பெங்களூரு கலவரம்: கவுன்சிலரின் கணவர் உள்பட மேலும் 60 பேர் கைது

பெங்களூரு கலவரம் தொடர்பாக மேலும் 60 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக  காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது. 
கோப்புப்படம்
கோப்புப்படம்

பெங்களூரு கலவரம் தொடர்பாக மேலும் 60 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக  காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது. 

கர்நாடக மாநில காங்கிரஸ் எம்.எல்.ஏ. அகண்ட சீனிவாஸ் மூா்த்தியின் உறவினா் ஒருவா் தனது முகநூலில் ஒரு சமுதாயத்தின் மீது சா்ச்சைக்குரிய கருத்தை பதிவிட்டிருந்தாா்.

இதற்கு எதிா்ப்புத் தெரிவித்து எம்.எல்.ஏ. வீட்டின் மீதும், காவல் நிலையத்தின் மீதும் கலவரக்காரா்கள் கல்வீசித் தாக்கியும், வாகனங்களை தீ வைத்தும் சேதப்படுத்தினா். கடந்த 11 ஆம் தேதி நடைபெற்ற இந்த கலவரம் கட்டுக்கடங்காமல் போனதையடுத்து, போலீஸார் துப்பாக்கிச்சூடு நடத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. பின்னர் போலீஸாரின் கடும் நடவடிக்கைக்கு பிறகு நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.

இந்த துப்பாக்கிச்சூட்டில் மூன்று பேர் உயிரிழந்தனர், 50 போலீஸார் உள்பட 60க்கும் மேற்பட்டோர் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

மேலும், சமூக வலைத்தளங்களில் சர்ச்சைக்குரிய கருத்தைப் பகிர்தல், கலவரத்தில் ஈடுபட்டோர் என 145 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அதில் கலவரத்தில் ஈடுபட்ட முக்கிய நபர்கள் 17 பேர் மீது 9 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் முன்னதாக காவல்துறை தெரிவித்தது. 

இந்நிலையில் கலவரம் தொடர்பாக மேலும் 60 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பெங்களூரு மாநகராட்சி நாகவாரா பகுதி கவுன்சிலர் ரசாத் பேகத்தின் கணவர் கலீம் பாசா உள்பட மேலும் 60 பேரைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தொடர்ந்து கலவரம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருவதாக பெங்களூரு மாநகரக் காவல் இணை ஆணையர் சந்தீப் பாட்டீல் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, வன்முறையை காரணமாக பெங்களூருவின் டிஜே ஹல்லி மற்றும் கேஜி ஹல்லி காவல் எல்லைக்கு உள்பட்ட பகுதிகளில் வருகிற ஆகஸ்ட் 15 ஆம் தேதி காலை 6 மணி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com