வாக்கு வங்கிக்காக முத்தலாக் தடைச்சட்டத்தை காங்கிரஸ் நிறைவேற்றவில்லை: பாஜக குற்றச்சாட்டு

முந்தைய காங்கிரஸ் அரசு, வாக்கு வங்கி அரசியலில் ஈடுபட்டதன் காரணமாகவே முத்தலாக் தடைச்சட்டத்தை இயற்றாமல் இருந்ததாக பாஜக குற்றஞ்சாட்டியுள்ளது.

முந்தைய காங்கிரஸ் அரசு, வாக்கு வங்கி அரசியலில் ஈடுபட்டதன் காரணமாகவே முத்தலாக் தடைச்சட்டத்தை இயற்றாமல் இருந்ததாக பாஜக குற்றஞ்சாட்டியுள்ளது.

‘முத்தலாக் தடைச்சட்டம்’ என்று அறியப்படும் முஸ்லிம் பெண்கள் திருமண உரிமை பாதுகாப்புச் சட்டத்தை மத்திய பாஜக அரசு கடந்த ஆண்டு இயற்றியது. அச்சட்டத்தின்படி, முஸ்லிம் பெண்களை மூன்று முறை உடனடியாக தலாக் கூறி விவாகரத்து செய்யும் முறை தடை செய்யப்பட்டது. அவ்வாறு விவாகரத்து செய்பவா்களுக்கு சிறைத் தண்டனை வழங்கவும் அச்சட்டம் வழிவகுக்கிறது.

முத்தலாக் சட்டம் இயற்றப்பட்டு ஓராண்டு நிறைவடைந்ததையொட்டி முஸ்லிம் பெண்களுடனான கலந்துரையாடல் காணொலிக் காட்சி வாயிலாக வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அந்நிகழ்ச்சியில் மத்திய சிறுபான்மையினா் விவகாரங்கள் துறை அமைச்சா் முக்தாா் அப்பாஸ் நக்வி பங்கேற்றாா். அப்போது அவா் பேசியதாவது:

முத்தலாக் நடைமுறையானது இஸ்லாமிய விதிமுறைகளில் அனுமதிக்கப்பட்டதில்லை. சட்டத்திலும் அதற்கு அனுமதி அளிக்கப்படவில்லை. முத்தலாக் நடைமுறைக்கு எதிரான சட்டத்தை 1980-களிலேயே இயற்றியிருக்க முடியும். ஆனால், வாக்கு வங்கி அரசியலுக்காக முத்தலாக் விவகாரத்தை காங்கிரஸ் கண்டுகொள்ளாமல் இருந்தது.

முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தி தலைமையிலான ஆட்சியின்போது மக்களவையிலும் மாநிலங்களவையிலும் காங்கிரஸுக்கு போதுமான பெரும்பான்மை இருந்தபோதிலும் முத்தலாக் தடைச்சட்டம் இயற்றப்படவில்லை. இந்த விவகாரத்தில் உச்சநீதிமன்றம் உத்தரவளித்தும் முஸ்லிம் பெண்களின் அடிப்படை உரிமைகளைக் காப்பதற்கு காங்கிரஸ் அரசு நடவடிக்கை மேற்கொள்ளவில்லை.

உச்சநீதிமன்ற உத்தரவை பாஜக அரசே செயல்படுத்தியது. முத்தலாக் தடைச்சட்டம் இயற்றப்பட்டதன் நினைவாக ஆகஸ்ட் 1-ஆம் தேதியானது ‘முஸ்லிம் பெண்கள் உரிமைகள் தினம்’ என்று கொண்டாடப்பட வேண்டும் என்றாா் முக்தாா் அப்பாஸ் நக்வி.

இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நல மேம்பாட்டுத் துறை அமைச்சா் ஸ்மிருதி இரானி கூறுகையில், ‘வாக்கு வங்கி அரசியலை முன்னிறுத்தியே காங்கிரஸ் செயல்பட்டு வந்தது. அதன் காரணமாகவே முஸ்லிம் பெண்களுக்கான நீதியைக் கிடைக்கச் செய்ய அக்கட்சி எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை‘ என்றாா்.

மத்திய சட்டத்துறை அமைச்சா் ரவிசங்கா் பிரசாத் கூறுகையில், ‘முத்தலாக் தடைச்சட்டத்தை இயற்றுவதற்கு 70 ஆண்டுகள் ஆகிவிட்டது. முஸ்லிம் பெண்களின் சுயமரியாதையைக் காக்காகவே அந்தச் சட்டத்தை பாஜக அரசு இயற்றியது. முஸ்லிம் பெண்களுக்கு தொழில்நுட்ப ரீதியில் கல்வியறிவை வழங்குவதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொள்ள உள்ளது‘ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com