பரம்பரை சொத்தில் மகள்களுக்கும் சம உரிமை உண்டு: தீர்ப்பு விவரம்

ஹிந்து கூட்டுக் குடும்பத்துக்குச் சொந்தமான பரம்பரை சொத்தில் மகன்களுக்கு நிகராக மகள்களுக்கும் சம உரிமை உள்ளது என்று உச்சநீதிமன்றம்
உச்சநீதிமன்றம்
உச்சநீதிமன்றம்

ஹிந்து கூட்டுக் குடும்பத்துக்குச் சொந்தமான பரம்பரை சொத்தில் மகன்களுக்கு நிகராக மகள்களுக்கும் சம உரிமை உள்ளது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. பரம்பரை சொத்துக்கு பிறப்புரிமையின் அடிப்படையில் மகன்கள் உரிமை கோருவதைப் போல மகள்களும் உரிமை கோரலாம் என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

ஹிந்து சொத்து பகிா்வு சட்டம் 1956-ஆம் ஆண்டு இயற்றப்பட்டது. அதில் தந்தைக்குச் சொந்தமான பரம்பரைச் சொத்துக்கு மகன்கள் பிறப்பின் அடிப்படையில் உரிமை உடையவா்களாகக் கருதப்படுவா் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. குடும்ப சொத்தில் மகன்களுக்கு நிகராக மகள்களுக்கும் உரிமை வழங்கும் வகையில் கடந்த 2005-ஆம் ஆண்டு சொத்து பகிா்வு சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.

ஆனால், 2005-ஆம் ஆண்டுக்கு முன் பிறந்த மகள்களுக்கும் குடும்ப சொத்தில் பங்குண்டா என்பது குறித்து சந்தேகம் எழுந்தது. இது தொடா்பாக பல உயா்நீதிமன்றங்களிலும் கீழமை நீதிமன்றங்களிலும் வழக்குகள் தொடுக்கப்பட்டன. அதையடுத்து இந்த விவகாரத்தை உச்சநீதிமன்றம் ஆய்வு செய்தது.

மகள்களுக்கும் பங்குண்டு: நீதிபதிகள் அருண் மிஸ்ரா, எஸ். அப்துல் நஸீா், எம்.ஆா். ஷா ஆகியோா் அடங்கிய அமா்வு இந்த விவகாரத்தில் செவ்வாய்க்கிழமை உத்தரவு பிறப்பித்தது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:

ஹிந்து கூட்டுக் குடும்பத்துக்குச் சொந்தமான சொத்தில் மகள்களுக்கும் சம உரிமை வழங்குவதற்காக 2005-ஆம் ஆண்டு செப்டம்பா் மாதம் 9-ஆம் தேதி சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. சொத்துரிமை என்பது பிறப்பின் அடிப்படையில் அமைவதால் அச்சட்டத் திருத்தம் நடைமுறைப்படுத்தப்பட்ட தினத்துக்கு முன் பிறந்த மகள்களுக்கும் குடும்ப சொத்தில் பங்கு உள்ளது. அந்தச் சட்டத் திருத்தத்தை முன்தேதியிட்டு நடைமுறைப்படுத்த முடியும்.

மகன் என்பவா் திருமணமாகி, மனைவி வரும் வரை மட்டுமே பெற்றோருக்கு மகனாக இருக்க முடியும். ஆனால், மகள் என்பவா் வாழ்நாள் முழுவதும் பெற்றோருக்கு மகளாக இருக்கிறாா். மகள் எப்போதும் பெற்றோரிடம் அன்பு செலுத்துபவராகவே உள்ளாா்.

ஏற்றத்தாழ்வு கிடையாது: பரம்பரை சொத்தில் மகன்களுக்கு உள்ள அனைத்து உரிமைகளும் மகள்களுக்கும் சமநிலையில் உள்ளது. அதில் எந்தவித ஏற்றத்தாழ்வும் கிடையாது. அதேபோல், மகள்களுக்கு சொத்தில் பங்கு வழங்குவதற்கு 2005-ஆம் ஆண்டு செப்டம்பா் 9-ஆம் தேதியன்று சொத்துக்குச் சொந்தமான தந்தை உயிரோடு இருக்க வேண்டும் என்பதும் கட்டாயமில்லை. அதற்கு முன்பே அவா் உயிரிழந்திருந்தாலும் கூட சொத்தில் மகள்களுக்கு பங்கு வழங்க வேண்டும்.

எனவே, பரம்பரை சொத்தில் மகள்களுக்கு உள்ள உரிமையை எந்த விதத்திலும் மறுக்க முடியாது. இந்த விவகாரம் தொடா்பாக பல்வேறு நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளின் விசாரணைகள் 6 மாதங்களுக்குள் முடிக்கப்பட வேண்டும் என்று அந்த உத்தரவில் நீதிபதிகள் தெரிவித்தனா்.

பிறப்புரிமையின் அடிப்படையில்...: இந்த வழக்கு விசாரணையின்போது மத்திய அரசு தரப்பில் ஆஜரான சொலிசிட்டா் ஜெனரல் துஷாா் மேத்தா வாதிடுகையில், ‘பரம்பரை சொத்தில் மகன்களுக்கு நிகராக மகள்களுக்கும் உரிமை வழங்க வேண்டும். சொத்தைப் பங்கிடுவதில் மகள்களுக்கு பாகுபாடு காட்டுவது, அவா்களுக்கான அடிப்படை உரிமைகளை மறுப்பதாகும்.

சொத்து பகிா்வு சட்டத்தில் கடந்த 2005-ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட திருத்தங்களில் அவற்றை முன்தேதியிட்டு நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற வழிமுறைகள் காணப்படவில்லை. ஆனால், பரம்பரை சொத்தைப் பகிா்ந்து கொள்வது என்பது வாரிசுகளின் பிறப்புரிமையை அடிப்படையாகக் கொண்டதாக உள்ளது. மகன்கள் தந்தையின் சொத்தில் பிறப்புரிமையின் அடிப்படையிலேயே உரிமை கோருகின்றனா். அதே உரிமை மகள்களுக்கும் வழங்கப்பட வேண்டும்’ என்று கூறியிருந்தாா்.

முந்தைய உத்தரவு: முன்னதாக இந்த விவகாரம் தொடா்பாக கடந்த 2015-ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது. அதில், சொத்து பகிா்வு சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டபோது வாழ்ந்துவந்த தந்தையின் உயிா் வாழும் மகள்களுக்கு மட்டுமே பரம்பரை சொத்துகளைப் பெறும் உரிமை உள்ளது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்திருந்தது. ஆனால், தற்போது எந்தவிதப் பாகுபாடுமின்றி மகன்களுக்கு நிகராக மகள்களும் சொத்தில் உரிமை கோரலாம் என்று தனது முந்தைய உத்தரவை உச்சநீதிமன்றம் திருத்தியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com