
முகக்கவசம் அணியாதோருக்கு அபராதம்: தில்லியில் இதுவரை ரூ.44 கோடி வசூல் (கோப்புப்படம்)
தில்லியில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வரும் நிலையில், இதுவரை ரூ.44 கோடி வசூலாகியுள்ளதாக உயர்நீதிமன்றத்தில் தில்லி அரசு தெரிவித்துள்ளது.
தில்லியில் மூன்றாவது முறையாக கரோனா வைரஸ் தொற்று பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது.
கரோனா பரவலைக் கட்டுப்படுத்த தில்லி அரசு சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வரும் நிலையில், முகக்கவசம் அணியாதவர்களுக்கு ரூ.2 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து பொது இடங்களில் முகக்கவசம் அணியாத நபர்களுக்கு தில்லி அரசு மற்றும் காவல்துறை சார்பில் அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.
கரோனா விதிமுறைகளை மீறுபவர்களுக்கு அபராதம் விதிக்க தில்லியிலுள்ள 11 மாவட்டங்களிலும் 180க்கும் அதிகமான குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் அரசு சார்பில் 2 லட்சம் அபராத ரசீதுகளுக்கு ரூ. 17 கோடி வசூல் செய்யப்பட்டுள்ளதாக தில்லி உயர்நீதிமன்றத்தில் அரசு தெரிவித்துள்ளது. இதேபோன்று காவல்துறையினர் சார்பில் 5 லட்சம் அபராத ரசீதுகளுக்கு ரூ.27 கோடி வசூலிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.
மேலும், தில்லியில் கரோனா பரவலை மதிப்பீடு செய்து, இரவு பொதுமுடக்கத்தை நீக்குவது குறித்து ஆலோசித்து வருவதாகவும் தெரிவித்துள்ளது.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...