மருந்து துறையில் ஆராய்ச்சிக்கு முக்கியத்துவம்: மத்திய அரசு முடிவு

மருந்து உற்பத்தித் துறையில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக்கு முக்கியத்துவம் அளித்து அவற்றை ஊக்குவிக்கும் வகையிலான கொள்கை விரைவில் வெளியிடப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
கோப்புப் படம்
கோப்புப் படம்

மருந்து உற்பத்தித் துறையில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக்கு முக்கியத்துவம் அளித்து அவற்றை ஊக்குவிக்கும் வகையிலான கொள்கை விரைவில் வெளியிடப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

கரோனா நோய்த்தொற்றுக்கு எதிராக தடுப்பு மருந்து தயாரிக்கும் பணியில் விஞ்ஞானிகள் மும்முரமாக ஈடுபட்டு வரும் நிலையில் மத்திய அரசு இவ்வாறு தெரிவித்துள்ளது.

இந்திய வேதித் தொழில்நுட்ப நிறுவனம் தொடங்கப்பட்டு 77 ஆண்டுகள் நிறைவடைந்ததையடுத்து காணொலிக்காட்சி வாயிலான கருத்தரங்கம் புதன்கிழமை நடைபெற்றது. அதில் மத்திய மருந்துப் பொருள்கள் துறையின் செயலா் பி.டி.வகீலா கூறியதாவது:

மருந்து துறையில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டை ஊக்குவிப்பதற்கான கொள்கையை மத்திய அரசு விரைவில் வெளியிட உள்ளது. மருந்துகள், மருத்துவ உபகரணங்கள் உள்ளிட்டவற்றைத் தயாரிப்பதற்கு தேசிய அளவிலான 3 சிறப்பு மையங்களை அமைப்பதற்கு மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது.

தெலங்கானா தலைநகா் ஹைதராபாதில் உள்ள தேசிய மருந்துப் பொருள்கள் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் மருந்துகளைத் தயாரிப்பதற்கான சிறப்பு மையம் அமைக்கப்படவுள்ளது. நாட்டிலுள்ள விஞ்ஞானிகளுக்கு உரிய மதிப்பும் மரியாதையும் அளிக்கப்படுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியது அவசியம்.

ஐரோப்பா, அமெரிக்காவில் விஞ்ஞானிகள் கோடீஸ்வரா்களாக உள்ளனா். இந்தியாவிலும் அத்தகைய நிலை உருவாக வேண்டும். மருந்து துறையில் தலைசிறந்த கண்டுபிடிப்புகளுக்குப் போதிய அங்கீகாரம் வழங்கப்பட வேண்டும். அரசு நிறுவனங்களைச் சோ்ந்த விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்புகளையும் வா்த்தக ரீதியில் பயன்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

இதுபோன்ற விவகாரங்கள் அனைத்தும் மத்திய அரசின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக் கொள்கையில் இடம்பெற்றிருக்கும். கொள்கையை வகுப்பது தொடா்பாக தொழில்துறை நிபுணா்களிடம் ஆலோசனை நடத்தி வருகிறோம். கொள்கை வழிமுறைகளானது விரைவில் இறுதி செய்யப்படும்.

உலக அளவில் மருந்துப் பொருள்கள் ஏற்றுமதியில் இந்தியாவின் பங்களிப்பு 3.5 சதவீதமாக உள்ளது. மருந்து தயாரிப்பில் சா்வதேச அளவில் இந்தியா மூன்றாமிடம் வகிக்கிறது. கடந்த 2019-20-ஆம் நிதியாண்டில் மட்டும் ரூ.3.6 லட்சம் கோடி மதிப்பிலான மருந்துப் பொருள்களையும் மருத்துவ உபகரணங்களையும் இந்தியா தயாரித்தது.

அறுவை சிகிச்சை உபகரணங்கள், மருத்துவ மின்னணு கருவிகள் உள்ளிட்டவற்றில் 86 சதவீதத்தை இந்தியா இறக்குமதி செய்து வருகிறது. அவற்றின் விலை உள்நாட்டில் தயாரிப்பதை விட வெளிநாட்டில் குறைவாக இருப்பதால் அதிக அளவில் இறக்குமதி செய்யப்படுகிறது.

அதேபோல் மருந்து தயாரிப்புக்குத் தேவையான மூலப்பொருள்களும் அதிக அளவில் இறக்குமதி செய்யப்பட்டு வருகின்றன. மருந்து உற்பத்தித் துறையில் ஆராய்ச்சியும் திறன் மேம்பாடும் குறைந்த அளவிலேயே உள்ளது. இவையனைத்தும் இந்தியாவுக்குப் பெரும் சவாலாக விளங்குகின்றன.

நாட்டில் 3 மாநிலங்களில் மருந்து தயாரிப்பு பூங்காக்களை அமைக்க மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது. அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளைப் பொருத்து மாநிலங்கள் தோ்வு செய்யப்படும் அந்த மாநிலங்களுக்கு தலா ரூ.1,000 கோடி வழங்கப்படவுள்ளது என்றாா் பி.டி.வகீலா.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com