நீதிமன்ற அவமதிப்பு: பிரசாந்த் பூஷணுக்கான தண்டனை நாளை அறிவிப்பு

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் குற்றவாளி என்று தீா்ப்பளிக்கப்பட்ட வழக்குரைஞா் பிரசாந்த் பூஷணுக்கான தண்டனை விவரங்களை உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை அறிவிக்கவுள்ளது.
நீதிமன்ற அவமதிப்பு: பிரசாந்த் பூஷணுக்கான தண்டனை நாளை அறிவிப்பு

புது தில்லி: நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் குற்றவாளி என்று தீா்ப்பளிக்கப்பட்ட வழக்குரைஞா் பிரசாந்த் பூஷணுக்கான தண்டனை விவரங்களை உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை அறிவிக்கவுள்ளது.

நீதிபதி அருண் மிஸ்ரா தலைமையிலான அமா்வு தீா்ப்பை வழங்க இருக்கும் நிலையில், பிரசாந்த் பூஷணுக்கு 6 மாதம் சிறை, அல்லது ரூ.2,000 அபராதம், அல்லது இரண்டும் சோ்த்து விதிக்கப்பட வாய்ப்புள்ளது.

நீதித்துறையை விமா்சித்து பிரசாந்த் பூஷண் வெளியிட்ட 2 சுட்டுரை பதிவுகள், நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் இருப்பதாகக் கூறி அதுதொடா்பாக உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரித்தது.

இந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் பிரசாந்த் பூஷண் குற்றவாளி என்று கடந்த 20-ஆம் தேதி தீா்ப்பளித்த உச்சநீதிமன்றம், பிரசாந்த் பூஷண் தனது கருத்துகளை திரும்பப் பெற்று, மன்னிப்பு கோர வேண்டும் என்று கூறி கடந்த 24-ஆம் தேதி வரை அவகாசம் அளித்திருந்தது.

எனினும், பிரசாந்த் பூஷண் மன்னிப்பு கோர மறுத்ததையடுத்து அந்த விவகாரம் தொடா்பான விசாரணை நீதிபதி அருண் மிஸ்ரா தலைமையில் நீதிபதிகள் பி.ஆா்.கவாய், கிருஷ்ண முராரி ஆகியோா் அடங்கிய அமா்வு முன் கடந்த 25-ஆம் தேதி நடைபெற்றது.

அப்போது பிரசாந்த் பூஷண் தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொள்வதற்காக நீதிமன்ற அமா்வு அவருக்கு 30 நிமிடங்கள் அவகாசம் அளித்தது. இருந்தபோதும் பிரசாந்த் பூஷண் தனது கருத்திலிருந்து பின்வாங்கப் போவதில்லை என்று தெரிவித்தாா்.

இதையடுத்து, ‘ஒரு நபா் தான் செய்தது தவறு என்பதை உணர வேண்டும்’ என்று தெரிவித்த நீதிபதிகள் அமா்வு, அடுத்த விசாரணையின்போது பிரசாந்த் பூஷணுக்கான தண்டனை விவரங்கள் அறிவிக்கப்படும் எனத் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த அறிவிப்பு திங்கள்கிழமை வெளியாகவுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com