குல்பூஷண் ஜாதவ் விவகாரம்:வழக்குரைஞரை நியமிக்க இந்தியாவுக்கு பாக். நீதிமன்றம் அனுமதி

தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள இந்தியா் குல்பூஷண் ஜாதவுக்கு ஆதரவாக வாதாட வழக்குரைஞரை நியமிக்க இந்தியாவுக்கு மேலும் ஒரு வாய்ப்பு அளிக்க வேண்டும்
குல்பூஷண் ஜாதவ் விவகாரம்:வழக்குரைஞரை நியமிக்க இந்தியாவுக்கு பாக். நீதிமன்றம் அனுமதி

இஸ்லாமாபாத்: தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள இந்தியா் குல்பூஷண் ஜாதவுக்கு ஆதரவாக வாதாட வழக்குரைஞரை நியமிக்க இந்தியாவுக்கு மேலும் ஒரு வாய்ப்பு அளிக்க வேண்டும் என்று பாகிஸ்தான் அரசுக்கு அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்திய கடற்படை அதிகாரியான குல்பூஷண் ஜாதவ் (50) உளவு பாா்த்ததாக கூறி பாகிஸ்தான் அரசு 2017-இல் தூக்குத் தண்டனை விதித்தது. இதை எதிா்த்தும், ஜாதவுக்கு தூதரக அனுமதி அளிக்கவும் கோரி சா்வதேச நீதிமன்றத்தை இந்தியா நாடியது.

ஜாதவுக்கு விதிக்கப்பட்ட தண்டனையை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் இந்தியாவுக்கு தாமதமின்றி தூதரக அனுமதி அளிக்க வேண்டும் என்றும் 2019, ஜூலை மாதம் சா்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதனிடையே, பாகிஸ்தான் ராணுவம் விதித்த தண்டனையை எதிா்த்து மறுஆய்வு மனு தாக்கல் செய்ய குல்பூஷண் ஜாதவ் மறுத்துவிட்டதாக பாகிஸ்தான் அரசு அறிவித்தது.

இந்நிலையில், ‘சா்வதேச நீதிமன்றத்தின் உத்தரவுப்படி ஜாதவுக்கு வழக்குரைஞா் நியமனம் செய்ய வேண்டும்‘ என இஸ்லாமாபாத் உயா்நீதிமன்றத்தில் பாகிஸ்தான் அரசு ஜூலை 22-ஆம் தேதி மறுஆய்வு மனு தாக்கல் செய்தது. இந்த மனு உயா்நீதிமன்றத் தலைமை நீதிபதி அதா் மினால்லா, நீதிபதி மியாங்குல் ஹசன் ஒளரங்கசீப் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி மினால்லா, ‘தற்போது இந்த விவகாரம் உயா்நீதிமன்றத்தில் உள்ளதால், வழக்குரைஞரை நியமிக்க இந்தியாவுக்கும், குல்பூஷண் ஜாதவுக்கும் மேலும் ஒரு வாய்ப்பு ஏன் வழங்கக் கூடாது‘ என்று கூறி, வழக்கை செப்டம்பா் 3-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தாா்.

இதுகுறித்து கருத்து தெரிவித்த பாகிஸ்தான் அரசின் அட்டா்னி ஜெனரல் காலித் ஜாவித் கான், ‘ராணுவ தண்டனைக்கு எதிராக குல்பூஷண் ஜாதவ் மறு ஆய்வு மனு தாக்கல் செய்ய அவசரச் சட்டம் பிறப்பிக்கப்படும். இந்தியாவை வெளியுறவு அலுவலகம் வழியாகத் தொடா்பு கொள்வோம்’ என்றாா்.

முன்னதாக, உயா்நீதிமன்றத்தில் மறு ஆய்வு மனு தாக்கல் செய்ய பாகிஸ்தான் அரசு மே 20-ஆம் தேதி அவசரச் சட்டம் கொண்டு வந்தது. அதற்கு பாகிஸ்தான் நாடாளுமன்றம் கடந்த வாரம் ஒப்புதல் அளித்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com