காங்கிரஸின் கடைசித் தருணம்!

காங்கிரஸை பிடித்து உலுக்கும் குடும்ப விசுவாசம் எனும் தொற்று நோயால் மக்கள் செல்வாக்கு மிக்க தலைவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது.
காங்கிரஸின் கடைசித் தருணம்!

காங்கிரஸை பிடித்து உலுக்கும் குடும்ப விசுவாசம் எனும் தொற்று நோயால் மக்கள் செல்வாக்கு மிக்க தலைவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது.

அகில இந்திய காங்கிரஸின் காஷ்மீர் முகமாகவும், தேசிய அரசியலில் காங்கிரஸின் முக்கிய நபராகவும் அறியப்படும் குலாம் நபி ஆஸாத் கட்சிக்குள்ளும், வெளியேயும் தொடர்ந்து எழுப்பி வரும் கலகக் குரலால், அவரை ஓரங்கட்டுவதற்கான அசைவுகளை கட்சித் தலைமை தொடங்கியிருப்பது தேசிய அரசியலில் கூர்ந்து கவனிக்கப்பட்டு வருகிறது.

முன்னாள் முதல்வர்கள் குலாம் நபி ஆஸாத், பூபிந்தர்சிங் ஹூடா (ஹரியாணா), ராஜீந்தர் கௌர் (பஞ்சாப்),  வீரப்ப மொய்லி (கர்நாடகம்), பிருத்விராஜ் சவாண் (மகாராஷ்டிரம்), முன்னாள் மத்திய அமைச்சர்கள் கபில் சிபல், சசி தரூர், மணீஷ் திவாரி, ஜிதின் பிரசாதா,  பி.கே.குரியன், ரேணுகா செüத்ரி, அஜய்சிங், மிலிந்த் தேவ்ரா உள்பட 23 பேர் கட்சித் தலைமைக்கு எழுதிய கடிதம் கடந்த 24-இல் புது தில்லியில் நடைபெற்ற அகில இந்திய காங்கிரஸ் செயற்குழுக் கூட்டத்தில் விவாதத்தை உருவாக்கியது.

இந்தக் கடிதத்தை எழுதிய நிர்வாகிகளை, செயற்குழுக் கூட்டத்திலேயே சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, அவர்களது தீவிர ஆதரவாளர்கள் கடுமையாக விமர்சித்ததாக தகவல்கள் கசிந்தன.

கட்சியின் செயற்குழுக் கூட்டம் நடைபெற்ற மறுநாள், மத்திய அரசின் அவசரச் சட்டங்கள் குறித்து ஆராய்ந்து காங்கிரஸ் தலைமைக்கு கருத்து தெரிவிக்கும் குழு அறிவிக்கப்பட்டது. ஜெய்ராம் ரமேஷ் தலைமையிலான அந்தக் குழுவில் ப.சிதம்பரம் உள்பட 5 பேர் இடம் பெற்றனர். ஆனால், போர்க்கொடி தூக்கிய கபில் சிபல் உள்பட 23 பேரில் யாருக்கும் இடமில்லை.

குலாம் நபி ஆஸாத்தின் பதவி பறிக்கப்படவில்லை என்றாலும், அவருக்கான முக்கியத்துவத்தைக் குறைக்கும் வகையில், சில மாற்றங்களை கட்சித் தலைமை மேற்கொண்டது.

போர்க்கொடி தூக்கிய குலாம் நபி ஆஸாத் உள்ளிட்ட தலைவர்கள் சிலரின் மாநிலங்களவை எம்.பி. பதவி சில மாதங்களில் நிறைவடைவதால், தங்களுக்கு மீண்டும் எம்.பி. பதவி வேண்டும் என்ற எதிர்பார்ப்பில் உள்ளனர்.
ஆனால், மீண்டும் இவர்களுக்கு எம்.பி. பதவியோ, கட்சியில் முக்கியப் பதவியோ கிடைக்குமா என்பது கேள்விக்குறிதான். ஏனெனில், 23 தலைவர்களில் பூபிந்தர் சிங் ஹூடா, குலாம் நபி ஆஸாத் தவிர மற்றவர்களுக்கு மக்கள் செல்வாக்கு இல்லை.

