வெள்ளச் சூழல் முன்கணிப்புக்கு நிரந்தர தொழில்நுட்ப அமைப்பு: பிரதமர் மோடி வலியுறுத்தல்

மழை வெள்ளச் சூழலை முன்கணிப்பு செய்வதற்கு நிரந்தரமான தொழில்நுட்ப அமைப்பை ஏற்படுத்த மத்திய, மாநில அரசு முகமைகளிடையே சிறப்பான ஒத்துழைப்பு இருக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தினார். 
மழை வெள்ளம் தொடர்பாக 6 மாநில முதல்வர்களுடன் திங்கள்கிழமை காணொலி வழியாக பேசிய பிரதமர் மோடி.
மழை வெள்ளம் தொடர்பாக 6 மாநில முதல்வர்களுடன் திங்கள்கிழமை காணொலி வழியாக பேசிய பிரதமர் மோடி.


புது தில்லி: மழை வெள்ளச் சூழலை முன்கணிப்பு செய்வதற்கு நிரந்தரமான தொழில்நுட்ப அமைப்பை ஏற்படுத்த மத்திய, மாநில அரசு முகமைகளிடையே சிறப்பான ஒத்துழைப்பு இருக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தினார். 

நாட்டில் பல்வேறு மாநிலங்களில் பருவமழை காரணமாக ஏற்பட்டுள்ள வெள்ளச் சூழல் தொடர்பாகவும், தென்மேற்கு பருவமழை காலத்தை எதிர்கொள்வதற்கான முன்னேற்பாடுகள் தொடர்பாகவும் 6 மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி திங்கள்கிழமை ஆலோசனைக் கூட்டம் நடத்தினார். 

இணைய வழியில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் அஸ்ஸôம், பிகார், உத்தர பிரதேசம், மகாராஷ்டிரம், கேரளம் ஆகிய மாநிலங்களின் முதல்வர்களும், கர்நாடகத்தின் உள்துறை அமைச்சரும் பங்கேற்றனர். அத்துடன், பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன், மத்திய உள்துறை இணையமைச்சர்கள் நித்யானந்த் ராய், ஜி.கிஷண் ரெட்டி ஆகியோரும், மத்திய அமைச்சகங்களின் மூத்த அதிகாரிகளும் கலந்துகொண்டனர். 

சுமார் ஒன்றரை மணி நேரம் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியது தொடர்பாக பிரதமர் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: 

உள்நாட்டிலேயே வெள்ள அபாய முன்னெச்சரிக்கை தொழில்நுட்பத்தை தயாரிப்பதில் அதிக முதலீடுகள் மேற்கொள்ளப்பட வேண்டும். அப்போது தான் நதி வெள்ளம், வசிப்பிடங்களை சூழும் வெள்ளம், இடி}மின்னல் தாக்கம் போன்ற அச்சுறுத்தலான சூழ்நிலைகள் குறித்து மக்களுக்கு உரிய நேரத்தில் எச்சரிக்கை செய்ய இயலும். 
மழை வெள்ளச் சூழலை முன்கணிப்பு செய்வதற்கு நிரந்தரமான தொழில்நுட்ப அமைப்பை கண்டறிய மத்திய, மாநில அரசு முகமைகள் பரஸ்பர ஒத்துழைப்புடன் செயலாற்ற வேண்டும். முன்கணிப்பு மற்றும் முன்னெச்சரிக்கை அமைப்புகளை மேம்படுத்த புத்தாக்க தொழில்நுட்பங்களை அதில் அதிக அளவில் பயன்படுத்த வேண்டும். 

கடந்த சில ஆண்டுகளாக இந்திய வானிலை ஆய்வு மையம், மத்திய நீர்வள ஆணையம் போன்றவை மழை வெள்ளம் தொடர்பாக நல்ல பலனளிக்கக் கூடிய வகையிலான முன்னெச்சரிக்கைகளை வழங்கி வருகின்றன. அவை மழைப்பொழிவு மற்றும் நதிநீர் அளவு அதிகரிப்பு தொடர்பாக மட்டுமல்லாமல், குறிப்பிட்ட இடத்தில் எந்த அளவுக்கு மழைநீர் தேங்கும் என்பது வரை முன்கணிப்பை வழங்கி வருகின்றன. 

செயற்கை நுண்ணறிவு போன்ற புத்தாக்க தொழில்நுட்பங்களை பயன்படுத்தி மழை வெள்ள முன்கணிப்புக்கான புதிய அமைப்புகளை வடிவமைக்கும் முன்னோட்ட முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. அதற்குத் தேவையான தகவல்களை மத்திய அரசு அமைப்புகளுக்கு மாநிலங்கள் வழங்க வேண்டும். 

ஏற்கெனவே கரோனா நோய்த்தொற்று சூழலும் நிலவுவதால் மழை வெள்ள பாதிப்பு பகுதிகளில் மீட்புப் பணியில் ஈடுபடுவோர் முகக்கவசம் அணிவது, கை சுத்திகரிப்பானை பயன்படுத்துவது, சமூக இடைவெளியை கடைப்பிடிப்பது போன்ற சுகாதார முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடைப்பிடிப்பதை உறுதிப்படுத்த வேண்டும். 

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்படும் நிவாரணப் பொருள்கள் கை சுத்திகரிப்பான், கை கழுவும் சோப்பு திரவம், முகக்கவசம் போன்றவற்றை உள்ளடக்கியதாக இருக்க வேண்டும். முதியோர்கள், கர்ப்பிணிகள், ஏற்கெனவே இதர நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிறப்பு கவனம் செலுத்தப்பட வேண்டும். 
அனைத்து வளர்ச்சி மற்றும் அடிப்படைக் கட்டமைப்பு பணிகளும் இயற்கைப் பேரிடர்களை தாங்கக் கூடியதாகவும், அதனால் ஏற்படக் கூடிய இழப்புகளை குறைக்கக் கூடியதாகவும் இருப்பதை மாநில அரசுகள் உறுதி செய்ய வேண்டும் என்று பிரதமர் மோடி பேசியதாக அந்தக் செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது. 

இந்தக் கூட்டத்தில் பங்கேற்ற அஸ்ஸôம், பிகார், உத்தர பிரதேசம், மகாராஷ்டிரம், கேரளம் கர்நாடகம் ஆகியவை தங்களது மாநிலங்களில் உள்ள வெள்ளச் சூழல் குறித்தும், மீட்புப் பணிகள் தொடர்பாகவும் விளக்கமளித்தன. 
வெள்ள பாதிப்பு பகுதிகளில் தேசிய பேரிடர் மீட்புப் படையினர் உரிய நேரத்தில் மீட்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டது தொடர்பாக அந்த மாநிலங்கள் பாராட்டு தெரிவித்தன. மேலும், வெள்ளத்தின் தாக்கத்தை குறைப்பதற்கான குறுகியகால மற்றும் நீண்டகால தீர்வு தொடர்பாக சில பரிந்துரைகளையும் அவை முன்வைத்தன. 

அதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் மோடி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். மழை வெள்ளம் உள்ளிட்ட பேரிடர்களை எதிர்கொள்ள மாநில, யூனியன் பிரதேச அரசுகளை வலுப்படுத்தக் கூடிய வகையில் மத்திய அரசு தொடர்ந்து ஆதரவு அளிக்கும் என்று பிரதமர் மோடி உறுதி அளித்தார். கரோனா நோய்த்தொற்று சூழல் காரணமாக மாநிலங்களுக்கு வந்து மழை வெள்ள பாதிப்பை பார்வையிட இயலவில்லை என்றும் அவர் கூறியதாக பிரதமர் அலுவலக செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com