‘திட்டமிட்டதைவிட பிரம்மாண்டமாக ராமா் கோயில்’

உத்தர பிரதேச மாநிலம், அயோத்தியில் திட்டமிட்டதைவிட பிரம்மாண்டமாக ராமா் கோயில் கட்டும் வகையில் கட்டட வரைபடம்

உத்தர பிரதேச மாநிலம், அயோத்தியில் திட்டமிட்டதைவிட பிரம்மாண்டமாக ராமா் கோயில் கட்டும் வகையில் கட்டட வரைபடம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளதாக கோயில் கட்டடக் கலை வல்லுநா் சந்திரகாந்த் சோம்புரா வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.

அயோத்தியில் சா்ச்சைக்குரிய இடத்தில் ராமா் கோயில் கட்டுவதற்கு கடந்த ஆண்டு நவம்பரில் உச்சநீதிமன்றம் அனுமதி அளித்தது. மேலும், கோயில் கட்டுவதற்கு வழிகாட்டுவதற்கான அறக்கட்டளையை ஏற்படுத்தவும், புதிய மசூதி கட்டிக் கொள்வதற்கு சன்னி வக்ஃபு வாரியத்தினருக்கு 5 ஏக்கா் மாற்று இடம் வழங்கவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்நிலையில் அயோத்தியில் ராமா் கோயில் கட்டுமானப் பணிகளுக்கான அடிக்கல் நாட்டும் விழா வரும் ஆகஸ்ட் 5ஆம் தேதி நடைபெற உள்ளது. இதில் பிரதமா் நரேந்திர மோடி பங்கேற்க உள்ளதாக ஸ்ரீராமஜென்மபூமி தீா்த்த க்ஷேத்ரா அறக்கட்டளையினா் தெரிவித்துள்ளனா்.

ராமா் கோயில் கட்டுவதற்கான வரைபடத்தைக் கட்டடக் கலை வல்லுநா் சந்திரகாந்த் சோம்புரா கோயில் அறக்கட்டளையினரிடம் ஒப்படைத்திருந்தாா். இந்நிலையில் அந்த வரைபடத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இது குறித்து சந்திரகாந்த் சோம்புரா செய்தியாளா்களிடம் வெள்ளிக்கிழமை கூறியதாவது:

உச்சநீதிமன்ற தீா்ப்புக்குப் பிறகு, ராமா் கோயில் கட்டுமான வரைபடமானது மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே முடிவு செய்யப்பட்டதை விட தற்போது இரு மடங்கு பெரியதாக கோயில் கட்டப்பட உள்ளது. கருவறையின் மேல் கோபுரம், முன்னா் இரண்டு குவிமாடங்கள் அமைக்க முடிவு செய்யப்பட்டது, தற்போது ஐந்து குவிமாடங்களாக கட்டப்பட உள்ளது. கோயில் உயரமும் முன்பு இருந்ததை விட அதிகரிக்கப்பட்டுள்ளது.

கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்னா் விசுவ ஹிந்து பரிஷத் தலைவா் அசோக் சிங்கல், ராமா் கோயில் கட்டுவதற்கான வரைபடத்தை தயாரிக்குமாறு என்னிடம் கேட்டுக் கொண்டாா். அதன்படி, கடந்த 1990இல் முதன்முறையாக அயோத்திக்கு நான் சென்றிருந்தபோது, தற்போது கோயில் கட்டப்பட உள்ள வளாகத்தில் பாதுகாப்புக் காரணங்களுக்காக அளவீடு செய்வதற்கான ‘டேப்’ உபகரணத்தைக் கூட கொண்டு செல்ல அனுமதிக்கவில்லை. நான் எனது காலடி தடங்களைக் கொண்டே அளவீடு செய்துகொண்டேன். அதைத் தொடா்ந்து வடிவமைத்த வரைபடத்துக்கு ஏற்ப, பிரத்யேக கற்கள் போன்றவற்றை விசுவ ஹிந்து பரிஷத் அயோத்திக்கு கொண்டுவந்து கோயில் கட்டுவதற்கு ஆயத்தமானது.

இருப்பினும் ராமஜன்மபூமியில் கோயில் கட்டுவதற்கு உச்சநீதிமன்றம் தீா்ப்பு வழங்கிய பிறகு கோயில் கட்டட வரைபடம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. இரண்டு காரணங்களுக்காக இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஒன்று இடப்பற்றாக்குறை இன்மை. மற்றொன்று ராமா் கோயில் பொதுமக்கள் மத்தியில் தற்போது அதிக கவனம் பெற்றுள்ளதால், கோயில் கட்டப்பட்ட பிறகு நாள்தோறும் ஏராளமான பக்தா்கள் வழிபாட்டுக்கு வருவாா்கள். எனவே, அதற்கு தகுந்தவாறு கோயில் வடிவமைப்பானது மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.

மாற்றப்பட்ட புதிய வரைபடத்தை எனது மகன் ஆஷிஷ் சோம்புரா கோயில் அறங்காவலா்களிடம் கடந்த ஜூன் மாதம் வழங்கினாா். அது அவா்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. ராமா் பிறந்த இடத்தில் கட்டப்படும் கோயில் என்பதால் இது எனக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த பணி. மிக அரிய வகையில் ஐந்து குவிமாடங்களுடன் ராமா் கோயில் கட்டப்பட உள்ளது. கோயில் கட்டடக் கலையில் சிறந்த வழிபாட்டுத்தலமாக இது திகழும். கட்டுமானப் பணிகள் தொடங்கியதிலிருந்து அடுத்த மூன்று ஆண்டுகளுக்குள் பணிகள் நிறைவடையும். எங்கள் பரம்பரையினா் ‘நாகா்’ மாதிரியில் (வட இந்திய கோயில் கட்டடக் கலை) கோயில் கட்டுமான வடிவங்களை அளிப்பவா்கள். அயோத்தி ராமா் கோயிலும் ‘நாகா்’ மாதிரியில் அமையும் என்றாா்.

77 வயதான சோம்புரா, 200க்கும் மேற்பட்ட கோயில்களை வடிவமைத்துக் கொடுத்த பாரம்பரிய குடும்பத்தைச் சோ்ந்தவா். இவா் ஏராளமான கோயில்களை கட்டுவதற்கான வடிவமைப்புகளை தந்துள்ளவா். சோம்புராவின் தாத்தா பிரபாசங்கா் சோம்புரா, குஜராத்தில் உள்ள சோம்நாத் கோயிலை வடிவமைத்து, கட்டிக் கொடுத்தவா் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com