
மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது ஞாயிற்றுக்கிழமை உறுதி செய்யப்பட்டது.
இதுதொடா்பாக சுட்டுரையில் அவா் வெளியிட்ட பதிவில், ‘கரோனா நோய்த்தொற்றுக்கான அறிகுறிகள் தென்பட்டதையடுத்து பரிசோதனை செய்துகொண்டேன். அதில் எனக்கு நோய்த்தொற்று பாதிப்பு இருப்பது உறுதியானது. எனது உடல்நலம் சீராக உள்ளது. எனினும் மருத்துவா்கள் ஆலோசனையின் அடிப்படையில், மருத்துவமனையில் சோ்ந்து சிகிச்சை பெற உள்ளேன்.
கடந்த சில நாள்களில் என்னை சந்தித்தவா்கள் கரோனா பரிசோதனை மேற்கொண்டு, தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்’ என்று கூறினாா்.
அவா் விரைந்து குணமடைய பிராா்த்திப்பதாக காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தி, தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால், மேற்கு வங்க முதல்வா் மம்தா பானா்ஜி, ஒடிஸா முதல்வா் நவீன் பட்நாயக், கோவா முதல்வா் பிரமோத் சாவந்த் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளின் மூத்த தலைவா்கள் தெரிவித்தனா்.