கரோனா பலி விகிதம் அதிகம் இருக்கும் 13 மாவட்டங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்

எட்டு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு உள்பட்ட 13 மாவட்டங்களில் தான் நாட்டின் சராசரியை விட, கரோனாவுக்கு பலியானோரின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
நாட்டிலேயே 13 மாவட்டங்களில்தான் கரோனா பலி அதிகம்
நாட்டிலேயே 13 மாவட்டங்களில்தான் கரோனா பலி அதிகம்

புது தில்லி: எட்டு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு உள்பட்ட 13 மாவட்டங்களில் தான் நாட்டின் சராசரியை விட, கரோனாவுக்கு பலியானோரின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

எனவே, பலி எண்ணிக்கை அதிகமாக இருக்கும் மாவட்டங்களில், குறைவான கரோனா பரிசோதனை, கரோனா பரிசோதனை முடிவுகள் வெளியாவதில் தாமதம் போன்றவை இருப்பதாகவும், கரோனா நோயாளிகளை உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நாட்டில் கரோனா பாதிப்பு மற்றும் பலி விகிதம் குறித்து எடுக்கப்பட்ட புள்ளி விவரங்களில், சில கரோனா நோயாளிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு 48 மணி நேரத்தில் உயிரிழப்பதாகவும் தெரிய வந்துள்ளது. இதையடுத்து, கரோனா  நோயாளிகளை உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்க நடவடிக்கை எடுக்குமாறு சுகாதாரத் துறை மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தலை அனுப்பியுள்ளது.

காணொலி காட்சி வாயிலாக மத்திய சுகாதாரத் துறைச் செயலாளர் ராஜேஷ் பூஷண் தலைமையில், 13 மாவட்டங்கள் அடங்கிய 8 மாநில அரசு அதிகாரிகள் பங்கேற்ற கூட்டம் நடைபெற்றது.

அதில், கரோனா நோயாளிகளுக்கு ஆம்புலன்ஸ் வசதி கிடைப்பதை அதிகரிக்கவும், நோயாளிகள் அலைக்கழிக்கப்படாமல் தடுக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நாட்டின் பலி சராசரியை விடவும், அதிகமாக இருக்கும் 13 மாவட்டங்களைக் கொண்ட மாநில அரசுகள், கரோனா பரவலைத் தடுப்பதிலும், உயிர் பலியைக் குறைப்பதிலும் மத்திய அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் அனைத்துக்கும் ஒத்துழைப்பை நல்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

இந்த 13 மாவட்டங்களாக காம்ரூப் மெட்ரோ (அசாம்), பாட்னா (பிகார்), ராஞ்சி (ஜார்க்கண்ட்), ஆலப்புழா மற்றும் திருவனந்தபுரம் (கேரளம்), கஞ்ஜம் (ஒடிசா), லக்னௌ (உத்தரப்பிரதேசம்), வடக்கு 24 பர்கனாஸ்,ஹூக்ளி, ஹௌரா, கொல்கத்தா, மால்டா (மேற்கு வங்கம்) மற்றும் தில்லி ஆகியவை உள்ளன.

இந்த 13 மாவட்டங்களில்தான் இந்தியாவின் ஒட்டுமொத்த கரோனா நோயாளிகளில் 9% நோயாளிகள் இருக்கிறார்கள். கரோனா பலி எண்ணிக்கையில் 14% இந்த மாவட்டங்களில்தான் நிகழ்ந்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com