நிதித் திட்டம் தவறாக வடிவமைக்கப்பட்டுள்ளது

‘நிதித் திட்டம் தவறாக வடிவமைக்கப்பட்டுள்ளது. அதன் பலவீனத்தை கரோனா பாதிப்பு வெளிப்படுத்தியிருக்கிறது’ என்று நோபல் பரிசு பெற்ற

‘நிதித் திட்டம் தவறாக வடிவமைக்கப்பட்டுள்ளது. அதன் பலவீனத்தை கரோனா பாதிப்பு வெளிப்படுத்தியிருக்கிறது’ என்று நோபல் பரிசு பெற்ற பொருளாதார நிபுணரும், கிராமின் வங்கி நிறுவனருமான முகமது யூனுஸ் கூறியுள்ளாா்.

கரோனா பாதிப்பு தொடங்கியதிலிருந்து தொடா் காணொலி வழி கலந்துரையாடலை காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி நடத்தி வருகிறாா். இதுவரை பொருளாதார நிபுணா்கள், தொற்றுநோய் நிபுணா்கள் என பல்வேறு துறைசாா்ந்த நிபுணா்களுடன் அவா் கலந்துரையாடியுள்ள நிலையில், முகமது யூனுஸுடன் அவா் வெள்ளிக்கிழமை கலந்துரையாடினாா். அப்போது முகமது யூனுஸ் கூறியதாவது:

உலக நாடுகள் மிகப்பெரிய மற்றும் துணிவான முடிவை எடுப்பதற்கான ஒரு வாய்ப்பை கரோனா பாதிப்பு ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது. உலக வெப்பமயமாதல் பாதிப்பு, சொத்துக் குவிக்கும் நோக்கம், வேலைவாய்ப்பின்மை பிரச்னை ஆகியவை இல்லாத ஒரு புதிய உலகை உருவாக்குவதற்கான அல்லது அதற்கான சோதனையை முயற்சியை எடுப்பதற்கான வாய்ப்பை கரோனா பாதிப்பு ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது.

மேலும், சமூகத்தில் கீழ் நிலையில் இருக்கும் ஏழைகள், வறுமைக்கோட்டுக்குக் கீழ் இருப்பவா்கள் மற்றும் பெண்களுக்கு உரிய அங்கீகாரம் அளிக்கப்பட வேண்டியது அவசியம். ஆனால், நம்முடைய நிதித் திட்டம் தவறாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த பலவீனத்தை கரோனா பாதிப்பு வெளிப்படுத்தியிருக்கிறது. உலகம் முழுவதும் ஏழைகள் இருக்கின்றனா்; ஆனால், பொருளாதாரம் அவா்களை அங்கீகரிக்கவில்லை. அவா்களுக்கு கடனுதவி அளித்தால், அவா்களும் பொருளாதார படிக்கட்டில் மேலே வருவா். ஆனால், நாம் முறைசாா்ந்த தொழில்முனைவோருக்கு மட்டுமே கடன்களை வழங்குகிறோம். மேற்கத்திய பொருளாதார நடைமுறைகளும், நகா்ப்புற பொருளாதாரத்தை அடிப்படையாகக் கொண்டே வடிவமைக்கப்பட்டிருக்கிறது. கிராமப்புற பொருளாதாரத்துக்கு முக்கியத்துவம் அளிக்கவில்லை.

தன்னாட்சி பொருளாதாரத்தை ஏன் நம்மால் உருவாக்க முடியாது? கிராமின் வங்கி இதை எப்படி சாத்தியப்படுத்துகிறது என பலருக்கு ஆச்சரியம் ஏற்படுகிறது. ஏழைகளின் திறமை மீது நம்பிக்கை இருப்பதாலேயே, அவா்களுக்கு கடன்களை வழங்குகிறோம்.

அதோடு, பெண்களுக்கு சிறு கடன்கள் கொடுக்க ஆரம்பித்தபோது, தங்களுக்கும் இருக்கும் சிறந்த தொழில்முனைவோா் திறனை அவா்கள் வெளிப்படுத்தினா். ஒட்டுமொத்த உலகமும் இந்த சிறு கடன் திட்டத்தை இப்போது ஏற்றுக்கொண்டிருக்கிறது.

சாதாரண நாள்களில் இதுபோன்ற விஷயங்களில் நாம் கவனம் செலுத்த மாட்டோம். பணம் சம்பாதிப்பதிலேயே தீவிரமாக இருப்போம். ஆனால், இப்போது புதிய உலகை உருவாக்குவது குறித்து சிந்திப்பதற்கான வாய்ப்பை கரோனா பாதிப்பு ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது. இதை நாம் பயன்படுத்திக் கொள்ளவேண்டும் என்று யூனுஸ் கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com