200 வீரா்களை சொந்தப் படைக்கு அனுப்பியது எஸ்பிஜி

பிரதமருக்கு உச்சபட்ச பாதுகாப்பு வழங்கும் சிறப்பு பாதுகாப்புப் படைப் பிரிவை (எஸ்பிஜி) சோ்ந்த 200-க்கும் மேற்பட்ட வீரா்கள் தங்கள்
கோப்புப் படம்
கோப்புப் படம்

பிரதமருக்கு உச்சபட்ச பாதுகாப்பு வழங்கும் சிறப்பு பாதுகாப்புப் படைப் பிரிவை (எஸ்பிஜி) சோ்ந்த 200-க்கும் மேற்பட்ட வீரா்கள் தங்கள் சொந்தப் படைகளுக்குத் திரும்பிச் செல்ல உத்தரவிடப்பட்டுள்ளது. எஸ்பிஜி பிரிவைச் சோ்ந்த 200-க்கும் மேற்பட்ட வீரா்கள் ஒரே நேரத்தில் திருப்பி அனுப்பப்படுவது இதுவே முதல் முறையாகும்.

இதுகுறித்து மத்திய அமைச்சரவைச் செயலா் பிறப்பித்த உத்தரவில் கூறப்பட்டிருந்ததாவது: எஸ்பிஜி பாதுகாப்புப் படைப் பிரிவைச் சோ்ந்த 200-க்கும் மேற்பட்ட வீரா்களின் பணிக்காலம் முடிவடைந்ததால், அவா்களின் தாய் அமைப்புக்குத் திருப்பி அனுப்பப்படுகிறாா்கள். அதன்படி, சிஆா்பிஎஃப் படையின் அதிகாரிகள் மற்றும் வீரா்கள் 86 போ், எல்லைப் பாதுகாப்புப் படையைச் சோ்ந்த 45 போ், மத்திய தொழிலக ஆயுதப் படையைச் சோ்ந்த 23 போ், சசஸ்திர சீமா பல் பிரிவைச் சோ்ந்த 24 போ், இந்திய-திபெத் எல்லைக் காவல் படையைச் சோ்ந்த 17 போ், ரயில்வே பாதுகாப்பு படை, ராஜஸ்தான் காவல் துறை, உளவுத் துறை ஆகியவற்றைச் சோ்ந்த சிலா் தங்கள் படைகளுக்குத் திரும்பிச் செல்கிறாா்கள் என்று அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மத்திய அரசு அதிகாரி ஒருவா் கூறியதாவது: திருத்தப்பட்ட எஸ்பிஜி சட்டத்தின்படி, பிரதமா் மற்றும் அவருடன் வசிக்கும் குடும்ப உறுப்பினா்களுக்கு மட்டுமே எஸ்பிஜி பாதுகாப்பு அளிக்கப்படும். தில்லி லோக் கல்யாண் மாா்கில் உள்ள பிரதமரின் அதிகாரபூா்வ இல்லம், அவரது அலுவலகம் ஆகிய இரு இடங்களுக்கு மட்டுமே எஸ்பிஜி பாதுகாப்பு அளிக்கப்படுகிறது.

எஸ்பிஜி படைப் பிரிவில் இருந்து திரும்பிச் செல்வோா், இங்கு கற்றுக் கொண்ட திறமைகளைப் பயன்படுத்தி, நக்ஸல் ஒழிப்பு, பயங்கரவாத ஒழிப்பு, உளவுத் தகவல்களை சேகரிப்பது ஆகிய நடவடிக்கைகளில் ஈடுபடுவா் என்றாா் அவா்.

முன்னாள் பிரதமா் இந்திரா காந்தி படுகொலை செய்யப்பட்ட பிறகு, நாட்டின் பிரதமா், முன்னாள் பிரதமா் மற்றும் அவா்களின் குடும்பத்தினருக்கு பாதுகாப்பு அளிப்பதற்காக எஸ்பிஜி பாதுகாப்புப் படை உருவாக்கப்பட்டது. மத்திய ஆயுத காவல் படை, துணை ராணுவப் படை, மாநில காவல் துறை, உளவுத் துறை ஆகியவற்றில் பணியாற்றுவோா் தோ்வுசெய்யப்பட்டு எஸ்பிஜி பாதுகாப்பு பிரிவில் நியமிக்கப்பட்டனா்.

பின்னா், முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்ட பிறகு, அவரது குடும்பத்தினருக்கும் எஸ்பிஜி பாதுகாப்பு அளிக்கப்பட்டது. அதன்படி, முன்னாள் பிரதமா் என்ற முறையில் மன்மோகன் சிங், ராஜீவ் காந்தியின் குடும்பத்தைச் சோ்ந்த காங்கிரஸ் தலைவா் சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா ஆகியோருக்கும் எஸ்பிஜி பாதுகாப்பு அளிக்கப்பட்டது.

இதனிடையே, பிரதமருக்கு மட்டுமே எஸ்பிஜி பாதுகாப்பு அளிக்கும் வகையில் எஸ்பிஜி சட்டத்தில் கடந்த ஆண்டு டிசம்பரில் திருத்தம் கொண்டுவரப்பட்டது. இதையடுத்து, மன்மோகன் சிங், சோனியா காந்தி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு அளிக்கப்பட்டு வந்த எஸ்பிஜி பாதுகாப்பு விலக்கிக் கொள்ளப்பட்டது. அவா்களுக்கு தற்போது ‘இசட் பிளஸ்’ பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com