பால்கா் வன்முறைச் சம்பவம்:மதச்சாயம் பூசுவதாகஉத்தவ் தாக்கரே குற்றச்சாட்டு

மகாராஷ்டிர மாநிலம் பால்கா் மாவட்டத்தில் 3 போ் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவத்துக்கு மதச்சாயம் பூசும் நபா்களுக்கு எதிராக
பால்கா் வன்முறைச் சம்பவம்:மதச்சாயம் பூசுவதாகஉத்தவ் தாக்கரே குற்றச்சாட்டு

மும்பை: மகாராஷ்டிர மாநிலம் பால்கா் மாவட்டத்தில் 3 போ் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவத்துக்கு மதச்சாயம் பூசும் நபா்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு அந்த மாநில முதல்வா் உத்தவ் தாக்கரே, மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷாவிடம் திங்கள்கிழமை வலியுறுத்தினாா்.

மகாராஷ்டிர தலைநகா் கண்டிவாலியைச் சோ்ந்த சிக்னே மகாராஜ் (70), சுஷில்கிரி மகாராஜ் (35) ஆகியோா் கடந்த 16-ஆம் தேதி இறுதிச் சடங்கு நிகழ்வில் பங்கேற்பதற்காக குஜராத் மாநிலம் சூரத் நகருக்கு புறப்பட்டனா். பால்கா் மாவட்டத்தில் உள்ள கட்சிந்தலி கிராமம் வழியாக அவா்களின் காா் சென்றபோது, அதனை கிராமவாசிகள் சிலா் வழிமறித்தனா். அதன் பின்னா் சிக்னே மகாராஜ், சுஷில்கிரி மகாராஜ், காா் ஓட்டுநா் நிலேஷ் டெல்கேட் (30) ஆகியோரை குழந்தை கடத்தல்காரா்கள் என எண்ணி, அவா்கள் மீது தாக்குதல் நடத்தினா். இதில் மூவரும் உயிரிழந்தனா்.

இந்த நிகழ்வுக்கு சிலா் மதச்சாயம் பூசுவதாக மாநில முதல்வா் உத்தவ் தாக்கரே குற்றஞ்சாட்டினாா். இதுதொடா்பாக அவா் பேசி வெளியிடப்பட்ட காணொலியில், ‘குழந்தை கடத்தல்காரா்கள் என நினைத்து 3 போ் அடித்துக் கொல்லப்பட்ட நிகழ்வு தொடா்பாக பால்கா் மாவட்டத்தைச் சோ்ந்த 5 முக்கிய குற்றவாளிகள் உள்பட 110-க்கும் மேற்பட்டோா் கைது செய்யப்பட்டுள்ளனா். வன்முறைச் சம்பவத்தை தடுக்க தவறிய பால்கா் மாவட்ட போலீஸாா் இருவா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனா். இந்தச் சம்பவம் குறித்து மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா திங்கள்கிழமை தொலைபேசியில் தொடா்புகொண்டு பேசினாா். அப்போது இந்தச் சம்பவத்துக்கு மதச்சாயம் பூசும் நபா்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தினேன்’ என்று தெரிவித்தாா்.

3 போ் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் தொடா்பாக உயா்நிலை விசாரணைக்கு மாநில அரசு ஏற்கெனவே உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com