அடுத்தது காசி, மதுராதான் : கர்நாடக அமைச்சர் சர்ச்சைப் பேச்சு 

காசியிலும் மதுராவிலும் உள்ள மசூதிகள் கோவில்களுக்கு வழிவிடவேண்டும் என்று கர்நாடக மாநில அமைச்சர் கே.எஸ். ஈஸ்வரப்பா தெரிவித்த கருத்து சர்ச்சையை எழுப்பியுள்ளது.
கர்நாடக அமைச்சர் கே.எஸ். ஈஸ்வரப்பா
கர்நாடக அமைச்சர் கே.எஸ். ஈஸ்வரப்பா

காசியிலும் மதுராவிலும் உள்ள மசூதிகள் கோவில்களுக்கு வழிவிடவேண்டும் என்று கர்நாடக மாநில அமைச்சர் கே.எஸ். ஈஸ்வரப்பா தெரிவித்த கருத்து சர்ச்சையை எழுப்பியுள்ளது.

உத்தரப் பிரதேசத்தில் அயோத்தியில் ராமர் கோவில் கட்ட புதன்கிழமை பூமிபூஜை நடத்தப்பட்டு பிரதமர் நரேந்திர மோடியால் அடிக்கல் நாட்டப்பட்டது.

இந்த நிலையில் எடியூரப்பா தலைமையில் கர்நாடகத்தில் நடைபெறும் பாஜக ஆட்சியில் ஊரகத் துறை அமைச்சராகவுள்ள கே.எஸ். ஈஸ்வரப்பா மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

கர்நாடக அமைச்சர் கே.எஸ். ஈஸ்வரப்பா, “அயோத்தியில் ராமர் கோவிலுக்கு பூமி பூஜை போடப்பட்டுள்ளதன் மூலம் அடிமைத்தனம் துடைத்தெறியப்பட்டுள்ளது. அடுத்தது காசியும் மதுராவும்தான். அங்குள்ள மசூதிகள் கோவில்களுக்கு வழிவிட வேண்டும்” என்று சர்ச்சைக்குரிய வகையில்  கருத்துத் தெரிவித்துள்ளார்.

எனினும், ஈஸ்வரப்பாவின் கருத்து குறித்து கருத்து தெரிவிக்க காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் பி.எல். சங்கர் மறுத்துவிட்டார். அவர் பேசும்போது, “இது பா.ஜ.க.வின் அதிகாரப்பூர்வ நிலைப்பாடா அல்லது ஈஸ்வரப்பாவின் தனிப்பட்ட நிலைப்பாடா என்பது எங்களுக்குத் தெரியாது. இதுகுறித்து பாஜக ஒரு நிலைப்பாட்டை எடுத்தால் மட்டுமே இந்த விஷயத்தில் நாங்கள் கருத்து தெரிவிப்போம்” என்றார். 

அயோத்தியில் ராமர் கோவிலின்  பூமி பூஜையை காங்கிரஸ் வரவேற்றுள்ளது, ஆனால் இந்த பிரச்னை, மக்களைப் பிளவுபடுத்தாமல் ஒன்றிணைக்கப்  பயன்படுத்த வேண்டும் என்று கூறியுள்ளது. ‘அனைத்து காங்கிரஸ்காரர்களின் இதயத்திலும் ராமர் இருக்கிறார்’ என்று காங்கிரஸ் தலைவர் டி.கே. சிவகுமார் செவ்வாயன்று தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com