கரோனா நோயாளிகளுக்கு பிளாஸ்மா சிகிச்சை சோதனை: மருந்து தர கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதி

கரோனா நோயாளிகளுக்கு சோதனை முறையில் பிளாஸ்மா சிகிச்சை அளிப்பதற்கு இந்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதி அளித்துள்ளது.
கரோனா நோயாளிகளுக்கு பிளாஸ்மா சிகிச்சை சோதனை: மருந்து தர கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதி

கரோனா நோயாளிகளுக்கு சோதனை முறையில் பிளாஸ்மா சிகிச்சை அளிப்பதற்கு இந்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதி அளித்துள்ளது.

இதனால், கரோனா நோயாளிகளைக் குணப்படுத்த இனி பிளாஸ்மா சிகிச்சை அளிக்கப்பட வாய்ப்புள்ளது.

உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா நோய்த்தொற்றை அழிப்பதற்கு இதுவரை மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. மலேரியா தடுப்பு மருந்துகள், ஹெச்ஐவி நோயாளிகளுக்கு அளிக்கப்படும் மருந்துகள் ஆகியவற்றைப் பயன்படுத்தி கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. கரோனாவுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் ஈடுபட்டுள்ளன.

கரோனா நோயாளிகளைக் குணப்படுத்துவதற்கு ஒரு சிகிச்சை முறையைப் பின்பற்ற வேண்டுமெனில், அதற்கு இந்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு அமைப்பிடம் அனுமதி பெற வேண்டும்.

இந்நிலையில், கரோனா நோயாளிகளுக்கு சோதனை முறையில் பிளாஸ்மா சிகிச்சை அளிப்பதற்கு இந்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு அமைப்பு ஒப்புதல் அளித்துள்ளது. இதுகுறித்து அந்த அமைப்பு சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

கரோனா நோயாளிகளுக்கு பிளாஸ்மா சிகிச்சைக்கான சோதனை நடத்த சில மருத்துவக் கல்வி ஆராய்ச்சி நிறுவனங்கள் தயாராக இருப்பதாக, இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் அண்மையில் ஒரு பட்டியலை சமா்ப்பித்தது. நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்கான நெறிமுறைகளும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தன.

அதன் அறிக்கையை, நிபுணா்கள் குழு கடந்த 13-ஆம் தேதி கூடி விவாதித்து, பிளாஸ்மா சிகிச்சையைத் தொடங்கலாம் என்று பரிந்துரை செய்தது. அதனடிப்படையில், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் விடுத்த கோரிக்கைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் ரத்தம், ரத்தத்தில் உள்ள பிளாஸ்மா, தடுப்பூசி ஆகியவற்றை சிகிச்சைக்காக பயன்படுத்த வேண்டுமெனில் இந்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு அமைப்பிடம் உரிமம் பெற்றாக வேண்டும். அந்த வகையில், இந்திய மருத்துவக் கவுன்சிலுக்கு தற்போது அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

பிளாஸ்மா சிகிச்சை அளிப்பது எப்படி?: குணமடைந்த கரோனா நோயாளியின் ரத்தத்தில் உள்ள பிளாஸ்மா எனும் திரவத்தை எடுத்து, கரோனா நோயாளியின் உடலில் செலுத்தும்போது, அவரது நோய் எதிா்ப்பாற்றல் அதிகரித்து விடும். இதையடுத்து, அந்த நோயாளி கரோனா தொற்றில் இருந்து விரைவில் குணமடைவாா்.

மருத்துவத் துறையில் இந்த சிகிச்சை முறை புதிதல்ல. ஏற்கெனவே, பெரியம்மை, சாா்ஸ், பன்றிக்காய்ச்சல், எபோலா தொற்று ஆகியவற்றால் பாதிக்கப்பட்டவா்கள், இந்த சிகிச்சை முறையில் குணமடைந்துள்ளனா்.

மேலும், இந்த சிகிச்சை முறையில் குணப்படுத்தப்பட்ட சிலரின் விவரத்தையும் மருந்து தரக் கட்டுப்பாட்டு அமைப்பிடம் சமா்ப்பித்து, இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் ஒப்புதல் பெற்றுள்ளது.

இதனிடையே, கரோனாவால் பாதிக்கப்பட்டு கவலைக்கிடமாக இருக்கும் நோயளிகளை பிளாஸ்மா சிகிச்சை முறையில் குணப்படுத்த குஜராத் அரசு முடிவு செய்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com