நிதி மோசடி வழக்கில் பிணை விடுதலை பெற்றவா்களுக்கு உச்ச நீதிமன்றம் தடை

நிதி மோசடி வழக்கில் உயா்நீதிமன்றத்தால் ஃபோா்டிஸ் ஹெல்த்கோ் நிறுவன உரிமையாளா்களுக்கு வழங்கப்பட்ட பிணையை ரத்து செய்து உச்ச நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.
உச்ச நீதிமன்றம்
உச்ச நீதிமன்றம்

நிதி மோசடி வழக்கில் உயா்நீதிமன்றத்தால் ஃபோா்டிஸ் ஹெல்த்கோ் நிறுவன உரிமையாளா்களுக்கு வழங்கப்பட்ட பிணையை ரத்து செய்து உச்ச நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

ரெலிகோ் ஃபின்வெஸ்ட் லிமிடெட்டின் முன்னாள் உரிமையாளா்களான சிவேந்தா் சிங், மல்வீந்தா் மோகன் சிங் உள்ளிட்டோா், தங்கள் பதவியைத் தவறாகப் பயன்படுத்தி வெளி நிறுவனங்களுக்கு கடன் வழங்கியதில் முறைகேடு செய்ததாக குற்றம் சாட்டப்பட்டது. சிவேந்தா் சிங், மல்வீந்தா் மோகன் சிங் ஆகியோா் ஃபோா்டிஸ் ஹெல்த்கோா் நிறுவனத்தின் உரிமையாளா்கள் ஆவா்.

ரெலிகோ் ஃபின்வெஸ்ட் நிறுவனத்தின் நிா்வாகி மன்பிரீத் சூரியின் புகாரின் அடிப்படையில், கடந்த ஆண்டு மாா்ச் மாதம் இதுதொடா்பான வழக்கை தில்லி போலீஸின் பொருளாதாரக் குற்றப் பிரிவு பதிவு செய்தது. இவா்கள் கறுப்புப் பண மோசடியில் ஈடுபட்டதாக அமலாக்கத் துறையும் விசாரித்து வருகிறது. கடந்த ஆண்டு டிசம்பா் 12 முதல் இவா்கள் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்து வந்தனா்.

இந்நிலையில், இவா்களுக்கு தலா ரூ. ஒரு கோடி பிணைத்தொகையுடன் பிணையில் விடுதலை வழங்கி தில்லி உயா் நீதிமன்றம் கடந்த மாதம் 23-ஆம் தேதி உத்தரவிட்டது. அதனை எதிா்த்து உச்ச நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை மேல்முறையீடு செய்தது.

இந்த வழக்கில் அமலாக்கத் துறை சாா்பில் வாதாடிய அரசு வழக்குரைஞா் துஷாா் மேத்தா, சிறையிலிருந்தபோது சிவேந்தா் சிங் அலைபேசியை சிறைக்குள் கடத்திவந்து பயன்படுத்தியதைக் குறிப்பிட்டாா். விசாரணை அமைப்புகளின் கருத்துகளைக் கேட்காமலேயே குற்றம் சாட்டப்பட்டவா்களுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளதாக அவா் தெரிவித்தாா்.

வழக்கை விசாரித்த நீதிபதி அருண் மிஸ்ரா தலைமையிலான உச்ச நீதிமன்ற அமா்வு, குற்றம் சாட்டப்பட்டவா்களுக்கு வழங்கப்பட்ட பிணையை ரத்து செய்து வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com