கேரள விமான விபத்தில் உயிரிழந்தவருக்கு இரண்டாவது முறையாக கரோனா

கேரள விமானம் விபத்தில் மரணம் அடைந்தவர்களில் ஒரு பயணிக்கு கரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில், அவர் ஏற்கனவே கரோனாவில் இருந்து மீண்டவர் என்ற தகவல் அதிர்ச்சியளிப்பதாக
விபத்துக்குள்ளான ஏர் இந்திய விமானம்.
விபத்துக்குள்ளான ஏர் இந்திய விமானம்.


துபை: துபையில் இருந்து கோழிக்கோடு வந்த விமானம் விபத்துக்குள்ளானதில் மரணம் அடைந்தவர்களில் ஒரு பயணிக்கு கரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில், அவர் ஏற்கனவே கரோனாவில் இருந்து மீண்டவர் என்ற தகவல் அதிர்ச்சியளிப்பதாக உள்ளது.

அவர் துபையில் இருந்தபோதே கடந்த ஏப்ரல் மாதத்தில் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு, சிகிச்சை பெற்று இந்தியாவுக்கு வரும் போது, மீண்டும் கரோனா பரிசோதனை செய்து தொற்று இல்லை என்ற பிறகே பயணத்தை மேற்கொண்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த வெள்ளிக்கிழமை கோழிக்கோடு விமான நிலையத்தில் நேரிட்ட விமான விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்த சுதீர் வரியாத் (45), மீட்கப்பட்ட சில மணி நேரங்களில் மரணம் அடைந்தார். இந்த விமான விபத்தில் மரணம் அடைந்ததாக அறிவிக்கப்பட்ட கடைசி நபரும் அவரே.

அவரது உடற்கூறு ஆய்வுடன் மேற்கொள்ளப்பட்ட கரோனா பரிசோதனையில் அவருக்கு கரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனால், அவர் கடந்த ஆண்டு மலப்புரம் மாவட்டத்தில் புதிதாகக் கட்டிய வீட்டுக்கு அருகே இறுதிச் சடங்கு நடத்தப்படுவதாக இருந்த நிலையில், அவரது உடல் குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்படாமல், கோழிக்கோடு மாவட்டத்தில் உள்ள இடுகாட்டில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

இது குறித்து அவருடன் துபையில் தங்கியிருந்த பிரஷோப் தரம்மால் கீரி கூறுகையில், சுதீர் மற்றும் அவரது குடியிருப்பில் தங்கியிருந்த மேலும் 3 பேருக்கு ஏப்ரல் மத்தியில் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அவர் தனிமைப்படுத்தல் மையத்தில் தங்கியிருந்து மே முதல் வாரத்தில் தான் கரோனாவில் இருந்து குணமடைந்தார்.

பிறகு அவர் இந்தியா திரும்ப நினைத்த போது, மீண்டும் கரோனா பரிசோதனை செய்து தொற்று இல்லை என்பதை உறுதி செய்து கொண்டதாகவும் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான பரிசோதனை முடிவுகளையும் அவர் கைவசம் வைத்திருந்ததாகவும், உண்மையில் என்ன நடந்தது என்பது குறித்து தெளிவான தகவல்கள் கிடைக்கவில்லை, அவரது உடலில் இருந்த இறந்த கரோனா செல்களைக் கொண்டு அவருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகமும் எழுந்திருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com