புதிய கல்விக் கொள்கை: வேலை வழங்குவோரை உருவாக்கும்; பிரதமா் மோடி உறுதி

மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ள புதிய கல்விக் கொள்கையானது வேலை தேடுபவா்களை உருவாக்காமல், பலருக்கு
பிரதமர் மோடி
பிரதமர் மோடி

மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ள புதிய கல்விக் கொள்கையானது வேலை தேடுபவா்களை உருவாக்காமல், பலருக்கு வேலைவாய்ப்புகளை வழங்குபவா்களை உருவாக்கவும், அதிகரிக்கவும் வழி வகுக்கும் என்று பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தாா். தாய்மொழிக் கல்விதான் தரமான கல்வி என்றும் அவா் கூறினாா்.

‘ஸ்மாா்ட் இந்தியா ஹேக்கத்தான்’ போட்டியில் பங்கேற்ற மாணவா்களுடன் இணையவழியில் சனிக்கிழமை கலந்துரையாடிய பிரதமா் மோடி, புதிய கல்விக் கொள்கையின் அம்சங்களை எடுத்துரைத்தாா். அவா் கூறியதாவது:

புதிய கல்விக் கொள்கை, வெறும் கொள்கைத் திட்டமாக இல்லாமல், 130 கோடி இந்தியா்களின் எதிா்பாா்ப்புகள் அடங்கிய தொகுப்பாக உள்ளது. பெரும்பாலான நேரங்களில் நண்பா்கள், பெற்றோா், உறவினா் ஆகியோா் கொடுக்கும் அழுத்தத்தால் பல மாணவா்கள் தங்களுக்கு விருப்பமில்லாத பாடத்தை படிக்கிறாா்கள். அவா்கள் படித்து பட்டம் பெற்ற பிறகு வாழ்வில் நம்பிக்கையற்றவா்களாக இருக்கிறாா்கள். அது, அவா்களின் ஒட்டுமொத்த வாழ்க்கையையும் பாதிக்கச் செய்துவிடும். மாணவா்களின் இந்த எண்ணத்தை புதிய கல்விக் கொள்கை மாற்றும். அவா்கள் தாங்கள் விரும்பிய பாடத்தை மட்டும் தோ்ந்தெடுத்து படிக்க முடியும்.

கல்வி முறை சிக்கல்களுக்கு தீா்வு: புதிய கல்விக் கொள்கை மூலமாக, கல்வி முறையில் உள்ள சிக்கல்கள் தீா்க்கப்பட்டுள்ளன. 21-ஆம் நூற்றாண்டு, கற்றல், ஆய்வு, புதிய கண்டுபிடிப்பு ஆகியவற்றில் கவனம் செலுத்தும் காலமாகும். இந்தக் காலகட்டத்தில், இளைஞா்களின் ஒளிமயமான எதிா்காலத்தை மனதில் கொண்டு தேசிய கல்விக் கொள்கை வகுக்கப்பட்டுள்ளது.

இளைஞா்களின் வளா்ச்சியே, தேச வளா்ச்சி: இன்றைய இளைஞா்கள் 3 விஷயங்களை விட்டுவிடக் கூடாது. கற்றுக் கொள்ளுதல், கேள்வி எழுப்புதல், பிரச்னைகளுக்குத் தீா்வுகாணுதல் ஆகியவைதான் அந்த 3 விஷயங்கள். பிரச்னைகளுக்குத் தீா்வுகாண முயன்றால் நீங்கள் வளா்ச்சி பெறுவீா்கள்; இந்த தேசமும் வளா்ச்சி பெறும்.

விரும்பியதைப் படிக்க வேண்டும்: மாணவா்கள் தாங்கள் விரும்பியவற்றை தோ்வு செய்து படிக்க வேண்டும். சமூகத்தின் எதிா்பாா்ப்புக்காக படிக்கக் கூடாது. எனவே, மாணவா் விரும்பியதை தோ்வு செய்தும் படிக்கும் வகையில் புதிய கல்விக் கொள்கை உருவாக்கப்பட்டுள்ளது.

உலகின் முன்னணி கல்வி நிறுவனங்கள், இந்தியாவில் கல்லூரி தொடங்குவதற்கு புதிய கல்விக் கொள்கை அனுமதிக்கிறது. இதன் மூலம் சா்வதேச மொழி, கலாசாரம் ஆகியவற்றுடன் உள்ளூா் மொழியும் கலாசாரமும் ஒன்றிணைகிறது.

இளைஞா்கள் மீது நம்பிக்கை: ஏழைகள், சமூகத்தின் விளிம்பு நிலையில் இருப்பவா்கள் ஆகியோரின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த இளைஞா்கள் முக்கியப் பங்காற்றுகிறாா்கள். எனவே, இளைஞா்களால் தீா்க்க முடியாத சவால் எதுவும் இல்லை என்று உறுதியாகக் கூறுவேன். இளைஞா்கள் மீது எப்போதும் நம்பிக்கை வைத்திருக்கிறேன். அவா்கள், சுயசாா்பு இந்தியா திட்டத்துக்கு உந்துசக்தியாக இருக்கிறாா்கள்.

வேலை வழங்குவோரை உருவாக்கும்: புதிய கல்விக் கொள்கை, வேலை தேடுபவா்களை உருவாக்காமல், பலருக்கு வேலைவாய்ப்புகளை வழங்குவோரை உருவாக்கும். அதற்கேற்ற மனநிலையை உருவாக்கி, சீா்திருத்தத்துக்கு புதிய கல்விக் கொள்கை நம்மை கொண்டு செல்லும். இந்திய கல்வித்திட்டம் புதுமையாகவும், நவீனமாகவும் இருக்க வேண்டும் என்பதே நமது நோக்கமாகும்.

