
Search on for COVID patients who gave false information in Lucknow
லக்னௌவில் கரோனா பரிசோதனை செய்த 2,300 பேர் தவறான தகவல்களைக் கொடுத்துள்ளதாகச் சுகாதாரத் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
ஜூலை 23 முதல் ஜூலை 31 வரை பல்வேறு தனியார் மற்றும் அரசு ஆய்வகங்களில் கரோனா பரிசோதனை மேற்கொண்ட 2,290 பேர் அவர்களின் பெயர், தொலைபேசி எண்கள் மற்றும் முகவரியைத் தவறாக வழங்கியுள்ளனர்.
தவறான தகவல்களைக் கொடுத்த 1,171 பேரை இதுவரை காவல்துறை கண்டறிந்த நிலையில், மீதமுள்ளவர்களைத் தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
தவறான தகவலளித்த அனைவரையும் கண்டறியமுடியாத நிலையில், காவல்துறைக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது என்று மூத்த சுகாதாரத்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.
லக்னௌ தலைமைக் காவலர் சுஜித் பாண்டே கூறுகையில்,
காவல்துறை இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டனர். மேலும், கரோனா மருத்துவமனை மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட மையங்களில் ஒருங்கிணைந்து இதுவரை 1,171 பேரைக் கண்காணித்து சுகாதாரத்துறைக்குத் தகவல் அளித்துள்ளோம்.
மீதமுள்ளவர்களைக் கண்டறிவதற்கான முயற்சிகள் அனைத்தும் தொடர்ந்து நடந்து வருகின்றன என்று பாண்டே கூறியுள்ளார். கரோனா மாதிரிகள் எடுப்பதற்கு முன் தொலைபேசி எண்களைச் சரிபார்க்க மருத்துவமனைகள் மற்றும் ஆய்வகங்களுக்கு காவல்துறையினர் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.
இதுவரை லக்னௌ மாநிலத்தில் 8,686 பேர் தொற்றுக்குப் பாதிக்கப்பட்டுள்ளனர், அதில் 4,012 பேர் மருத்துவமனை சிகிச்சையில் உள்ளனர். 4,559 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை 115 பேர் தொற்றுக்குப் பலியாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், கரோனா பாதித்து மாநில அமைச்சர் கமலா ராணி வருண் உயிரிழந்த நிலையில், பாஜக மாநிலத் தலைவர் ஸ்வந்திரா தேவ் சிங் மற்றும் அமைச்சர் மகேந்திர சிங் ஆகியோருக்கு கரோனா இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.