இயற்கையைப் பாதுகாக்க வேண்டும்: மோகன் பாகவத்

இயற்கையை நுகர்வதோடு மட்டும் இருக்காமல் அதனை பராமரித்து பாதுகாக்கவும் வேண்டும் என ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கத்தின் (ஆர்எஸ்எஸ்) தலைவர் மோகன் பாகவத் வலியுறுத்தினார்.
மோகன் பாகவத்
மோகன் பாகவத்


நாதபுரி: இயற்கையை நுகர்வதோடு மட்டும் இருக்காமல் அதனை பராமரித்து பாதுகாக்கவும் வேண்டும் என ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கத்தின் (ஆர்எஸ்எஸ்) தலைவர் மோகன் பாகவத் வலியுறுத்தினார்.

"பிரகிருதி வந்தனா' (இயற்கையை வணங்குவோம்) கொண்டாட்டத்தை ஒட்டி ஹிந்து ஆன்மிக சேவா அறக்கட்டளை ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் காணொலிக் காட்சி வாயிலாகப் பங்கேற்று அவர் பேசியதாவது: 

இயற்கை தங்கள் நுகர்வுக்கானது என மக்கள் நம்புகின்றனர். ஆனால் இயற்கைக்குரிய எந்தப் பொறுப்பையும் ஏற்றுக்கொள்ள மறுக்கிறார்கள். கடந்த 200 முதல் 250 ஆண்டுகளாக நாம் இப்படிதான் வாழ்ந்து வருகிறோம். அதன் தாக்கம் தற்போது வெளிப்படத் தொடங்கியுள்ளது. இது தொடர்ந்தால் நம்முடன் உலகமும் அழிந்துபோய்விடும். 

இப்பிரச்னைகளுக்குத் தீர்வு காணவே சுற்றுச்சூழல் தினம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. படைப்பின் உண்மையை நமது முன்னோர் முழுவதுமாக உணர்ந்திருந்தனர். நாம் இயற்கையின் ஓர் அங்கம். எனவே, இயற்கையைப் பாதுகாப்பது மனிதர்களின் கடமை என்பதையும் உணர்ந்திருந்தனர்.

அனைத்துக்கும் மரியாதை செலுத்துவதுதான் நமது வாழ்க்கை முறை. ஆனால் உலகத்தாரின் வாழ்க்கை முறைகளால் நாம் தவறாக வழிநடத்தப்படுகிறோம். எனவே சுற்றுச்சூழல் தினத்தை கடைப்பிடிப்பதன் மூலம் நாம் இவற்றை நினைவுகூர வேண்டும்.

நாக பஞ்சமி, கோவர்தன் பூஜை, துளசி திருமணம் போன்றவற்றை புதுமையுடன் கொண்டாட வேண்டும். இதன்மூலம் நாம் இயற்கையின் அங்கம் என்பதையும், இயற்கையை நுகர்வதோடு மட்டுமல்லாமல் அதனைப் பாதுகாக்கவும் வேண்டும் என்பதையும் புதிய தலைமுறையினர் கற்றுக்கொள்வார்கள்.

வருங்கால தலைமுறையினர் இந்த முறையில் சிந்தித்தால் மட்டுமே கடந்த 300 முதல் 350 ஆண்டுகளில் நாம் இழைத்த தீங்குகளுக்கு உரிய பரிகாரம் செய்ய முடியும். மேலும் அடுத்த 100 முதல் 200 ஆண்டுகளுக்கு உலகமும், மனிதர்களும் பாதுகாப்பாக வாழ முடியும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com