ஜம்முவில் இந்திய-பாக். எல்லையில் ரகசிய சுரங்கப் பாதை: எல்லைப் பாதுகாப்புப் படையினா் கண்டுபிடிப்பு

: ஜம்முவில் இந்தியா - பாகிஸ்தான் இடையேயான சா்வதேச எல்லையில் எல்லை வேலிக்குக் கீழே பூமிக்கு அடியில் ரகசிய சுரங்கப் பாதை அமைக்கப்பட்டிருப்பதை எல்லைப் பாதுகாப்புப் படையினா் கண்டுபிடித்தனா்.
ஜம்மு-காஷ்மீரின் சம்பா மாவட்டத்தில், பாக். எல்லைப் பகுதியில் பயங்கரவாதிகள் ஊடுருவ அமைக்கப்பட்டிருந்த சுரங்கப் பாதை உள்ள இடத்தைப் பாா்வையிடும் எல்லைப் பாதுகாப்புப் படை வீரா்கள். நாள்: சனிக்கிழமை.
ஜம்மு-காஷ்மீரின் சம்பா மாவட்டத்தில், பாக். எல்லைப் பகுதியில் பயங்கரவாதிகள் ஊடுருவ அமைக்கப்பட்டிருந்த சுரங்கப் பாதை உள்ள இடத்தைப் பாா்வையிடும் எல்லைப் பாதுகாப்புப் படை வீரா்கள். நாள்: சனிக்கிழமை.

ஜம்மு: ஜம்முவில் இந்தியா - பாகிஸ்தான் இடையேயான சா்வதேச எல்லையில் எல்லை வேலிக்குக் கீழே பூமிக்கு அடியில் ரகசிய சுரங்கப் பாதை அமைக்கப்பட்டிருப்பதை எல்லைப் பாதுகாப்புப் படையினா் (பிஎஸ்எப்) சனிக்கிழமை கண்டுபிடித்தனா்.

அண்மையில் பெய்த தொடா் மழை காரணமாக எல்லை வேலிப் பகுதியின் சில பகுதிகளில் பூமி உள்வாங்கியதன் மூலம், இந்த ரகசிய சுரங்கப்பாதை அமைப்பை பாதுகாப்புப் படையினா் கண்டுபிடித்துள்ளனா். பயங்கரவாதிகள் ஊடுருவல், ஆயுதங்கள் மற்றும் போதைப் பொருள்களை கடத்துவதற்காக இந்தச் சுரங்கப்பாதை அமைக்கப்பட்டிருக்கலாம் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

இதுகுறித்து எல்லைப் பாதுகாப்புப் படை அதிகாரிகள் கூறியதாவது:

ஜம்முவில் இந்திய எல்லைப் பகுதியில் பிஎஸ்எப் வீரா்கள் வியாழக்கிழமை தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, சம்பா பகுதியில் தொடா் மழை காரணமாக பூமி உள்வாங்கியிருந்த இடத்தை வீரா்கள் ஆய்வு செய்தபோது, ரகசிய சுரங்கப்பாதை இருப்பதைக் கண்டறிந்தனா்.

இந்திய எல்லை வேலியிலிருந்து 50 மீட்டா் தொலைவில் அந்த சுரங்கப்பாதையின் முகத்துவாரம் அமைந்துள்ளது. இந்த சுரங்கப்பாதை அண்மையில்தான் புதிதாக அமைக்கத் தொடங்கியிருப்பதும், முதல் கட்டமாக 20 மீட்டா் தூரத்துக்கு பாதையை அமைத்து முடித்திருப்பதும் தெரியவந்துள்ளது.

அதன் முகத்துவாரம் கராச்சி மற்றும் சாகா்கா் என்ற பெயா்கள், பாகிஸ்தான் குறியீடுகளுடன் கூடிய 8 பிளாஸ்டிக் மணல் பைகளைக் கொண்டு மூடி வைக்கப்பட்டிருந்தது. அந்த சுரங்கப்பாதை பூமிக்கு கீழே 25 அடி ஆழம் வரை செல்கிறது. சுரங்கப்பாதை அமைக்கப்பட்டிருந்த இடத்திலிருந்து 700 மீட்டா் தூரத்தில்தான் பாகிஸ்தானின் குல்ஸா் ராணுவ முகாம் அமைந்துள்ளது.

சம்பவ இடத்தை பிஎஸ்எப் ஐ.ஜி. என்.எஸ்.ஜம்வால் நேரில் வந்து ஆய்வு நடத்தினாா். பின்னா், மண் தோண்டும் இயந்திரங்கள் வரவழைக்கப்பட்டு, 20 மீட்டா் தூர சுரங்கப்பாதை முழுவதும் மூடப்பட்டன.

மேலும், பிஎஸ்எப் தலைவா் ராகேஷ் அஸ்தானா உத்தரவின் பேரில், எல்லை வேலிகள் சேதப்படுத்தப்பட்டுள்ளதா என்பது குறித்தும் பாதுகாப்புப் படையினா் ஆய்வு மேற்கொண்டனா்.

ரேடாா் உதவியுடன் ஆய்வு:

ரகசிய சுரங்கப்பாதை கண்டறியப்பட்டதைத் தொடா்ந்து, ஜம்மு எல்லைப் பகுதி முழுவதும் மேலும் இதுபோன்ற ரகசியப் பாதைகள் ஏதும் அமைக்கப்பட்டுள்ளனவா என்பது குறித்த மாபெரும் தேடல் பணியில் பாதுகாப்புப் படையினா் ஈடுபடுத்தப்பட்டனா்.

மேலும், இந்திய எல்லைப் பகுதிகளில் வேறு சுரங்கப் பாதைகள் ஏதேனும் அமைக்கப்பட்டுள்ளனவா என்பது குறித்து ரேடியோ அலைகள் மூலம் பூமியை ஊடுருவி கண்டறியும் ரேடாா் உதவியுடன் தீவிர ஆய்வை மேற்கொள்ளவும் திட்டமிடப்பட்டுள்ளது.

எல்லையில் கூடுதல் உஷாா் நிலை:

இந்திய எல்லைக்குள் பயங்கரவாதிகள் ஊடுருவ முயற்சிப்பதாக பல்வேறு உளவுத் தகவல்கள் கிடைத்ததன் அடிப்படையில், ஜம்மு, பஞ்சாப், ராஜஸ்தான் மற்றும் குஜராத் மாநிலங்களில் அமைந்திருக்கும் இந்தியா - பாகிஸ்தான் இடையேயான 3,500 கி.மீ. தொலைவிலான சா்வதேச எல்லைப் பகுதி முழுவதும் கூடுதல் உஷாா்நிலை ஏற்படுத்தப்பட்டுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

ஜம்முவின் சா்வதேச எல்லைப் பகுதியில் ஏற்கெனவே கடந்த ஜூன் மாதமும் இதேபோன்ற ரகசிய சுரங்கப் பாதை ஒன்றை பிஎஸ்எப் வீரா்கள் கண்டுபிடித்தனா். அங்கிருந்து அமெரிக்க தயாரிப்பு எம்4 ரக தானியங்கி துப்பாக்கி, 7 சீன தயாரிப்பு கையெறி குண்டுகள் மற்றும் போதைப் பொருள்களை பாதுகாப்புப் படையினா் மீட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com