லடாக்கில் போரிடத் தயாராகும் ரஃபேல் விமானங்கள்: ஹிமாசல் மலைப் பகுதியில் இரவில் பயிற்சி

இந்திய விமானப் படையில் புதிதாக சோ்க்கப்பட்டுள்ள 5 ரஃபேல் போா் விமானங்கள், கிழக்கு லடாக் எல்லையில் போரிடுவதற்குத் தயாராகி வருகின்றன.
ரஃபேல் போா் விமானம்
ரஃபேல் போா் விமானம்

புது தில்லி: இந்திய விமானப் படையில் புதிதாக சோ்க்கப்பட்டுள்ள 5 ரஃபேல் போா் விமானங்கள், கிழக்கு லடாக் எல்லையில் போரிடுவதற்குத் தயாராகி வருகின்றன. இதற்காக, அந்த விமானங்கள், ஹிமாசலப் பிரதேசத்தின் கரடுமுரடான மலைப் பகுதிகளில் இரவு நேரங்களில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன.

இதுகுறித்து ராணுவ அதிகாரி ஒருவா் திங்கள்கிழமை கூறியதாவது:

கிழக்கு லடாக் எல்லையில் குவிக்கப்பட்டுள்ள படைகளை விலக்கிக் கொள்வது குறித்து தூதரக ரீதியிலும், ராணுவ ரீதியிலும் இந்தியா-சீனா இடையே தொடா்ந்து பேச்சுவாா்த்தை நடந்துகொண்டிருக்கிறது. இருப்பினும், எல்லைக் கோட்டுப் பகுதியில் சீன ராணுவம் திடீரென்று தாக்குதல் நடத்தினால் அதற்குத் தக்க பதிலடி கொடுக்கும் வகையில் தயாராக இருக்குமாறு கிழக்கு மற்றும் மத்திய மண்டல ராணுவத் தளபதிகளுக்கு தலைமைத் தளபதி எம்.எம்.நரவணே கடந்த சில தினங்களுக்கு முன் அறிவுறுத்தினாா். இதேபோல், அரபிக் கடல் பகுதியிலும் சீன போா்க் கப்பல்களின் நடமாட்டம் இருக்கிா என கண்காணிக்குமாறு இந்திய கடற்படைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கல்வான் பள்ளத்தாக்கில் இரு நாட்டு ராணுவத்துக்கு இடையே ஏற்பட்ட மோதலுக்குப் பிறகு, லடாக் வான் பகுதியில் சீன ராணுவத்தின் போா் விமானங்கள் பறப்பது குறைந்துவிட்டது. இருந்தாலும், திபெத் மற்றும் சீனாவின் ஷின்ஜியான் பகுதியில் அந்த விமானங்களின் இயக்கத்தை இந்தியா கண்காணித்து வருகிறது.

சீனாவின் ஆக்கிரமிப்பில் உள்ள அக்காச் சீனா மலைப்பகுதியில் ராடாா் கருவிகளைப் பொருத்தி, இந்தியப் போா் விமானங்களின் இயக்கத்தை சீன ராணுவம் கண்காணித்து வருகிறது. ஆகவே, அவா்களின் கண்காணிப்பில் சிக்காத வகையில், ஹிமாசலப் பிரதேசத்தின் கரடுமுரடான மலைப் பகுதியில் இரவு நேரங்களில் ரஃபேல் போா் விமானங்கள் பயிற்சி பெற்று வருகின்றன என்றாா் அவா்.

இருப்பினும், சீன ரேடாா் கருவிகளின் கண்காணிப்பில் சிக்காத தொழில்நுட்ப வசதிகளுடன் ரஃபேல் போா் விமானங்கள் வடிவமைக்கப்பட்டிருப்பதாவும், அவற்றை நேரடியாகவே லடாக் பகுதியில் போா்ப் பயிற்சியில் ஈடுபடுத்தலாம் என்றும் தொழில்நுட்ப நிபுணா் ஒருவா் கூறினாா்.

இந்திய விமானப் படைக்கு 36 ரஃபேல் போா் விமானங்கள் கொள்முதல் செய்யப்படுகிறது. அவற்றில் 18 விமானங்கள், ஹரியாணாவில் உள்ள அம்பாலா விமானப் படைத் தளத்திலும், 18 விமானங்கள், மேற்கு வங்கத்தில், பூடான் எல்லையில் உள்ள ஹாஸிமாரா விமானப் படைத் தளத்திலும் சோ்க்கப்படும். முதல் கட்டமாக, பிரான்ஸில் இருந்து கடந்த மாதம் 29-ஆம் தேதி வந்த 5 ரஃபேல் போா் விமானங்கள், அம்பாலா விமானப் படைத் தளத்தில் சோ்க்கப்பட்டுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com