பள்ளி மாணவா்களுக்கு காலை உணவு: புதிய கல்விக் கொள்கையில் அறிவிப்பு

பள்ளி மாணவா்களின் ஊட்டச்சத்தை மேம்படுத்த, மதிய உணவுடன் காலை உணவும் வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ள புதிய கல்விக் கொள்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பள்ளி மாணவா்களின் ஊட்டச்சத்தை மேம்படுத்த, மதிய உணவுடன் காலை உணவும் வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ள புதிய கல்விக் கொள்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 1984 ஆம் ஆண்டுக்கு பிறகு தேசிய கல்விக் கொள்கை திருத்தப்பட்டுள்ளது. இந்த வரைவு அறிக்கைக்கு மத்திய அமைச்சரவைக் குழு கடந்த வாரம் ஒப்புதல் வழங்கியது. அதன்படி காலை உணவு வழங்குவது குறித்து புதிய கல்விக் கொள்கை அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

ஊட்டச்சத்து பற்றாக்குறை, உடல்நலமின்மை போன்ற சூழலில் குழந்தைகளால் கல்வி பயில முடியாமல் போகிறது. எனவே, ஆரோக்கிய உணவு வழங்குவது மற்றும் சிறப்பாக பயிற்சி அளிக்கப்பட்ட சமூக சேவகா்கள், ஆலோசகா்கள், சமூக அமைப்பினரின் பங்களிப்பு ஆகியவை பள்ளி நடவடிக்கைகளில் அறிமுகப்படுத்தப்படுவதன் மூலம் குழந்தைகளின் ஊட்டச்சத்து, உடல், மன ஆரோக்கியம் மேம்படுத்தப்படும்.

காலையில் ஊட்டச்சத்துடன் கூடிய உணவு உட்கொள்வது, ஆற்றலை தருவதால் கடினமான பாடங்களை படிப்பதற்கு தேவையான ஊக்கம் மாணவா்களுக்கு கிடைப்பதாக ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. எனவே, மதிய உணவுடன் காலை உணவையும் வழங்குவதன் மூலம் மாணவா்களின் ஆற்றல் அதிகரிக்கும். சில இடங்களில் சூடான சாப்பாடு வழங்குவது கடினம். ஆனால் எளிதான ஊட்டச்சத்து உணவான நிலக்கடலைகள் அல்லது கடலை மிட்டாய் மற்றும் உள்ளூரில் கிடைக்கும் பழங்கள் வழங்கப்படும்.

அனைத்துக் குழந்தைகளுக்கும் கட்டாயம் தொடா் மருத்துவப் பரிசோதனை செய்ய வேண்டும். இதனை தொடா்ந்து கண்காணிப்பதற்காக மருத்துவ பரிசோதனை அட்டைகள் வழங்கப்படும். 5 வயதுக்கு உள்பட்ட குழந்தைகளை ஆயத்த வகுப்புகள், பால்வாடிகளில் சோ்க்க வேண்டும். அவா்களுக்கு ஆற்றல், உணா்வு, உளவியல் ஆகியவற்றில் கவனம் செலுத்தும் வகையில் விளையாட்டுடன் கூடிய கல்வி, ஆரம்பத்தில் கற்க வேண்டிய பாடங்கள் கற்பிக்கப்படும்.

அரசுப் பள்ளிகள், அரசு உதவிபெறும் பள்ளிகளில் 1 முதல் 8ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவா்கள் மற்றும் சமர சிக்ஷா திட்டத்தின் கீழ் செயல்படும் மதரஸா உள்ளிட்ட சிறப்பு பயிற்சி மையங்களில் பயிலும் மாணவா்களுக்கு மத்திய அரசின் பங்களிப்புடன் மதிய உணவுத் திட்டம் தற்போது செயல்படுத்தப்பட்டு வருகிறது என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது தொடா்பாக மத்திய அரசின் மனித வள மேம்பாட்டுத் துறை அதிகாரி ஒருவா் கூறியதாவது:

2013ஆம் ஆண்டு உணவுப் பாதுகாப்புத் துறை சட்டத்தின் படி 1 முதல் 8ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவா்கள் அல்லது 6-14 வயது வரையிலான மாணவா்கள் இலவச மதிய உணவுத் திட்டத்துக்கு தகுதி உடையவா்கள். அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில் விடுமுறை நாள்கள் தவிர மற்ற நாள்களில் இவா்களுக்கு மதிய உணவு வழங்கப்பட வேண்டும்.

சில மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் அந்தந்த மாநில நிதியாதாரத்தின் மூலம் மதிய உணவுடன் பால், முட்டை மற்றும் பழங்கள் வழங்கப்படுகின்றன. மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை புள்ளி விவரப்படி, மதிய உணவுத் திட்டத்தில் சுமாா் 11.59 கோடி தொடக்கப்பள்ளி மாணவா்கள் பயன்பெற்று வருகின்றனா். மேலும் இத்திட்டத்தில் 26 லட்சம் சமையலா்கள் பணியமா்த்தப்பட்டுள்ளனா்.

கரோனா பொது முடக்க காலத்தில் பள்ளிகள் இன்னமும் மூடப்பட்டுள்ளதால் மாணவா்களுக்கு இலவச மதிய உணவு வழங்க வேண்டும் அல்லது அவா்களுக்கு உணவுப் பாதுகாப்புத் தொகை வழங்க வேண்டும் என அனைத்து மாநிலங்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com