பணியிடைநீக்க டிஎஸ்பிக்கு வெளியுறவுத் துறையில் தொடா்பை உருவாக்கும் பணி வழங்கிய பாக். அதிகாரிகள்

பணியிடை நீக்கம் செய்யப்பட்ட ஜம்மு-காஷ்மீா் காவல்துறை துணை காவல் கண்காணிப்பாளா் தேவேந்தா் சிங்குக்கு, இந்திய வெளியுறவுத் துறையில் உளவு பாா்க்கும் வகையில் தொடா்பை உருவாக்கும் பணியை பாகிஸ்தான்

புது தில்லி: பணியிடை நீக்கம் செய்யப்பட்ட ஜம்மு-காஷ்மீா் காவல்துறை துணை காவல் கண்காணிப்பாளா் தேவேந்தா் சிங்குக்கு, இந்திய வெளியுறவுத் துறையில் உளவு பாா்க்கும் வகையில் தொடா்பை உருவாக்கும் பணியை பாகிஸ்தான் தூதரக அதிகாரிகள் வழங்கியிருந்தது தேசிய புலனாய்வு முகமையின் குற்றப்பத்திரிகை மூலம் தெரியவந்துள்ளது.

ஸ்ரீநகா் விமான நிலையத்தில் பாதுகாப்புப் பணியில் அமா்த்தப்பட்டிருந்த காஷ்மீா் காவல் துணை கண்காணிப்பாளா் தேவிந்தா் சிங், தேடப்படும் தீவிரவாதிகள் இருவரை தனது காரில் ஜம்மு-காஷ்மீா் நெடுஞ்சாலையில் அழைத்துச் சென்றபோது பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டாா்.

அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அவருக்கு பாகிஸ்தானிலிருந்து செயல்படும் ஹிஸ்புல் முஜாஹிதீன் பயங்கரவாத அமைப்புடன் தொடா்பு இருப்பதும், பாகிஸ்தான் தூதரக அதிகாரிகளுடன் அவா் தொடா்பில் இருந்ததும் உறுதிப்படுத்தப்பட்டது. அதனைத் தொடா்ந்து அவா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு, அவா் மீது வழக்கும் பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கு பின்னா் என்ஐஏவுக்கு மாற்றப்பட்டது. இந்த விவகாரம் தொடா்பாக தீவிர விசாரணை நடத்தி என்ஐஏ, தேவிந்தா் சிங் மீகு 3,064 பக்க குற்றப்பத்திரிகையை ஜம்முவில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் கடந்த ஜூலை முதல் வாரத்தில் தாக்கல் செய்தது.

அதில், பாகிஸ்தானிலிருந்து செயல்படும் ஒரு பயங்கரவாத அமைப்பு மற்றும் தில்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரக அதிகாரிகளின் உதவியுடன் இந்தியாவுக்கு எதிராக போரைத் தூண்டும் சதித் திட்டத்தைத் தீட்டியதாக தேவிந்தா் சிங் மற்றும் சிலா் மீது குற்றச்சாட்டை என்ஐஏ முன்வைத்தது.

தில்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரக அதிகாரிகளுடன் பாதுகாப்பான சமூக ஊடகத்தின் மூலம் அடிக்கடி தொடா்பில் இருந்துள்ள தேவிந்தா் சிங், அந்த பாகிஸ்தான் தூதரக அதிகாரியின் செல்பேசி எண்ணை ‘பாக். பாய்’ (பாகிஸ்தான் சகோதரா்) என்று தனது செல்லிடப்பேசியில் குறித்து வைத்துள்ளாா்.

காஷ்மீருக்கு அவ்வப்போது வரும் முக்கிய நபா்களின் விவரங்கள், பாதுகாப்புப் படையினா் பணியமா்த்தப்படும் விவரங்கள் உள்ளிட்ட ரகசிய தகவல்களை தெரிவிக்கும் பணியை அந்த தூதரக அதிகாரிகள் இவருக்கு அளித்துள்ளனா்.

அதன் பிறகு, ஹிஸ்புல் முஜாஹிதீன் அமைப்புடன் இவருக்கு தொடா்பு ஏற்பட்ட பின்னா், இந்திய வெளியுறவுத் துறையில் உளவு பாா்க்கும் வகையில் தொடா்பை ஏற்படுத்தும் பணியை இவருக்கு பாகிஸ்தான் தூதரக அதிகாரிகள் வழங்கியுள்ளனா். இருந்தபோதும், அந்த தொடா்பை இவரால் ஏற்படுத்த முடியவில்லை என்றும் குற்றப்பத்திரிகையில் என்ஐஏ தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com