சீனா பங்கேற்கும் கூட்டு ராணுவப் பயிற்சியை புறக்கணிக்க இந்தியா முடிவு

ரஷியாவில் அடுத்த மாதம் சீனா, பாகிஸ்தான் ஆகிய நாடுகள் பங்கேற்கும் கூட்டு ராணுவப் பயிற்சியைப் புறக்கணிப்பதற்கு இந்தியா முடிவு செய்துள்ளது. 


புது தில்லி: ரஷியாவில் அடுத்த மாதம் சீனா, பாகிஸ்தான் ஆகிய நாடுகள் பங்கேற்கும் கூட்டு ராணுவப் பயிற்சியைப் புறக்கணிப்பதற்கு இந்தியா முடிவு செய்துள்ளது. 

கிழக்கு லடாக் எல்லையில் இந்திய, சீன ராணுவத்துக்கு இடையே மோதல் போக்கு நீடித்து வரும் நிலையில், இந்த முடிவை இந்தியா எடுத்துள்ளது.

ரஷியாவின் அஸ்ட்ராகான் நகரில், செப்டம்பர் 15-ஆம் தேதி முதல் 26}ஆம் தேதி வரை கூட்டு ராணுவப் பயிற்சி நடைபெறவுள்ளது. அதில், ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உறுப்பு நாடுகளான இந்தியா, சீனா, பாகிஸ்தான் உள்பட 20 நாடுகள் பங்கேற்க திட்டமிடப்பட்டிருந்தது.

இந்த கூட்டு ராணுவப் பயிற்சியில் பங்கேற்க இந்தியா முடிவு செய்திருந்தது. ராணுவ வீரர்கள் 150 பேர், விமானப் படை வீரர்கள் 45 பேர், கடற்படை வீரர்கள் சிலரை ரஷியாவுக்கு அனுப்பிவைக்கவும் இந்தியா திட்டமிட்டிருந்தது. இந்த நிலையில், இந்த போர்ப் பயிற்சியில் பங்கேற்கப் போவதில்லை என்று இந்தியா முடிவு செய்துள்ளது.
இந்த முடிவுக்கான காரணத்தை மத்திய அரசு அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை. 

பாதுகாப்புத் துறை உயரதிகாரிகளும் வெளியுறவு அமைச்சக உயரதிகாரிகளும் விரிவாக ஆலோசனை நடத்திய பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கிழக்கு லடாக் எல்லையில் சீன ராணுவத்துக்கும் இந்திய ராணுவத்துக்கும் இடையே கடந்த மூன்று மாதங்களுக்கும் மேலாக மோதல் போக்கு நீடித்து வருகிறது. 

எல்லையில் பதற்றத்தை தணிக்கவும், படைகளை பரஸ்பரம் வாபஸ் பெறவும் இரு நாடுகளும் பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றன. இந்தச் சூழலில், ரஷியாவில் சீன ராணுவத்துடன் கூட்டு ராணுவப் பயிற்சியில் ஈடுபட இந்தியா விரும்பவில்லை என்று தெரிகிறது. 

ஆனால், மாஸ்கோவில் கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற இரண்டாம் உலகப் போர் வெற்றி விழாப் பேரணியில் இந்திய ராணுவம், சீன ராணுவம் பங்கேற்றன. 

இதனிடையே, ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் பாதுகாப்புத் துறை அமைச்சர்கள் மாநாடு, ரஷியாவில் அடுத்த வாரம் நடைபெறவுள்ளது. அதில் பங்கேற்க பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அடுத்த வாரம் ரஷியா செல்கிறார். அந்த மாநாட்டில் பிராந்திய பாதுகாப்பு விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்படவுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com