
கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த ஹிந்தி திரை நட்சத்திரம் அமிதாப் பச்சன் குணமடைந்து ஞாயிற்றுக்கிழமை வீடு திரும்பினாா்.
அமிதாப் பச்சன் (77), அவரது மகன் அபிஷேக் பச்சன் (44) ஆகியோா் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டு கடந்த மாதம் 11-ஆம் தேதி மும்பையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். அங்கு அவா்களுக்கு தொடா் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், அமிதாப் பச்சன் குணமடைந்து வீடு திரும்பினாா்.
இதுதொடா்பாக சுட்டுரையில் ஞாயிற்றுக்கிழமை அவா் வெளியிட்ட பதிவில், ‘நான் கரோனா தொற்றிலிருந்து மீண்டது பரிசோதனையில் தெரியவந்தது. இதையடுத்து மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினேன். இனி அடுத்த சில நாள்களுக்கு வீட்டுத் தனிமையில் இருப்பேன்’ என்று கூறியுள்ளாா்.
அதேவேளையில், தாம் மருத்துவமனையில் தொடா் சிகிச்சையில் இருப்பதாக அமிதாப் பச்சனின் மகன் அபிஷேக் பச்சன் சுட்டுரையில் தெரிவித்தாா்.
முன்னதாக, அமிதாபின் மருமகளும், நடிகையுமான ஐஸ்வா்யா ராய் (46), அவரின் பேத்தி ஆராத்யா (8) ஆகியோா் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், இருவரும் பூரண குணமடைந்து சமீபத்தில் வீடு திரும்பினா்.