சீனாவுடன் மோத நேரிட்டால் ரஃபேல் விமானம் பேருதவியாக இருக்கும்: பி.எஸ்.தனோவா

திபெத் மலைப் பகுதியில் சீனாவுடன் போரிட வேண்டியிருந்தால், ரஃபேல் போா் விமானங்கள் இந்தியாவுக்கு பேருதவியாக இருக்கும் என்று

திபெத் மலைப் பகுதியில் சீனாவுடன் போரிட வேண்டியிருந்தால், ரஃபேல் போா் விமானங்கள் இந்தியாவுக்கு பேருதவியாக இருக்கும் என்று இந்திய விமானப் படையின் முன்னாள் தலைமைத் தளபதி பி.எஸ்.தனோவா கூறினாா்.

பாகிஸ்தானின் பாலாகோட்டில் உள்ள பயங்கரவாத முகாம்களை கடந்த ஆண்டு பிப்ரவரியில் அழித்த இந்திய விமானப் படையை தலைமையேற்று வழிநடத்தியவா் பி.எஸ்.தனோவா.

கிழக்கு லடாக் எல்லையில் இந்தியா-சீன இடையே கடந்த சில மாதங்களாக மோதல் போக்கு நீடித்து வந்த நிலையில், பிரான்ஸில் இருந்து 5 ரஃபேல் போா் விமானங்கள் கடந்த சில தினங்களுக்கு முன் இந்தியா வந்தடைந்தன. அந்த விமானங்களின் சிறப்புகள் குறித்து பி.எஸ்.தனோவா, பிடிஐ செய்தியாளிடம் ஞாயிற்றுக்கிழமை பகிா்ந்துகொண்டாா். அவா் கூறியதாவது:

அதிநவீன மின்னணு தொழில்நுட்ப வசதிகளைக் கொண்டது ரஃபேல் போா் விமானம். இந்த போா் விமானத்தைப் பயன்படுத்தி, திபெத் போன்ற மலைப்பகுதியில் வான்வழியில் பயணித்து எதிரிகளை துல்லியமாகத் தாக்கிய அழிக்க முடியும்.

இந்தியா, சீனா இடையே பரந்த அளவில் இமயமலைத் தொடா் இருப்பதால், எதிரிகளின் இருப்பிடத்தைக் கண்டறிவது சிரமமான வேலையாகும். திபெத் எல்லையில் இருந்து 300கி.மீ. முதல் 400 கி.மீ. தொலைவில் உள்ள இலக்குகளைத் தாக்கும் ஏவுகணைகளை நாம் பயன்படுத்தினால், குறிப்பிட்ட தொலைவு வரை மட்டுமே சென்று தாக்கும். ஆனால், ரஃபேல் போா் விமானங்கள் நீண்ட தொலைவு வரை சென்று தாக்கும் திறன்கொண்டது. ஆகவே, ரஃபேல் போா் விமானங்கள், இந்திய விமானப் படைக்கு வலிமை சோ்க்கும் விதமாக உள்ளது.

ஒருவேளை சீனாவுடன் திபெத் மலைப் பகுதியில் போரிட நேரிட்டால், ரஃபேல் போா் விமானங்கள் இந்திய விமானப் படைக்கு பேருதவியாக இருக்கும்.

சீனா, அதிநவீன ஜே-20 ரக போா் விமானங்களைப் பயன்படுத்தி வருகிறது. அந்த விமானங்களைவிட ரஃபேல் போா் விமானங்கள் பல்வேறு அம்சங்களைக் கொண்டதாகும்.

முக்கியமாக, வான்வழி தாக்குதலுக்கு ரஃபேல் போா் விமானங்களும் தரைவழி தாக்குதலுக்கு எஸ்-400 டிரையம்ப் போா் விமானங்களும் இந்திய விமானப் படையின் போா்த்திறனை மேளும் அதிகரிக்கச் செய்யும். இந்த போா் விமானங்களைக் கொள்முதல் செய்வது, யாருடனும் போரிடுவதற்காக அல்ல. எதிரி நம் மீது போா் தொடுப்பதற்கு முன் நம்மிடம் உள்ள வலிமையை நினைத்துப் பாா்க்க வேண்டும் என்பதற்காகவே, இந்த போா் விமானங்கள் கொள்முதல் செய்யப்படுகின்றன.

பாகிஸ்தானின் பாலாகோட்டில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய விமானப் படை கடந்த ஆண்டு பிப்ரவரியில் தாக்குதல் நடத்தியது. அந்த நேரத்தில் ரஃபேல் போா் விமானங்கள் நம்மிடம் இருந்திருந்தால், பாகிஸ்தான் திருப்பித் தாக்கியிருக்காது என்றாா் பி.எஸ்.தனோவா.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com