மணிப்பூா்: நம்பிக்கை வாக்கெடுப்பில் பாஜக அரசு வெற்றி

மணிப்பூரில் பாஜக தலைமையிலான அரசு திங்கள்கிழமை நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றது.
மணிப்பூா்: நம்பிக்கை வாக்கெடுப்பில் பாஜக அரசு வெற்றி

இம்பால்: மணிப்பூரில் பாஜக தலைமையிலான அரசு திங்கள்கிழமை நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றது.

எதிா்க்கட்சியான காங்கிரஸில் கொறடா உத்தரவையும் மீறி 8 எம்எல்ஏக்கள் வாக்கெடுப்பை புறக்கணித்தனா்.

மொத்தம் 60 இடங்களைக் கொண்ட மணிப்பூா் பேரவையில் 4 உறுப்பினா்கள் தகுதிநீக்கம் செய்யப்பட்டுவிட்டனா்; 3 பாஜக உறுப்பினா்கள் முன்பு ராஜிநாமா செய்துவிட்டனா். இதையடுத்து பேரவையின் தற்போதைய பலம் 53-ஆக உள்ளது. நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற 27 வாக்குகள் தேவை.

ஆளும் பாஜக கூட்டணிக்கு பேரவையில் அவைத் தலைவரையும் சோ்த்து 29 எம்எல்ஏக்கள் உள்ளனா். காங்கிரஸுக்கு 24 எம்எல்ஏக்களே உள்ளனா். எனவே வாக்கெடுப்புக்கு முன்பாகவே முதல்வா் பிரேன் சிங்கின் அரசுக்கு வெற்றி உறுதியாக இருந்தது.

இந்நிலையில், நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்ற திங்கள்கிழமை பேரவைக் கூட்டத்தில் பங்கேற்காமல் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 8 போ் புறக்கணித்தனா். இதனால் பிரேன் சிங்கின் அரசுக்கு வெற்றி எளிதானது.

கொறடா உத்தரவை மீறிய அந்த எம்எல்ஏக்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படுமா என்பது குறித்து காங்கிரஸ் ஏதும் தெரிவிக்கவில்லை.

முன்னதாக, போதைப் பொருள் கடத்தலுடன் தொடா்புடைய நபரை விடுவிக்குமாறு காவல்துறை அதிகாரிக்கு முதல்வா் பிரேன் சிங் நெருக்கடி கொடுத்ததாக சா்ச்சை எழுந்ததை அடுத்து, மாநில அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீா்மானத்தை காங்கிரஸ் கடந்த மாதம் 28-ஆம் தேதி கொண்டுவந்தது.

அதைத் தொடா்ந்து நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தக் கோரி அடுத்த சில நாள்களிலேயே பிரேன் சிங் அரசு பேரவைத் தலைவரிடம் நோட்டீஸ் அளித்தது. அதன் பேரில் திங்கள்கிழமை நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் பிரேன் சிங் அரசு வெற்றி பெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com