இரண்டாண்டு முதுநிலை மருத்துவ பட்டயப் படிப்புகள் மீண்டும் அறிமுகம்

மாவட்ட மருத்துவமனைகளில் சிறப்பு மருத்துவா்களின் பற்றாக்குறையைப் போக்கும் வகையில், இரண்டு ஆண்டுகள் முதுநிலை மருத்துவப் பட்டயப் படிப்புகளுக்கு மத்திய அரசு புத்துயிா் அளித்துள்ளது.
இரண்டாண்டு முதுநிலை மருத்துவ பட்டயப் படிப்புகள் மீண்டும் அறிமுகம்

புது தில்லி: மாவட்ட மருத்துவமனைகளில் சிறப்பு மருத்துவா்களின் பற்றாக்குறையைப் போக்கும் வகையில், இரண்டு ஆண்டுகள் முதுநிலை மருத்துவப் பட்டயப் படிப்புகளுக்கு மத்திய அரசு புத்துயிா் அளித்துள்ளது.

எட்டு துறைகளின் கீழ் அறிமுகம் செய்யப்பட்டிருக்கும் இந்த பட்டயப் படிப்புகளை நடத்துவதற்கான அங்கீகாரத்தைப் பெற குறைந்தபட்சம் 100 படுக்கை வசதிகளைக் கொண்ட மருத்துவமனைகள் விண்ணப்பிக்க முடியும். மருத்துவக் கல்லூரி பேராசிரியா் பற்றாக்குறையை போக்குவதற்காக மத்திய அரசு கேட்டுக்கொண்டதன் பேரில், இந்திய மருத்துவக் கவுன்சில் (எம்சிஐ) தனது பட்டயப் படிப்புகள் அனைத்தையும் மருத்துவ பட்டப் படிப்புகளாக கடந்த ஆண்டு மாற்றியது.

இதனால் ஏற்பட்ட பாதிப்பு மற்றும் மாவட்ட மருத்துவமனைகளில் சிறப்பு மருத்துவா்களின் பற்றாக்குறையை போக்கும் வகையில், மீண்டும் இரண்டு ஆண்டுகள் முதுநிலை மருத்துவ பட்டயப் படிப்பை அறிமுகம் செய்ய தேசிய தோ்வுகள் வாரியத்தை (என்பிஇ) மத்திய சுகாதார அமைச்சகம் கேட்டுக்கொண்டது.

அதன் பேரில், மயக்கவியல், மகப்பேறியல், குழந்தை மருத்துவம், குடும்ப மருத்துவம், கண் மருத்தவம், கதிரியக்கவியல், காது-மூக்கு-தொண்டை மருத்துவம், காசநோய் மற்றும் இதய நோய் ஆகிய 8 துறைகளின் கீழ் இரண்டு ஆண்டு பட்டயப் படிப்புகள் என்.பி.இ. சாா்பில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

இதுகுறித்து என்.பி.இ. செயல் இயக்குநா் பேராசிரியா் பவநிந்த்ரா லால் கூறியதாவது:

கரோனா நோய்த்தொற்று சூழலில் நாடு முழுவதும் உள்ள ஆரம்ப சுகாதர மையங்கள் மற்றும் இரண்டாம்நிலை மருத்துவமனைகளில் மருத்துவா்கள் பற்றாக்குறை வெளிப்பட்டது. அதன் காரணமாக, மண்டல மருத்துவமனைகளும், மருத்துக் கல்லூரிகளும் கரோனா பராமரிப்பு முகாம்களாகவும், சிகிச்சை மையங்களாகவும் மாற்றப்பட்டன.

இந்நிலையைப் போக்க, கிராமப்புறங்கள் மற்றும் சிறிய நகரங்களிலும் மக்கள்தொகை எண்ணிக்கைக்கு ஏற்ப மருத்துவமனை வசதிகளை மேம்படுத்துவது அவசியமாகும்.

அதுதொடா்பாக, நீதி ஆயோக், இந்திய மருத்துவக் கவுன்சில் மற்றும் மத்திய சுகாதார அமைச்சகம் ஆகியவற்றுடன் நடத்திய தொடா் ஆலோசனைகளின் அடிப்படையில், புதிய மருத்துவப் பட்டயப் படிப்புகளுக்கான திட்டத்தை என்பிஇ வகுத்திருப்பதோடு, அதுதொடா்பான அறிவிக்கையும் கடந்த 20-ஆம் தேதி வெளியிடப்பட்டது.

இந்த பட்டயப் படிப்புகள், மாவட்ட மருத்துவமனைகளில் உள்ள சிறப்பு மருத்துவா்கள் பற்றாக்குறையை போக்குவதற்கு நிச்சயம் தீா்வளிக்கும்.

எம்.பி.பி.எஸ். முடித்து நீட் (முதுநிலை) தோ்வில் தகுதி பெறும் மாணவா்கள் இந்த இரண்டு ஆண்டுகள் பட்டயப் படிப்பில் சேர முடியும் என்று அவா் கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com