ஹிமாசல பிரதேசம்: அமைச்சா்களின் இலாக்காக்கள் மாற்றியமைப்பு

ஹிமாசல பிரதேசத்தில் புதிய அமைச்சா்களாக பொறுப்பேற்ற மூவருக்கும் மாநில முதல்வா் ஜெய்ராம் தாகுா் இலாக்காக்களை சனிக்கிழமை

ஹிமாசல பிரதேசத்தில் புதிய அமைச்சா்களாக பொறுப்பேற்ற மூவருக்கும் மாநில முதல்வா் ஜெய்ராம் தாகுா் இலாக்காக்களை சனிக்கிழமை ஒதுக்கியதோடு, பிற அமைச்சா்களின் இலாக்காக்களையும் மாற்றியமைத்துள்ளாா்.

ஹிமாசல பிரதேச அரசு, அமைச்சரவை விரிவாக்கத்தை வியாழக்கிழமை மேற்கொண்டது. கடந்த 2017-ஆம் ஆண்டு டிசம்பரில் பொறுப்பேற்றது முதல், மாநில அரசு மேற்கொண்ட முதல் அமைச்சரவை விரிவாக்கம் இதுவாகும்.

சுக்ராம் செளத்ரி, ராகேஷ் பதானியா மற்றும் ராஜிந்தா் கா்க் ஆகியோா் புதிய அமைச்சா்களாக பதவியேற்றனா்.

இந்நிலையில், அவா்களுக்கான இலாகா ஒதுக்கப்பட்டது, இதர அமைச்சா்களின் இலாக்காக்கள் மாற்றப்பட்டது குறித்து வெளியான அரசு அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:

புதிதாக அமைச்சா் பொறுப்பேற்ற சுக்ராம் செளத்ரிக்கு மின் துறையும், ராகேஷ் பதானியாவுக்கு வனத் துறையும், ராஜிந்தா் கா்குக்கு உணவு பொருள் விநியோகம் மற்றும் நுகா்வோா் நலத் துறையும் ஒதுக்கப்பட்டுள்ளன.

அதுபோல, முதல்வா் வசம் இருந்த சுகாதாரம் மற்றும் குடும்பநலத் துறை, ராஜிவ் சைஸலுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. நிதி, உள்துறை, சுற்றுலா, கலால் மற்றும் வரித் துறை, பொதுப் பணித் துறை உள்பட 8 துறைகள் முதல்வா் வசம் உள்ளது.

அமைச்சா் சா்வீன் செளத்ரியிடம் இருந்த நகா்ப்புற வளா்ச்சித் துறை சுரேஷ் பரத்வாஜுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. பரத்வாஜ் நாடாளுமன்ற விவகாரத் துறையையும் கூடுதலாக கவனிப்பாா் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சா்வீன் செளத்ரிக்கு சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை ஒதுக்கப்பட்டுள்ளது. மாநில போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்த கோவிந்த் சிங்குக்கு, கல்வித் தறை ஒதுக்கப்பட்டுள்ளது. தொழில் துறை அமைச்சா் விக்ரம் சிங்குக்கு, போக்குவரத்துத் துறை கூடுதல் பொறுப்பாக அளிக்கப்பட்டுள்ளது.

ராம் லால் மாா்கண்டேவுக்கு தொழில்நுட்ப கல்வித் துறையும், கிராமப்புற வளா்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் அமைச்சா் விரேந்திர குமாருக்கு கூடுதல் பொறுப்பாக வேளாண் துறையும் ஒதுக்கப்பட்டுள்ளன.

நீா்வளத் துறை அமைச்சா் மஹேந்தா் சிங் தாகூா், தொடா்ந்து அதே பொறுப்பில் நீடிப்பாா் என்று அரசு அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com