கடந்த 1973-இல் அன்றைய காஷ்மீர் மாநிலத்தில் பலீஷா பகுதியில் வட்டார காங்கிரஸ் செயலராக தனது அரசியல் பயணத்தைத் தொடங்கி,   இரண்டு ஆண்டுகளிலேயே அந்த மாநில இளைஞர் காங்கிரஸ் தலைவராகவும், இந்திரா காந்தி குடும்பத்துடன் ஏற்பட்ட நெருக்கத்தால், அகில இந்திய இளைஞர் காங்கிரஸ் தலைவராகவும் தேசிய அரசியலில் கால் பதித்து, ராஜீவ் காந்தி, சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோருக்கு நெருக்கமாக இருக்கும் குலாம் நபி ஆஸாத்தை கட்சியிலிருந்து ஓரங்கட்டுவது அவ்வளவு சுலபமல்ல.

தனது 40 ஆண்டு கால அரசியல் அனுபவத்தால், அகில இந்திய காங்கிரஸ் கட்சியில் முக்கியத் தூணாகவும்,  தவிர்க்க முடியாத சக்தியாகவும் திகழ்கிறார் குலாம் நபி ஆஸாத். அவர், கட்சித் தலைமைக்கு எதிராக எழுப்பி வரும் கேள்விக் கணைகள், காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரையுள்ள காங்கிரஸ் தொண்டர்களின் மனசாட்சியைத் தட்டி எழுப்பியுள்ளது. தேசிய அரசியலில் நேரு, இந்திரா காந்தி, ராஜீவ் காந்திக்கு பிறகு, மிகப் பெரிய தலைவராக பாஜகவின் நரேந்திர மோடி உயர்ந்து நிற்கும் நிலையில், அவரை எதிர்கொள்ள காங்கிரஸில் வலுவான தலைமை இல்லையே என்ற உணர்வு உண்மையான காங்கிரஸ் தொண்டர்கள் மனதில் எழுந்துள்ளது.

மக்களவைத் தேர்தலுக்கு முன்பு நடைபெற்ற  மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் மாநிலங்களின் சட்டப்பேரவைத் தேர்தல்களில் முதல்வர் வேட்பாளர் இல்லாமல் களம் இறங்கிய ராகுல் காந்தி தலைமையிலான காங்கிரஸ் பாஜகவை வீழ்த்தியது. ஆனால், மக்களவைத் தேர்தலில் ஏற்பட்ட தோல்வியால், மன வலிமை இழந்து தலைமைப் பதவியை உதறியது மிகப்பெரிய தவறு என்பதை ராகுல் காந்திக்கு காலம் உணர்த்தியிருக்கிறது.

ஹரியாணா, மகாராஷ்டிர மாநிலங்களின் சட்டப்பேரவைத் தேர்தல்களில் தொங்கு பேரவை அமைய காங்கிரஸின் வலுவான வாக்கு வங்கிதான் காரணம். ஹரியாணாவில் செல்வாக்கு மிக்க பூபிந்திர சிங் ஹூடா தலைமையிலான காங்கிரஸ், பாஜகவுக்கு வலுவான போட்டியை ஏற்படுத்தியது.

அந்த மாநிலத்தில் மக்களவைத் தேர்தலில் மோடி தலைமைக்கு 58.02 சதவீதம் கிடைத்த வாக்கு, சட்டப்பேரவைத் தேர்தலில் 36.49 சதவீதமாகச் சரிந்தது. காங்கிரஸூக்கு 28.42 சதவீதம் வாக்குகள் கிடைத்தன.

ராகுல் காந்தி ஒதுங்காமல் மனவலிமையுடன் பிரசாரம் செய்திருந்தால், அங்கு ஆட்சியைப் பிடித்திருக்கலாம். மகாராஷ்டிரத்தில் கூடுதல் தொகுதிகளைக் கைப்பற்றியிருக்கலாம்.

வெற்றியோ, தோல்வியோ அனுபவம்தான் படிப்பினை என்பதைப் புரிந்துகொண்டு, தவறுகளைத் திருத்தி தொடர்ந்து களமாட வேண்டுமே தவிர, ஓடி ஒளியக் கூடாது என்பதை இந்த இரு மாநிலங்களின் தேர்தல் முடிவுகள் ராகுல் காந்திக்கு உணர்த்தியிருக்கும்.

