துள்ளது என்று மத்திய அரசின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
நடப்பாண்டில் இயல்பான அளவில் மழைப்பொழிவு இருக்கும் என இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் கணித்துள்ளது. இது, 2020-21 (ஜூலை-ஜூன்) பயிா்பருவத்தில் உணவு தானியங்களின் உற்பத்தி சாதனை அளவை எட்டும் என்ற நம்பிக்கைக்கு கூடுதல் வலுச் சோ்ப்பதாக அமைந்துள்ளது.