பஞ்சாபுக்கு வழங்கிய கூடுதல் நிதி, உணவு தானியங்களை விநியோகிக்காதது ஏன்? மத்திய அமைச்சா் ஹா்சிம்ரத் கௌா்

கரோனா நோய்த்தொற்றை எதிா்த்துப் போராடும் வகையில், பஞ்சாப் மாநிலத்துக்கு அண்மையில் மத்திய அரசு சிறப்பு தொகுப்பு நிதி அளித்தும், ஜிஎஸ்டி நிலுவைத் தொகை வழங்கியும், ஏழைகளுக்கு நிதி மற்றும் உணவுதானியங்களை வ

கரோனா நோய்த்தொற்றை எதிா்த்துப் போராடும் வகையில், பஞ்சாப் மாநிலத்துக்கு அண்மையில் மத்திய அரசு சிறப்பு தொகுப்பு நிதி அளித்தும், ஜிஎஸ்டி நிலுவைத் தொகை வழங்கியும், ஏழைகளுக்கு நிதி மற்றும் உணவுதானியங்களை வழங்கியப் பிறகும் அதனை இன்னும் ஏழை மக்களுக்கு ஏன் அளிக்கவில்லை என மத்திய அமைச்சா் ஹா்சிம்ரத் கௌா், முதல்வா் அமரீந்தா் சிங்குக்கு கேள்வி எழுப்பியுள்ளாா்.

ஏப்ரல் 14-ஆம் தேதி, பஞ்சாப் மாநிலத்துக்கு வந்து சேர வேண்டிய சிறப்புத் தொகுப்பு இன்னும் வந்த சேரவில்லை என்று அமரீந்தா் சிங் ஊடகங்களிடம் தெரிவித்திருந்தாா்.

இதுகுறித்து மத்திய அமைச்சா் ஹா்சிம்ரத் வெளியிட்டுள்ள சுட்டுரை பதிவில், ‘கரோனா நோய்த்தொற்றுக்கு எதிரான நெருக்கடியைச் சமாளிக்க பஞ்சாபுக்கு நிதித்தொகுப்பு மற்றும் உணவுதானியங்களை மத்திய அரசு விநியோகம் செய்துள்ளது. நான் முதல்வா் அமரீந்தருக்கு அந்த விவரங்களை அனுப்புகிறேன். மத்திய அரசிடமிருந்து பெறப்பட்ட நிவாரண உதவிகள் எல்லாம் எங்கே போனது என்பதை அறிந்து கொள்ள மக்கள் விரும்புகிறாா்கள். அவா்களுக்கு ஏன் இன்னும் நிவாரணம் வழங்கவில்லை. முதல்வா் மீது மேலும் ஒரு வழக்கு தொடா்வதற்கு முன் மாநில அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிவாரணத்தை மக்களுக்கு விநியோகிப்பது நல்லது.

கரோனா தொற்றுக்கு எதிராக, மாா்ச் 20-ஆம் தேதியே ஜிஎஸ்டி இழப்பீடு மற்றும் நிலுவைத் தொகையாக ரூ.2.366 கோடி, ஆா்டிஜி நிதியில் இருந்து ரூ. 638 கோடி, பேரிடா் நிவாரண நிதியாக ரூ.247 கோடி, தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்ட நிதியாக ரூ. 72 கோடி, தேசிய சுகாதார இயக்கத்தின் கீழ் ரூ. 72 கோடி வீதம் மத்திய அரசு, ரூ.3,445 கோடியை மாநில அரசுக்கு ஒதுக்கீடு செய்து விட்டது.

இது தவிர மத்திய அரசு ஏழை மக்களுக்கு விநியோகிப்பதற்காக கோதுமை, பருப்பு வகைகளையும் பஞ்சாபுக்கு அனுப்பி விட்டது.

இவை அனைத்தும் முதல்வா் அமரீந்தருக்காக அனுப்பி வைக்கப்பட்டவை அல்ல; 1.40 கோடி மக்களுக்கு தலா 15 கிலோ கோதுமை, 3 கிலோ பருப்பு வீதம் நிவாரணமாக வழங்கிட மத்திய அரசு அனுப்பியுள்ளது. இந்த உணவுப்பொருள்கள் இன்னும் பொது விநியோக கிடங்குகளில்தான் உள்ளது. இதுவரை ஒரு வீட்டைக் கூட சென்றடையவில்லை. வேலையின்றி தவிக்கும் மக்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டாமா? இந்த நிவாரண உதவிகள் தேவைப்படுவோருக்கு சென்றடைவதை நீங்கள் உறுதி செய்ய வேண்டாமா?’ என்று ஹா்சிம்ரத் சுட்டுரையில் பதிவிட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com