ஆளும்கட்சியான பாஜக, மோடி எனும் வலுவான தலைமையுடன் நாடு முழுவதும் அசுர பலத்துடன் வளர்ந்து நிற்கும்போது, மாலுமி இல்லாத கப்பலாக காங்கிரûஸ நட்டாற்றில் நிறுத்த ராகுல் காந்தியே காரணமாக இருப்பது எப்படிச் சரியாக இருக்கும்?

காங்கிரஸை கட்டிக்காக்கும் சக்தியாக இந்திரா காந்தி குடும்பம்தான் இருக்கிறது. அந்தக் குடும்பத்திலிருந்து ஒருவர் கட்சித் தலைமைப் பதவியை வகித்தால் காங்கிரஸ் வலுவாக இருக்கும் என்பதில் குலாம் நபி ஆஸாத் உள்ளிட்ட காங்கிரஸ் நிர்வாகிகள், தொண்டர்களிடம் மாற்றுக் கருத்திருக்க வாய்ப்பில்லை.

ஆனால், அதே குடும்பத்தைச் சேர்ந்த ராகுல் காந்தி கட்சித் தலைமைப் பதவிக்கு வராமலும், வேறு யாரையும் வரவிடாமலும் உடல் நலம் குன்றியிருக்கும் சோனியா காந்தியைத் தொடர்ந்து இடைக்காலத் தலைவராக நீடிக்கச் செய்வதுதான் காங்கிரஸில் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது.

தேர்தல் அடிப்படையில்தான் தலைவர் தேர்வு செய்யப்படுவார் என அகில இந்திய காங்கிரஸ் தலைமை தனது அதிகாரபூர்வ சுட்டுரைப் பக்கத்தில் அறிவித்துள்ளது வரவேற்கத்தக்கது. எனினும், ராகுல் காந்தியோ,  அவரால் முன்மொழியப்படுபவரோதான் பதவிக்குத் தேர்வு செய்யப்படுவார் என்பதை யாராலும் தடுத்து நிறுத்திவிட முடியாது.

கீழ்நிலைப் பொறுப்புகள் முதல் தேர்தல் நடத்தி உள்கட்சி ஜனநாயகத்தை நிலைநாட்டினால் மட்டுமே, வருகிற 2024 மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் வலுவான எதிர்க்கட்சியாக உருவெடுக்க முடியும்.

இனியும் கட்சித் தலைமை விழித்துக் கொள்ளாவிடில், காங்கிரஸின் மகாராஷ்டிர முகமாக இருந்த சரத் பவார், மேற்கு வங்கத்தின் மம்தா பானர்ஜி, வடகிழக்கு மாநிலங்களின் முகமாக இருந்த பி.ஏ.சங்மா, பிகாரின் தாரிக் அன்வர், ஆந்திரத்தின் ஜகன் மோகன் ரெட்டி, புதுவையின் என்.ரங்கசாமி, மத்திய பிரதேசத்தின் 
ஜோதிராதித்ய சிந்தியா ஆகியோர் வரிசையில் காஷ்மீர் முகமான குலாம் நபி ஆஸாத்தையும் காங்கிரஸ் இழக்க வேண்டிய நிலை உருவாகும்.

ஏற்கெனவே மக்கள் செல்வாக்கு மிகுந்த முகங்களை காங்கிரஸ் இழந்ததால், பல மாநிலங்களிலும், தேசிய அளவிலும் மிகப் பெரிய வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது. தொடர் வீழ்ச்சியை காங்கிரஸ் சந்தித்தால், நாட்டில் வலுவான மாற்றுக் கட்சி, எதிர்க்கட்சி இல்லாத நிலை உருவாகும். வலுவான எதிர்க்கட்சி இல்லாத எந்த ஜனநாயக நாடும் ஆரோக்கியமான வளர்ச்சியைப் பெற முடியாது.

உள்கட்சித் தேர்தல் மூலம் மக்கள் செல்வாக்கு உள்ளவர்களைப் பதவியில் அமர்த்தி, கட்சியை பலப்படுத்துவதா அல்லது குடும்ப விசுவாசிகளுக்கு மட்டுமே பதவியைக் கொடுத்து அழகு பார்த்து, கட்சியை பலவீனப்படுத்துவதா என்பதை இந்திரா காந்தி குடும்ப வாரிசுகள் உறுதி செய்ய வேண்டிய கடைசித் தருணமிது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com