கேரளத்தில் ஏர் இந்தியா விமானம் விபத்து: 191 பேர் கதி? - விடியோ இணைப்பு

கேரளத்தில் கோழிக்கோடு விமான நிலையத்தில் தரையிறங்கும்போது ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் விபத்துக்குள்ளானது.
ஏர் இந்தியா விமானம்
ஏர் இந்தியா விமானம்

கேரளத்தில் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் தரையிறங்கும்போது விபத்துக்குள்ளானது.

துபையில் இருந்து வந்தே பாரத் திட்டத்தின் கீழ் பயணிகளை ஏற்றிக்கொண்டு வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம், கேரள மாநிலம், கோழிக்கோடு கரிப்பூர் விமான நிலையத்தில் இன்று மாலை தரையிறங்கியது. அப்போது ஓடுபாதையில் இருந்து சறுக்கி அந்த விமானம் திடீரென விபத்துக்குள்ளானது. தரையில் மோதிய வேகத்தில் விமானம் இரண்டு துண்டாக உடைந்ததாக கூறப்படுகிறது. சம்பவ இடத்துக்கு விரைந்த மீட்புக்குழுவினர் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

எனினும் அப்பகுதியில் மழை பெய்து வருவதால் மீட்பு நடவடிக்கையில் தொய்வு ஏற்பட்டுள்ளது. விமானத்தில் ஊழியர்கள், பயணிகள் உட்பட 191 பேர் இருந்தகாவும் விமானி உட்பட 15 பேர் பலியாகியுள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. 123 பேர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். விமானத்தில் பயணித்தவர்களின் விவரங்கள் குறித்து அறிய கோழிக்கோடு நிர்வாகம் சார்பில் 0495-2376901 என்கிற உதவி எண் அறிவிக்கப்பட்டுள்ளது. 

விமானத்தின் முன்சக்கரத்தில் ஏற்பட்ட பழுதால் ஓடுதளத்திலிருந்து விலகி விபத்துகுள்ளனதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் விபத்து தொடர்பாக விரிவான விசாரணைக்கு விமான போக்குவரத்துதுறை இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில் மீட்புபணிகளுக்கான அனைத்துவித நடவடிக்கைகளை விரைந்து எடுக்கமாறு அதிகாரிகளுக்கு அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் உத்தரவிட்டுள்ளார். இதனிடையே கோழிக்கோடு விமான விபத்து தொடர்பாக அம்மாநில முதல்வர் பினராயி விஜயனிடம் பிரதமர் மோடி கேட்டறிந்தார். 

கோழிக்கோட்டில் நிகழ்ந்த விமான விபத்து வேதனை அளிப்பதாகவும் மேலும் விமான விபத்தில் காயமடைந்தவர்கள் விரைந்து குணமடைய வேண்டுவதாகவும் பிரதமர் மோடி சுட்டுரையில் தெரிவித்துள்ளார். 

கேளத்தில் விமானம் விபத்துக்குள்ளான செய்தியை அறிந்து மனவேதனை அடைந்தேன். மீட்புப் பணியில் ஈடுபட தேசிய பேரிடர் மீட்புக்கு குழுவுக்கு உத்தரவிட்டுள்ளேன் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

கேரள கோழிக்கோட்டில் விமானம் விபத்துக்குள்ளான செய்தி அறிந்து அதிர்ச்சி அடைந்தேன். விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் நண்பர்கள், குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல். விமான விபத்தில் காயமடைந்தவர்கள் விரைவில் நலம் பெற பிரார்த்திக்கிறேன் என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com