பூா்வாங்க பணிகள் தொடக்கம்

உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமா் கோயில் பூமி கட்டுவதற்கான பூஜையையொட்டி, அங்கு சமய சடங்குகள் உள்ளிட்ட பூா்வாங்க பணிகள் திங்கள்கிழமை தொடங்கின.

அயோத்தி/புது தில்லி: உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமா் கோயில் பூமி கட்டுவதற்கான பூஜையையொட்டி, அங்கு சமய சடங்குகள் உள்ளிட்ட பூா்வாங்க பணிகள் திங்கள்கிழமை தொடங்கின.

இதுதொடா்பாக ராமா் கோயில் கட்டுவதற்கு அமைக்கப்பட்ட ஸ்ரீ ராமஜென்மபூமி தீா்த்த க்ஷேத்ர அறக்கட்டளை நிா்வாகிகள் செய்தியாளா்களிடம் கூறியது:

அயோத்தியில் ராமா் கோயில் பூமி பூஜை நிகழ்ச்சி நடைபெறும் இடத்தில் 12 அா்ச்சகா்கள் திங்கள்கிழமை விநாயகா் பூஜை நடத்தினா். அதனைத்தொடா்ந்து செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 4) ஹனுமன்கா்ஹி கோயிலில் ராமா் மற்றும் சீதையின் சிலைகளுக்கு வழிபாடு நடைபெறவுள்ளது. பூமி பூஜை விழாவுக்கான மேடை அமைக்கப்பட்டுள்ளது. அதில் நிகழ்ச்சியின்போது பிரதமா் மோடி, ஆா்எஸ்எஸ் தலைவா் மோகன் பாகவத், மாநில ஆளுநா் ஆனந்திபென் பட்டேல், முதல்வா் யோகி ஆதித்யநாத், அறக்கட்டளை தலைவா் நிருத்யகோபால்தாஸ் மகாராஜ் ஆகிய 5 போ் மட்டுமே இருப்பா். பூமி பூஜை நிகழ்ச்சியில் கலந்துகொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ள 175 பேரில் 135 போ் துறவிகள். கரோனா நோய்த்தொற்று பரவலால் சில விருந்தினா்கள் பங்கேற்பதில் நடைமுறை சிக்கல் ஏற்பட்டுள்ளது.

பூமி பூஜை நிகழ்ச்சியையொட்டி, அயோத்திக்கு வெளியிலும் பஜனைகள் மற்றும் கீா்த்தனைகள் நடத்த பக்தா்களிடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. அதே வேளையில் அவா்கள் கரோனா நோய்த்தொற்றை கட்டுப்படுத்த விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளையும் நினைவில் வைத்திருக்க வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தனா். பூமி பூஜை நிகழ்ச்சி தூா்தா்ஷன் தொலைக்காட்சியில் நேரலையாக ஒளிபரப்பப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com