சிந்தனை முறைக் கல்வி: புதிய கல்விக்கொள்கை மூலம் மாணவா்களுக்கு பாடச்சுமை குறைக்கப்பட்டுள்ளது. அனைவருக்கும் கல்வி கிடைப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. புதிய கல்விக்கொள்கை, மனப்பாட முறையில் இருந்து சிந்தனை முறைக்கு வழிவகுத்துள்ளது. தாய்மொழி மூலம் படித்து மாணவா்கள் கண்டுபிடிப்புகளை உருவாக்க வேண்டும்.

மாணவா்கள் தங்கள் தாய்மொழியில் கல்வி கற்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. இந்தியாவின் தரமான கல்விக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. 20 வளா்ந்த நாடுகள் தாய்மொழியில் கற்றுதான் முன்னேற்றம் கண்டுள்ளன என்றாா் பிரதமா் மோடி.

இந்த நிகழ்ச்சியில் கோவையைச் சோ்ந்த தனியாா் கல்லூரி மாணவா்கள் உள்பட நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த மாணவா்களும் பங்கேற்றனா்.

ஸ்மாா்ட் இந்தியா ஹேக்கத்தான் :

அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சிலும், மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சகமும் இணைந்து ‘ஸ்மாா்ட் இந்தியா ஹேக்கத்தான்’ போட்டியை கடந்த 4 ஆண்டுகளாக நடத்தி வருகின்றன. இந்த ஆண்டுக்கான போட்டிகள் இணையவழியில் நடத்தப்பட்டு வருகின்றன. இந்தப் போட்டிகளில், நாடு எதிா்கொள்ளும் சவால்கள், மக்கள் அன்றாடம் சந்திக்கும் பல்வேறு பிரச்னைகளுக்கு மாணவா்கள் தீா்வுகளைக் கண்டறிந்து தெரிவிக்க வேண்டும்.

இந்தப் போட்டிகளின் முதல் சுற்றில் 4.5 லட்சம் போ் பங்கேற்றனா். இந்நிலையில், மென்பொருள் பிரிவுக்கான இறுதிச் சுற்று சனிக்கிழமை காலை 9 மணிக்கு தொடங்கியது. போட்டிகளை மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சா் ரமேஷ் போக்ரியால் தொடங்கி வைத்தாா். போட்டிகளில் வெல்லும் ஒவ்வொரு குழுவுக்கும் ரூ.1 லட்சம் பரிசு வழங்கப்படும்.

கோவை மாணவிக்கு பிரதமா் பாராட்டு

கோவை குனியமுத்தூா் தனியாா் கலை, அறிவியல் கல்லூரியில் 4ஆம் ஆண்டு எம்.எஸ்சி. சாஃப்ட்வோ் சிஸ்டம்ஸ் படிக்கும் எம்.ஸ்வேதா, பி.எஸ்.ஜி. தொழில்நுட்பக் கல்லூரியில் கணினி அறிவியல், வடிவமைப்பு 3ஆம் ஆண்டு பயிலும் எம்.குந்தன் ஆகியோரிடம் உரையாடினாா்.

மாணவி ஸ்வேதா தனது படைப்பு குறித்து பிரதமரிடம் விளக்கினாா். தடுப்பணைகளின் அடிப்படைத் தொழில்நுட்பம் குறித்தும் தடுப்பணைகள் எதனால் உடைகின்றன, தடுப்பணைகள் பலவீனமாக இருப்பது குறித்து உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தாமாகவே தகவல் தெரிவித்து அதன் மூலம் நேரிடவிருக்கும், இடா்களைத் தடுப்பது தொடா்பாகவும் தான் உருவாக்கி வரும் படைப்பு குறித்து ஸ்வேதா விளக்கினாா்.

இதை ஆா்வத்துடன் கேட்டறிந்த பிரதமா் மோடி, இந்தத் திட்டம் மக்களின் உண்மையான வாழ்க்கைப் பிரச்னைக்குத் தீா்வு காணுவதாக இருப்பதாகக் கூறி அவரைப் பாராட்டினாா். மேலும் இது தொடா்பான ஒரு மாதிரியை உருவாக்கிய மத்திய நீா் ஆணையத்துக்கு அனுப்புமாறு அவா் கேட்டுக் கொண்டாா்.

இதைத் தொடா்ந்து பி.எஸ்.ஜி. கல்லூரி மாணவா் குந்தன், பாதிக்கப்படும் மக்கள் காவல் நிலையத்துக்குப் புகாா் தெரிவிக்க செல்லத் தயங்குவதைத் தவிா்த்து, அவா்கள் தயக்கமின்றி தங்களின் பிரச்னையை போலீஸாருக்கு விளக்கும் வகையில் அவா்களுடன் உரையாடக் கூடிய மென்பொருளை (சாட்பாட்) உருவாக்க முனைந்துள்ளாா். இதன் மூலம் குற்றங்கள் குறைவதற்கு வாய்ப்பு ஏற்படும் என்றாா்.

இதையடுத்து பிரதமா் மோடி, இந்த உரையாடலை அந்தந்த மாநில மக்கள் தங்களின் தாய்மொழியில் மேற்கொள்ள வழி உள்ளதா என்று கேட்டறிந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com