63 ஆண்டு போராட்டத்துக்கு தீர்வு: ஜம்மு-காஷ்மீரில் குடியுரிமை பெற்ற வால்மீகி சமுதாயத்தினர்

ஜம்மு: ஜம்மு - காஷ்மீரில் வசித்து வரும் வால்மீகி சமுதாயத்தினருக்கு, 63 ஆண்டு கால போராட்டத்துக்குப் பின் குடியுரிமை சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.
63 ஆண்டு போராட்டத்துக்கு தீர்வு: ஜம்மு-காஷ்மீரில் குடியுரிமை பெற்ற வால்மீகி சமுதாயத்தினர்


ஜம்மு: ஜம்மு - காஷ்மீரில் வசித்து வரும் வால்மீகி சமுதாயத்தினருக்கு, 63 ஆண்டு கால போராட்டத்துக்குப் பின் குடியுரிமை சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

கடந்த 1957 இல் ஜம்மு - காஷ்மீர் மாநில முதல்வராக பக்ஷி குலாம் முகம்மது பதவி வகித்தார். அவரது ஆட்சிக் காலத்தில் ஜம்மு நகரில் சுகாதாரப் பணியாளர்களாகப் பணியாற்ற பஞ்சாபின் குருதாஸ்பூர் மாவட்டத்திலிருந்து வால்மீகி சமுதாயத்தினர் வரவழைக்கப்பட்டனர். தற்போது ஜம்மு நகரின் பக்ஷி நகர், டோக்ரா ஹால், வால்மீகி காலனி, கிறிஸ்தவ காலனி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வால்மீகி சமுதாயத்தினர் சுமார் 3 ஆயிரம் பேர் வசித்து வருகின்றனர். 

இங்கு அவர்களுக்கு வாக்குரிமை, உயர்கல்வி, கல்வி உதவித்தொகை, அரசு வேலைவாய்ப்பு உள்ளிட்ட உரிமைகள் வழங்கப்படவில்லை. எனவே, தங்களுக்கு ஜம்மு - காஷ்மீரில் குடியேற்றச் சான்றிதழ் வழங்க வேண்டும் என்று தொடக்கத்திலிருந்தே அவர்கள் போராடி வந்தனர்.

இந்நிலையில், ஜம்மு - காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் அரசமைப்புச் சட்டத்தின் 370ஆவது பிரிவு  கடந்த ஆண்டு ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து, வால்மீகி சமுதாயத்தினரின் வாழ்வில் புதிய ஒளி பிறந்துள்ளது. 
தற்போதைய ஜம்மு - காஷ்மீர் யூனியன் பிரதேச நிர்வாகம், அவர்களது கோரிக்கை குறித்த பரிசீலனையை விரைவுபடுத்தியது. அவர்களுக்கு குடியேற்றச் சான்றிதழ் வழங்கும் பணிகள் முடுக்கிவிடப்பட்டன. அதன்படி, வால்மீகி சமாஜ் பஸ்டி அமைப்பைச் சேர்ந்த 71 வயது தீபு தேவிக்கு முதலாவதாக சான்றிதழ் வழங்கப்பட்டது. இவர் ஜம்மு மாநகராட்சி சுகாதாரப் பணியாளராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர்.

இதையடுத்து தங்கள் குழந்தைகளுக்கு ஒளிமயமான எதிர்காலம் இருப்பதாக அந்த சமுதாயத்தினர் நம்பிக்கை தெரிவித்தனர். இது தொடர்பாக தீபு தேவி கூறியதாவது:
நான் இங்கு வேண்டாத குடிமகளாக வசித்து வந்தேன். என்னுடைய மரணத்துக்கு முன் ஜம்மு - காஷ்மீரின் குடிமகள் ஆகிவிட வேண்டும் என்பதே எனது விருப்பமாக இருந்தது. தற்போது குடியேற்றச் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளதால் இனி எங்கள் சமுதாயத்தினருக்கு அடிப்படை உரிமைகள் கிடைக்கும். வாக்குரிமை, அரசு வேலைவாய்ப்பு, உயர்கல்வி, தொழிற்கல்வியில் இடஒதுக்கீடு போன்ற உரிமைகளுடன் கெüரவமான வாழ்க்கையை எங்கள் குழந்தைகள் பெறுவார்கள் என்றார்.

"இத்தனை காலமும் நாங்கள் அடிமைகள் போல நடத்தப்பட்டோம். அரசமைப்புச் சட்டப்படி அடிப்படை உரிமைகள்கூட எங்களுக்கு வழங்கப்படவில்லை' என்று குறிப்பிட்டார் ஜம்மு பல்கலைக்கழகத்தில் பிஎச்.டி. பட்டம் முடித்த ஈக்லவ்யா. இவர், வால்மீகி சமுதாயத்தினருக்கு இழைக்கப்படும் அநீதிக்கு எதிராக சட்டப் போராட்டம் நடத்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து வால்மீகி சமாஜ் தலைவர் கரு பட்டி கூறுகையில், "ஒரு கனவு நனவானது போல உள்ளது. எங்கள் சமுதாயத்தினரின் ஒளிமயமான வாழ்க்கைக்கு வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்த பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்' என்றார் மகிழ்ச்சியுடன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com