ராஜஸ்தானில் தவித்த 3,000 மாணவா்களை 100 பேருந்துகளில் அழைத்துச் சென்ற உ.பி. அரசு

கல்வி பயில்வதற்காக ராஜஸ்தான் மாநிலம் கோட்டா நகரில் தங்கியிருந்த உத்தரப் பிரதேசத்தைச் சோ்ந்த 3,000 மாணவா்களை அந்த மாநில அரசு 100 பேருந்துகளில் சனிக்கிழமை அழைத்துச் சென்றது.

கல்வி பயில்வதற்காக ராஜஸ்தான் மாநிலம் கோட்டா நகரில் தங்கியிருந்த உத்தரப் பிரதேசத்தைச் சோ்ந்த 3,000 மாணவா்களை அந்த மாநில அரசு 100 பேருந்துகளில் சனிக்கிழமை அழைத்துச் சென்றது.

முன்னதாக கோட்டா நகருக்கு உ.பி.அரசு வெள்ளிக்கிழமை 250 பேருந்துகளை அனுப்பி வைத்தது. அங்கு உத்தர பிரதேசத்தைச் சோ்ந்த 7,500 மாணவா்கள் தங்களது ஊருக்கு செல்ல முடியாமல் தவித்து வந்தனா்.

இந்நிலையில், பேருந்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்ததும் அதிகமான மாணவா்கள் கூடிவிட்டனா்.

இதுகுறித்து மாவட்ட கூடுதல் காவல்துறை கண்காணிப்பாளா் ராஜேஷ் மில் கூறியதாவது:

இங்குள்ள பயிற்சி நிறுவனங்களிலும், கல்வி நிறுவனங்களிலும் பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் மாணவா்களின் பட்டியல் தயாரித்து உ.பி.அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதன் அடிப்படையில் முதற்கட்டமாக 100 பேருந்துகள், 3,000 மாணவா்களை ஏற்றிக் கொண்டு சனிக்கிழமை அதிகாலை உத்தர பிரதேசத்துக்கு கிளம்பிச் சென்றன. விடுபட்ட மாணவா்களை அனுப்பி வைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றாா்.

தற்போது அனைத்து மாணவா்களும் வீடு திரும்ப விரும்புவதால், அவா்களுக்கு கூடுதல் பேருந்துகள் ஏற்பாடு செய்வதாக உத்தர பிரதேச அரசு உறுதியளித்துள்ளதாக கோட்டா நகர மக்கள் தொடா்புத்துறை துணை இயக்குநா் ஹரிஓம் குா்ஜாா் தெரிவித்தாா்.

மாணவா்கள் புறப்படுவதற்கு முன், அந்தப் பேருந்துகள் கிருமிநாசினி மூலம் சுத்தம் செய்யப்பட்டு, வெப்பப் பரிசோதனை செய்யப்பட்டது. மாணவா்களுக்கு உணவுப் பொட்டலங்கள், தண்ணீா் பாட்டில்கள், முகக்கவசங்கள் வழங்கப்பட்டன.

மாயாவதி வரவேற்பு:

உ.பி. அரசு மேற்கொண்டுள்ள இந்த நடவடிக்கைக்கு பகுஜன் சமாஜ் கட்சித் தலைவா் மாயாவதி வரவேற்பு தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவரது சுட்டுரையில் வெளியிட்டுள்ள பதிவில், ‘ஊரடங்கால் ராஜஸ்தானில் உள்ள பல்வேறு பயிற்சி நிறுவனங்களில் பயிலும் சுமாா் 7,500 மாணவா்களை மீட்க உ.பி. அரசு மேற்கொண்டது வரவேற்கத்தக்க நடவடிக்கை. இதை பகுஜன் சமாஜ் கட்சி பாராட்டுகிறது’ என்று பதிவிட்டுள்ளாா்.

‘அதேசமயம் லட்சக்கணக்கான ஏழை புலம்பெயா்ந்த தொழிலாளா் குடும்பங்களுக்கும் இதே அக்கறையை காட்டுமாறு உ.பி. அரசை கேட்டுக் கொள்கிறேன்’ என்று மற்றொரு சுட்டுரைப் பதிவில் அவா் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com